இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Monday, August 05, 2024

நீதிக்கு அடிமையாக ஒப்புக்கொடுங்கள்

 ✉'ஆதவன்' 💚ஆகஸ்ட் 12, 2024. 💚திங்கள்கிழமை 💚   வேதாகமத் தியானம் - எண்:- 1,281        


"மரணத்துக்கேதுவான பாவத்துக்கானாலும், நீதிக்கேதுவான கீழ்ப்படிதலுக்கானாலும், எதற்குக் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா?" ( ரோமர் 6 : 16 )

இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான  பவுல் இரண்டு வித  அடிமைத்தனத்தைக் குறித்துக் கூறுகின்றார்.  ஒன்று, மரணத்துக்கு ஏதுவாக நம்மைச் சிறைப்படுத்தும் பாவ   அடிமைத்தனம். இன்னொன்று, நீதிகேதுவான தேவனுக்கு கீழ்ப்படியும் அடிமைத்தனம்.   

இந்த இரண்டில் எதற்கு நம்மை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கின்றோமோ அதற்கே நாம் அடிமைகளாக  .இருப்போம். நாங்கள் யாருக்கும் அடிமைகள் அல்ல என்று   வாதிட்ட யூதர்களைப்பார்த்து இயேசு  கிறிஸ்து கூறினார், "பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( யோவான் 8 : 34 ) என்று. 

பாவம் நம்மை அடிமைப்படுத்துவது  மட்டுமல்ல அது ஆத்தும மரணத்தையும் ஏற்படுத்துகின்றது. இதனையே நாம் "பாவத்தின் சம்பளம் மரணம்" (ரோமர் 6:23) என்று வாசிக்கின்றோம்.    ஆம் அன்பானவர்களே, இதனாலேயே இன்றைய தியான வசனம் நமக்கு இந்த இரண்டு அடிமைத்தனத்தையும் எடுத்துக்கூறி வாழ்க்கையில் நாம் நமக்கேற்றதை தேர்வு செய்யக் கூறுகின்றது. இந்த இரண்டில் எதற்குக் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா? என்று கேள்வியும் எழுப்புகின்றது. 

மட்டுமல்ல, அப்போஸ்தலராகிய பவுல் நாம் எதனைத் தேர்வுசெய்ய வேண்டும் என்றும் ஆலோசனைக் கூறுகின்றார். ஆம்,  "அக்கிரமத்தை நடப்பிக்கும்படி முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமையாக ஒப்புக்கொடுங்கள்." ( ரோமர் 6 : 19 ) என்கின்றார். 

ஆலயங்களுக்குச் சென்று ஆராதனை செய்யுமுன் நாம் நம்மையே சீர்தூக்கிப் பார்த்துக்கொண்டு ஆராதனைகளில் கலந்துகொள்ளவேண்டும். பாவத்துக்கு அடிமைகளாக இருந்துகொண்டு ஆராதனையும் செய்வோமானால் அது அர்த்தமற்ற ஆராதனையாகவே இருக்கும். நீதிக்கேதுவான தேவனுக்குக் கீழ்ப்படிதலுள்ளவர்களாக நம்மைத் தேவனுக்கு அடிமைகளாக்கி ஆலய ஆராதனைகளில் கலந்துகொள்வோம். 

ஆம், இப்பொழுது "பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமையாக ஒப்புக்கொடுங்கள்." 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

No comments: