Thursday, August 22, 2024

மூடர் பாவத்தைக்குறித்துப் பரியாசம்பண்ணுகிறார்கள்.

 'ஆதவன்' 💚ஆகஸ்ட் 31, 2024. 💚சனிக்கிழமை 💚  வேதாகமத் தியானம் - எண்:- 1,300

"நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது." ( 1 யோவான்  1 : 10 )

ஒருமுறை பிற சமயத்தைச் சார்ந்த நண்பரொருவர் என்னிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, "கிறிஸ்தவர்கள்தான் பாவம் பாவம் என்று எப்போதும் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.... உலகத்தில் பிறந்திருக்கும் எல்லோரும் பாவம் செய்துகொண்டா இருக்கிறார்கள்? என்று கேட்டார். அவருக்கு நான் வேதாகமம் கூறும் சத்தியத்தின் அடிப்படையில் சில விளக்கங்களை அளித்தேன். 

அவரோடு பேசிக்கொண்டிருந்தபோது இந்த உலகத்தில் பலரும் கருதும் தீயசெயல்கள் மட்டுமே பாவம் எனும் எண்ணம் அவருக்கு இருப்பது புரிந்தது. ஆம் அன்பானவர்களே, இன்று கிறிஸ்தவர்கள் பலரும்கூட இவரைப்போலவே இப்படி  எண்ணிக்கொண்டிருக்கின்றனர். கொலை, களவு, விபச்சாரம், ஏமாற்று, கற்பழிப்பு போன்ற செயல்கள் மட்டுமே பாவம் என்றும் தாங்கள் இவைகளைச் செய்யாததால் பாவம் செய்யவில்லை என்றும் எண்ணிக்கொண்டிருக்கின்றனர். 

எனவேதான் இன்றைய தியான வசனம் கூறுகின்றது,    "நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம்". அதாவது நான் பாவம் செய்ததே இல்லை என்று ஒருவர் கூறுவாரென்றால் அவர் கடவுளைப் பொய்யராக்குகின்றார் என்று பொருள். மட்டுமல்ல அப்படிச் சொல்பவரிடம் கடவுளது  வார்த்தை இராது.

எனவேதான் வேதம் திட்டமும் தெளிவுமாகக் கூறுகின்றது, "ஒரு பாவமும் செய்யாமல், நன்மையே செய்யத்தக்க நீதிமான் பூமியிலில்லை." ( பிரசங்கி 7 : 20 ) என்று. பாவம் என்பது கொடிய பாவச்  செயல்கள் மட்டுமல்ல, தீய எண்ணங்கள், மற்றவர்களை அவமதிப்பது, அற்பமாக எண்ணுவது, பிறரது பெயரைக்கெடுப்பது,  பொறாமை, வஞ்சக  எண்ணங்கள், இவைபோன்றவைகளும்தான். மட்டுமல்ல, தேவ சித்தம் செய்யாமலும் தேவ சித்தத்துக்கு எதிராகச் செயல்படுவதும்  பாவமே. 

மேலும், இச்சைதான் மிகப்பெரிய பாவம். இதுவே பாவங்களுக்கு நேராக நம்மை இழுத்துச் செல்கின்றது. பத்துக்கட்டளையின் இறுதிக்கட்டளை, இச்சையைப்பற்றி கூறுகின்றது. அதாவது மற்றவர்களது உடைமைகளின்மேல் மனதில் ஆசைகொள்வது. இதுவும் பாவமே. இதனையே அப்போஸ்தலரான பவுல், "இச்சியாதிருப்பாயாக என்று நியாயப்பிரமாணம் சொல்லாதிருந்தால், இச்சை பாவம் என்று நான் அறியாமலிருப்பேனே." ( ரோமர் 7 : 7 ) என்கின்றார். 

"இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்." ( யாக்கோபு 1 : 15 ) என்று வாசிக்கின்றோம். இப்படி இருப்பதால், நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது.  இச்சையை வெல்லும்போதே நாம் பாவத்தையும் மேற்கொண்டு வெற்றியடைகின்றோம். தேவ ஆவியானவர் அதற்கு நமக்குத் துணைசெய்கின்றார். 

எனவே நம்மை நாமே நிதானித்துப் பார்ப்போம். நம்மில் யாரும் பரிசுத்தர் அல்ல. ஆனால் தேவன் நாம் அவரைப்போல பரிசுத்தராகவேண்டும் என்று எதிர்பார்க்கின்றார். அப்படி நாம் பாவத்தை வென்று பரிசுத்தராக நமக்கு உதவிட பரிசுத்த ஆவியானவரைத் தந்துள்ளார். எனவே, நான் பாவம் செய்யவில்லையென்றும் நாம் செய்த பாவங்களை நியாயப்படுத்தாமலும் தேவனிடம் அறிக்கையிட்டு மன்னிப்பை வேண்டுவோம். "மூடர் பாவத்தைக்குறித்துப் பரியாசம்பண்ணுகிறார்கள்." ( நீதிமொழிகள் 14 : 9 ) என்று கூறும் வசனம் நமக்கு ஓர் எச்சரிப்பு. நாம் மூடர்களாக இருக்கக்கூடாது. 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்        

No comments: