✉'ஆதவன்' ஆகஸ்ட் 13, 2024. செவ்வாய்க்கிழமை 💚 வேதாகமத் தியானம் - எண்:- 1,282
"இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார்" (லூக்கா 19:10)
கடவுள் என்றால் அவர் தீயவர்களை அழித்து நல்லவர்களை வாழவைப்பவர் என்று நம்மில் பலரும் எண்ணிக்கொண்டிருக்கின்றோம். காரணம், மனிதர்களாகிய நாம் அத்தகைய குணம் உள்ளவர்களாக இருப்பதால்தான். நம்மை அன்பு செய்பவர்களை மட்டும் நாமும் அன்பு செய்கிறோம்; நமக்கு நன்மை செய்பவர்களுக்கு மட்டும் நாமும் நன்மை செய்கின்றோம்.
ஆனால் தேவன் இப்படிக் குறுகிய எண்ணம் உள்ளவரல்ல; மாறாக அவர் தீயவர்களையும் பாவிகளையும் அன்பு செய்கின்றார். காரணம், இந்த உலக வாழ்க்கைக் குறுகியது. இந்த உலகமே பெரிதென வாழ்ந்து எதிர்காலத்தில் முடிவில்லா அக்கினியில் ஆத்துமாக்கள் அழிந்துபோவது தேவனுக்குச் சித்தமல்ல. எனவேதான் தேவன் பாவிகளை உடனேயே அழித்து ஒழிக்காமல் விட்டுவைக்கின்றார். அவர்கள் மனம்திரும்ப சந்தர்ப்பம் அளிக்கின்றார்.
"தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக் குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்." (2 பேதுரு 3:9) என்று நாம் வாசிக்கின்றோம். ஒரு ஆத்துமாகூட அழிவது தேவனுக்குச் சித்தமல்ல. எல்லோரும் மனம்திரும்பவேண்டும் என்று அவர் விரும்புகின்றார். ஆம் அவர் எதிலும் 100% எதிர்பார்ப்பவர்.
அன்று பாவி என்று கருதப்பட்ட சகேயு வீட்டில் இயேசு தங்கச் சென்றபோது யூதர்கள் மனித முறைமையின்படி சிந்தித்ததால், " இவர் பாவியான மனுஷனிடத்தில் தங்கும்படி போனார் என்று முறுமுறுத்தார்கள்." (லூக்கா 19:7) ஆனால் இயேசு சகேயுவின் ஆத்துமாவைப் பார்த்தார். அது பாவத்துக்கு வருந்தும் தன்மை உள்ள ஆத்துமாவாக இருந்ததை அவர் அறிந்திருந்தார்.
அதுபோலவே "சகேயு நின்று, கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான். இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே." " (லூக்கா 19: 8, 7) என்றார்.
ஆம் அன்பானவர்களே, இழந்துபோனதை தேடுவதற்கே இயேசு கிறிஸ்து உலகினில் வந்தார். சகேயுவைபோல பாவத்துக்கு வருந்தி பரிகாரம்செய்யும் குணம் நமக்கு இருக்குமானால் நாம் அவருக்குத் தொலைவில் இல்லை. இழந்துபோன நம்மை தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரனான கிறிஸ்து உலகினில் வந்திருக்கிறார். அவரிடம் நமது பாவங்களை அறிக்கையிட்டு நம்மை ஒப்புக்கொடுப்போம்.
No comments:
Post a Comment