Thursday, August 01, 2024

இரண்டு சாட்சிகள்

 ✉'ஆதவன்' ஆகஸ்ட் 08, 2024. வியாழக்கிழமை          வேதாகமத் தியானம் - எண்:- 1,277                                       


 

"நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சி கொடுக்கிறார்." ( ரோமர் 8 : 16 )

இந்தக் காலத்திலும்கூட எதற்கும் சட்டபூர்வமாக இரண்டு சாட்சிகள் தேவைப்படுகின்றன. ஒரு பத்திரம் பதிவுசெய்யும்போதுகூட இறுதியில் சாட்சிகள் என்று இரண்டுபேர் கையெழுத்திடுவார்கள். திருமண ஒப்பந்தத்திலும்கூட  மணமகன் மணமகள் கையொப்பமிட்ட பின்னர் இரண்டு சாட்சிகள் இறுதியில் கையொப்பமிடுவார்கள். இதற்குப் பொருள் என்னவென்றால், இங்கு கூறப்பட்டுள்ளது அல்லது நடந்தது அனைத்தையும் நாங்கள் பார்த்தோம். அதற்கு நாங்கள்தான் சாட்சிகள் என்று பொருள். 

இப்படியே, நாம் தேவனுடைய பிள்ளைகளாய்த்தான்  இருக்கிறோம் என்பதற்கு இரண்டு சாட்சிகளை அப்போஸ்தலரான பவுல் குறிப்பிடுகின்றார். ஒன்று ஆவியானவர் இன்னொன்று  நம்முடைய சொந்த ஆவி என்று குறிப்பிடுகின்றார். 

நாம் தேவனுக்கேற்ற பிள்ளைகளாக நடக்கின்றோமா என்பதனை ஆவியானவர் நமக்கு முதலில் உணர்த்துகின்றார். நம்மைத் திருத்திக்கொள்ள வழி காட்டுகின்றார். அப்படி நாம் நம்மைத் திருத்திக்கொள்ளாவிட்டால் அவர் துக்கமடைகின்றார். இதனை அப்போஸ்தலரான பவுல், "அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்." ( எபேசியர் 4 : 30 ) என்று குறிப்பிடுகின்றார். 

ஆவியானவரின் உணர்த்துதலின்படி நாம் நம்மைத் திருத்திக்கொள்ளும்போது  நமது ஆவியும் குற்ற உணர்ச்சி இல்லாமல் நாம் தேவனுடைய பிள்ளைகளாய்த்தான் இருக்கின்றோம் என்பதனை உறுதி செய்யும். இப்படி இரண்டு சாட்சிகளும் சரியாக இருக்குமானால் நாம் மெய்யாலுமே தேவனுக்கேற்றவர்கள் ஆகின்றோம்; அவரது பிள்ளைகளாகின்றோம். 

இதனையே இதற்கு அடுத்த வசனத்தில் அப்போஸ்தலரான பவுல் குறிப்பிடுகிற்றார். "நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்." ( ரோமர் 8 : 17 )

அதாவது நாம் அவரது பிள்ளைகளாகி ஒரு மகன் அல்லது மகள் எப்படித் தகப்பனது சொத்துக்களில் உரிமை பெறுவார்களோ அதுபோன்ற உரிமையினைப் பெறுவோம். அப்படி உரிமைப்பேறு கிடைக்க நமக்கு மேற்படி இரண்டு சாட்சிகளும் தேவைப்படுகின்றன. நமக்கு இந்த இரண்டு சாட்சிகளும் உண்டுமா என்பதனை நாம் நிதானித்துக்கொள்வோம்.

ஆவியானவர் நம்மைக்குறித்து என்னச் சொல்லுவார்? நமது சொந்த ஆவி நம்மைக் குறித்து என்ன உணர்த்துகின்றது?

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்           

No comments: