Friday, August 23, 2024

ஜாதி பாகுபாடு

 'ஆதவன்' செப்டம்பர் 02, 2024. திங்கள்கிழமை 💚 வேதாகமத் தியானம் - எண்:- 1,302



"...எந்த மனுஷனையும் தீட்டுள்ளவனென்றும் அசுத்தனென்றும் நான் சொல்லாதபடிக்கு தேவன் எனக்குக் காண்பித்திருக்கிறார்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 10 : 28 )

நமது நாட்டின் சாபக்கேடான விஷயங்களில் ஒன்று ஜாதி பாகுபாடு. ஜாதி வெறி இன்று கிறிஸ்தவர்களுக்குள்ளும் இருப்பது மறுக்கமுடியாத நிஜம். ஜாதி பாகுபாட்டைக் கொண்டுசெயல்படும் கிறிஸ்தவ ஆலயங்கள், கல்லறைகள் மட்டுமல்ல ஜாதி அடிப்படையில் உயர் பதவிகளுக்கு ஊழியர்களை நியமனம் செய்யும் அவலநிலையும்  கிறிஸ்தவத்திலும் மற்ற சமூகங்களுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாமல் இருக்கின்றது. ஜாதி அடிப்படையில் மறைமாவட்டங்களைப் பிரித்து ஆட்சிசெய்வதையும் நாம் பார்க்கின்றோம். 

ஆனால் இன்று இவைகளை மறைத்து தங்களிடம்  குறையில்லாததுபோல கிறிஸ்தவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஜாதிவெறி பாவம் என்பதும் அது தேவனுக்கு ஏற்பில்லாத செயல் எனும் எண்ணமும்  கிறிஸ்தவத்  தலைவர்களுக்கும் இருப்பதில்லை. தேவன் இதனை அப்போஸ்தலரான பேதுருவுக்கு வெளிப்படுத்தினார். எனவே அவர் கூறுகின்றார், "...எந்த மனுஷனையும் தீட்டுள்ளவனென்றும் அசுத்தனென்றும் நான் சொல்லாதபடிக்கு தேவன் எனக்குக் காண்பித்திருக்கிறார்." என்று. 

தேவன் ஆள்பார்த்தும் ஜாதி இனம் பார்த்தும் செயல்படுபவரல்ல. ஒருவன் தனக்கு உகந்த வாழ்க்கை வாழ்கின்றானா இல்லையா என்பதே அவரது அளவுகோல். ஆம், "தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 10 : 34, 35 ) என்கிறார் பேதுரு. 

தேவனுக்குப் பயந்து நீதியைச் செய்கின்றவன், நீதியைச் செய்யாதவன் எனும் இரு பிரிவுகள் தான் தேவனுக்கு உண்டுமேத்தவிர ஒருவர் பிறந்த ஜாதி இனத்தின் அடிப்படையில் அவர் மனிதர்களைப் பிரித்துப் பார்ப்பதில்லை. அப்படியிருந்தும் நீதியைச் செய்யாதவன் மனம் திரும்பி தேவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழத் தன்னை ஒப்புக்கொடுக்கும்போது தேவன் அவனையும் எந்தப் பாகுபாடுமில்லாமல் ஏற்றுக்கொள்கின்றார். 

கிறிஸ்தவம் வெறும் இரண்டே கட்டளைகளுக்குள் தான் அடங்கியுள்ளது. இயேசு கிறிஸ்து கூறினார், "உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக." ( மத்தேயு 22 : 37 - 39 )

அதாவது, தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவதும் தன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவதும் இணையான கட்டளைகள். தன்னைப்போல பிறனிடத்தில் அன்புகூருபவன் மற்றவனைப் பிரித்துப் பார்க்கமாட்டான். ஆனால் இந்த இரண்டு கட்டளைகளில் ஒன்றில் தவறுகின்றவன் இரண்டிலும் தவறுகின்றான். 

எனவே அன்பானவர்களே, ஜாதி பாகுபாடுபார்ப்பவன் கிறிஸ்தவத்தில் எந்த உயர் பதவியில் இருபவனாக இருந்தாலும் அவன் தேவனுக்கு அருவெறுப்பானவன். அத்தகைய அருவெறுப்பானவன் மக்களை நல்வழியில் நடத்திட முடியாது. இதுபோலவே, ஒருவன் சாதாரண கிறிஸ்தவ விசுவாசி என்று தன்னைக் கூறிக்கொண்டாலும் அவன் கிறிஸ்தவ விசுவாசி கிடையாது. 

எனவே, எந்த மனிதரையும் தீட்டுள்ளவனென்றும் அசுத்தனென்றும் சொல்லாதபடிக்கு எச்சரிக்கையாக இருப்போம். அப்படிச் சொல்லிக்கொண்டு ஆலய வழிபாடுகளிலும் தவறாமல் கலந்துகொண்டு வாழ்வோமானால் இறுதிநாளில் தேவன் நம்மையும்  அசுத்தன் என்று கூறிப் புறம்பே தள்ளுவார். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்             

No comments: