இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Thursday, August 08, 2024

திருவசனமாகிய ஞானப்பால்

 'ஆதவன்' 💚ஆகஸ்ட் 17, 2025. 💚சனிக்கிழமை 💚     வேதாகமத் தியானம் - எண்:- 1,286   


"நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்." ( 1 பேதுரு 2 : 3 )

சிறு குழந்தைகள் பாலைத்தவிர வேறு எதனையும் உணவாக உட்கொள்வதில்லை. ஆனால் அப்படிப் பாலை உட்கொண்டுதான் அவை வளர்கின்றன. தேவனை அறியும் அறிவில் வளருவதும் இப்படித்தான். நாம் ஆவிக்குரிய வாழ்வில் வளரவேண்டுமானால் தேவனுடைய வார்த்தைகளை நாளும் உட்கொள்பவர்களாக இருக்கவேண்டும். 

"புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்." என்கின்றார் அப்போஸ்தலராகிய பேதுரு. திருவசனத்தை களங்கமில்லாத ஞானப்பால் என்று குறிப்பிடுகின்றார். வசனம்தான் பாலேத்தவிர வசனத்துக்கு அளிக்கப்படும் எல்லா விளக்கங்களும் பால் என்று நாம் கொள்ளமுடியாது. 

ஆனால் இன்று திருவசனமாகிய இந்த ஞானப்பாலினை விசுவாசிகள் உட்கொள்ளாதபடி பல உண்மையில்லாத ஊழியர்களைச் சாத்தான் பயன்படுத்துகின்றான்.  எனவே அவர்கள் தேவ வார்த்தைகள் கூறும் மெய்யான பொருளை மக்களுக்குப் போதிக்காமல் அனைத்து வேத வசனங்களுக்கும் உலக ஆசீர்வாத பொருள்கொண்டு விசுவாசிகளை வஞ்சித்து வைத்துள்ளார்கள்.

ஆதவன் தினசரி தியானத்தில் நான் அடிக்கடி வலியுறுத்துவது என்னவென்றால் ஆலய ஆராதனைகளில் கலந்துகொண்டு அங்கு அளிக்கப்படும் செய்திகளை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டாம் என்பதுதான். ஆதவன் செய்திகளைக்கூட நீங்கள் அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று நான் கூறுவதில்லை. யார் என்ன சொன்னாலும் அதனை வேத வெளிச்சத்தில் ஆவியானவரின் துணையோடு ஆராய்ந்துபாருங்கள். தேவையில்லாத, வேதத்துக்குப் புறம்பான போதனைகளை யார் சொன்னாலும் அவைகளை விட்டு விலகுங்கள்.  

இன்று அதிக கூட்டம் சேர்க்கும் பிரபல ஊழியர்கள் பலரும் வேத வசனங்களுக்கு மெய்யான பொருளைக் கூறுவதுமில்லை மக்களை சத்தியத்துக்கு நேராக நடத்துவதுமில்லை. எனவே அத்தகைய ஊழியர்களைப் பின்பற்றும் பலரும் ஆவிக்குரிய எந்த வளர்ச்சியுமின்றி சாதாரண உலக மனிதர்களைப்போலவே இருக்கின்றனர். 

திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருக்கும் மனிதர்கள் இயல்பிலேயே சத்தியத்தைத் தேடுபவர்களாக இருப்பார்கள்.  அவர்கள் ஆவிக்குரிய வாழ்வில்  வளருவார்கள். மற்றவர்களோ, எதெற்கெடுத்தாலும், "எங்கள் பாஸ்டர் சொன்னார்.... கன்வென்சன் கூட்டத்தில் பேசக் கேட்டேன் .." என்று கூறிக்கொண்டு தேவனுக்கும் தங்களுக்கும் தனிப்பட்டத் தொடர்பின்றி வாழ்பவர்களாக இருப்பார்கள். 

ஆம் அன்பானவர்களே, நாம் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையுள்ளவர்களாக இருக்கவேண்டியது அவசியம். அப்போதுதான்  வேதாகமத்தை நாம் வாசிக்கும்போது ஆவியானவர் நம்மோடு பேசுவதையும் பல ஆவிக்குரிய சத்தியங்களை நமக்கு உணர்த்துவதையும் நாம் அனுபவிக்கமுடியும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

No comments: