இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Saturday, August 31, 2024

மாறுபாடுள்ளவனுக்கு அவர் மாறுபாடுள்ளவர்

 'ஆதவன்' செப்டம்பர் 08, 2024. ஞாயிற்றுக்கிழமை       வேதாகமத் தியானம் - எண்:- 1,308


"தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்; புனிதனுக்கு நீர் புனிதராகவும், மாறுபாடுள்ளவனுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர்." ( சங்கீதம் 18 : 25, 26 ) 

கடவுளை நாம் எப்படிப் பார்க்கின்றோமோ அப்படியே அவர் நமக்குத் தோன்றுவார். பணத்தை அடிப்டையாகக் கொண்டு தேவ ஆசீர்வாதத்தினைத் தேடுபவர்களுக்கு அவர் வெறும் பணம் தரும் தெய்வமாகவும் ஆத்தும இரட்சிப்பைத் தேடுபவர்களுக்கு அவர் ஆத்தும இரட்சகராகவும் தோன்றுவார். 

திருடச் செல்பவனும் தனது மனதில் தேவனைத் தன்னைப்போல ஒரு திருடனாக எண்ணுவதால் திருடும்போது யாரும் தன்னைக் கண்டு பிடித்துவிடக்கூடாது என்றுதான் வேண்டுதல் செய்கின்றான். இப்படித்  தன்னை ஒருவன் எப்படிப்பட்டவராக எண்ணுகின்றானோ அப்படியே அவனுக்குத் தோன்றுவார். ஆம்,   மாறுபாடுள்ளவனுக்கு  அவர் மாறுபடுகிறவராகத்  தோன்றுவார். எனவே தான் தேவனைத் துன்மார்க்கர்கள் எளிதில் கடவுளை அடையாளம் கண்டுகொள்ள முடிவதில்லை. இந்த உலகத்தில் ஊழல் செய்யும் ஊழல்வாதிகள், எத்தர்கள், துன்மார்க்க அரசியல்வாதிகள் பலரும் பக்திக் செயல்பாடுகளிலும் அதிகம் ஈடுபட்டுள்ளனர். காரணம், அவர்கள் பார்வைக்கு கடவுளும் அவர்களைப் போன்றவர்தான்.  

இன்றைய தியான வசனம் கூறுகின்றது, "தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்; புனிதனுக்கு நீர் புனிதராகவும் தோன்றுவீர்"  என்று.  ஆம் அன்பானவர்களே, நாம் தேவனது தயவு, உத்தமம், பரிசுத்தம் அல்லது புனிதம் இவற்றை அடையவேண்டுமானால் தேவனை நாம் அப்படிப்பட்டவராக எண்ணி வாழவேண்டியது அவசியம். 

இன்று கிறிஸ்தவ ஊழியர்கள் பலரும் தேவனை உலக ஆசீர்வாதங்களைத் தருபவராகவே மக்களுக்கு எடுத்துச் சொல்கின்றனர். எனவே அவர்களுக்கு அவர் அந்த மட்டுமே வெளிப்படுவார். நித்தியஜீவனை அளிப்பவராக தேவனைப் பார்பவர்களுக்கோ நித்திய ஜீவனை அளிப்பார். 

ஆம், "தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார். சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச்செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார். சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிரகோபாக்கினை வரும்." ( ரோமர் 2 : 6 - 8 ) என்று வாசிக்கின்றோம். 

தேவன் தன்னை எவரிடமும் வலுக்கட்டாயமாகத் திணிப்பது கிடையாது. எனவே அவரவர் குணங்களுக்கேற்ப தயவுள்ளவனுக்கு தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு உத்தமராகவும்; புனிதனுக்கு புனிதராகவும், மாறுபாடுள்ளவனுக்கு மாறுபடுகிறவராகவும் தோன்றுகின்றார்.  எனவே, அன்பானவர்களே, பாவ மன்னிப்பையும் பரிசுத்த வாழ்வையும் நித்தியஜீவனையும் தேடுபவர்களுக்கு மட்டுமே அவர் தன்னை உண்மையாக வெளிப்படுத்தி அவர்களுக்கு இவைகளை அருளுகின்றார்.  

"..............நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும். " ( லுூக்கா 6 : 38 ) என்று இயேசு கிறிஸ்து கூறவில்லையா? 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்       

No comments: