இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Wednesday, August 28, 2024

ஆதாம் ஏவாள் புறக்கணித்த நித்தியஜீவன்

 'ஆதவன்' செப்டம்பர் 05, 2024. வியாழக்கிழமை   வேதாகமத் தியானம் - எண்:- 1,305


"ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்." ( வெளிப்படுத்தின விசேஷம் 22 : 14 ) '

ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின சுவிசேஷம்வரை கோர்வையாக நாம் பார்ப்போமானால் மனிதர்கள் தன்னைப்போல பரிசுத்தமாக வாழ்ந்து நித்தியஜீவனுக்குள் பிரவேசிக்க தேவன் தொடர்ந்து எடுத்தச்  செயல்பாடுகளை நாம் பார்க்கலாம்.  ஆதியாகமத்தில் ஜீவவிருட்சமாக  நித்தியஜீவன் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தேவனாகிய கர்த்தர், "...தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணினார்." ( ஆதியாகமம் 2 : 9 ) ஆனாலும் அவர் நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியை உண்ண மட்டுமே தடைசெய்திருந்தார். தோட்டத்தின் நடுவிலே இருந்த ஜீவவிருட்சத்தைக்  குறித்து அவர் எதுவும் சொல்லவில்லை. ஆனால் ஆதாமும் ஏவாளும் ஜீவவிருட்சத்தை விரும்பவுமில்லை அதனை அடைய விரும்பவுமில்லை. ஆனால் தேவன் தடைசெய்த மரத்தின் கனியைத் தின்று தேவனுக்கு எதிராகப் பாவம் செய்தனர். 

ஜீவனுக்குள் பிரவேசிக்க பரிசுத்தம் வேண்டும். "தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்." ( வெளிப்படுத்தின விசேஷம் 21 : 27 ) என்று நாம் வாசிக்கின்றோம்.

தேவ கட்டளையை மீறியபோது ஆதாமும் ஏவாளும் உண்மையில்லாதவர்களாக மாறிவிட்டனர். எனவே, அதுவரை பாவம் செய்யாமல் இருந்த ஆதாமுக்கும் ஏவாளுக்கும் திறந்திருந்த ஜீவவிருட்சத்துக்குச் செல்லும் வாசல் அடைக்கப்பட்டது. இதனை,  "அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போகும் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார்." ( ஆதியாகமம் 3 : 24 ) என்று வாசிக்கின்றோம். 

ஆதாமும் ஏவாளும் இழந்துபோன இந்த பாக்கியத்தை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம் ஒவ்வொருவருக்கும் வழங்க விரும்புகின்றார். அதற்கு நம்மைத் தகுதியுள்ளவர்களாக்கவே அவர் பாடுபட்டு மரித்து நித்திய மீட்பினை உண்டுபண்ணினார்.  ஆம், அவரே வாசல். அவர் வழியாகவே நாம் நித்திய ஜீவனுக்குள் நுழைய முடியும். இதனையே, "ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்." என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

ஆம் அன்பானவர்களே,  கிறிஸ்து தனது சுய இரத்தத்தால் உண்டாக்கிய இந்த மீட்பின் பாதையினைப் புறக்கணிக்காமல் வாழ்வோம். ஆதாம் ஏவாள் சுவைக்க மறுத்த ஜீவவிருட்சத்தின் கனியினை உண்டு மகிழ்வோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

No comments: