இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Thursday, August 01, 2024

உண்மை நட்பு

 ✉'ஆதவன்' ஆகஸ்ட் 09, 2024. வெள்ளிக்கிழமை 💚   வேதாகமத் தியானம் - எண்:- 1,278                                             


  
  

"என் சகோதரனாகிய யோனத்தானே, உனக்காக நான் வியாகுலப்படுகிறேன்; நீ எனக்கு வெகு இன்பமாயிருந்தாய்; உன் சிநேகம் ஆச்சரியமாயிருந்தது; ஸ்திரீகளின் சிநேகத்தைப்பார்க்கிலும் அதிகமாயிருந்தது." ( 2 சாமுவேல் 1 : 26 )

தனது நண்பனான யோனத்தான் இறந்துபோனான் என்று கேள்விப்பட்டபோது தாவீது வெளிப்படுத்தின வேதனையின் வார்த்தைகள்தான் இன்றைய தியான வசனம். 

வேதாகமத்தில் உண்மையான நட்புக்கு உதாரணமாக இருந்த இரு நண்பர்கள்தான் தாவீதும் சவுலின் மகன் யோனத்தானும். யோனத்தான்  சவுல் அரசனின் மகன் என்பதால் தகப்பனுக்கு அடுத்தபடி ராஜாவாக  ஆட்சிப்பொறுப்பை ஏற்கும் நிலையில் இருந்தவன். தாவீது சவுலிடம் பணி செய்தவன். ஆனால் சவுல் தாவீதை மிகவும் வெறுத்தான். தாவீதை அழித்து ஒழிக்க முயன்றுகொண்டிருந்தான். காரணம், தாவீதுக்கு இருந்த தைரியம், பலம், அறிவு இவை சவுலைக் கலங்கச் செய்தன. தனக்குப்பின் தனது மகனுக்குப்பதில் ஆட்சிப்பொறுப்பைத் தாவீது கைப்பற்றிவிடுவான் என்று சவுல் அஞ்சினான். 

ஆனால் சவுலின் மகன் யோனத்தான் தாவீதை "தன் உயிரைச் சிநேகித்ததுபோல சிநேகித்தான்." ( 1 சாமுவேல் 20 : 17 ) என்று கூறப்பட்டுள்ளது. இது முரண்பாடுகளுக்குள் எழுந்த நட்பு. ராஜாவான தகப்பன் தாவீதைக் கொன்று ஒழிக்க முயல, அவன் மகனோ அவனைத் தன் உயிரைப்போல நேசிக்கிறான். 

ஒருமுறை சவுல் தனது மகன் யோனத்தானிடம், "ஈசாயின் மகன் பூமியின்மேல் உயிரோடிருக்கும் நாள்வரையும் நீயானாலும், உன் ராஜ்யபாரமானாலும் நிலைப்படுவதில்லை; இப்போதே அவனை அழைப்பித்து, என்னிடத்தில் கொண்டுவா; அவன் சாகவேண்டும் என்றான்." ( 1 சாமுவேல் 20 : 31 ) ஆனால் யோனத்தானோ அப்படி நினைக்கவில்லை. தாவீது அரசன் ஆவான் அப்போது நான் அவனுக்கு அடுத்த நிலையில் இருக்கவும் தயார் எனும் மனநிலையில் இருந்தான் யோனத்தான். இந்த மனநிலையை நாம் நினைத்தும் பார்க்க முடியவில்லை. தனது ராஜ மேன்மையை நண்பனுக்காக விட்டுக்கொடுக்கும் மனநிலை கொண்ட உயரிய நட்பு தாவீதுமேல் யோனத்தான் கொண்ட நட்பு. 

எனவே தன் தகப்பன் சவுலுக்குப் பயந்து காட்டில் ஒளிந்திருந்த தாவீதிடம் சென்று அவனைத் திடப்படுத்தினான் யோனத்தான். "அப்பொழுது சவுலின் குமாரனாகிய யோனத்தான் எழுந்து, காட்டிலிருக்கிற தாவீதினிடத்தில் போய், தேவனுக்குள் அவன் கையைத் திடப்படுத்தி: நீர் பயப்படவேண்டாம்; என் தகப்பனாகிய சவுலின் கை உம்மைக் கண்டு பிடிக்கமாட்டாது; நீர் இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிருப்பீர்; அப்பொழுது நான் உமக்கு இரண்டாவதாயிருப்பேன்; அப்படி நடக்கும் என்று என் தகப்பனாகிய சவுலும் அறிந்திருக்கிறார் என்றான்." ( 1 சாமுவேல் 23 : 16, 17 )

யோனத்தான் எனும் உலக மனிதனின் அன்பு இப்படி இருக்குமானால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பு எவ்வளவு மேலானதாக இருக்குமென்று எண்ணிப்பாருங்கள். அன்பானவர்களே, இதனைவிட மேலான நட்போடு கூடிய அன்புடன்தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மிடம் வந்தார். பரலோக மேன்மையைத் துறந்து நமக்காகத் தனது உயிரையும் கொடுத்தார்.  நம்மைத் தன்னைப்போல உருமாற்ற; பிதாவோடு அவர் கொண்டிருந்த அதே உறவோடு நாமும் அவரோடும் பிதாவோடும்  ஒன்றாக அமர்ந்திட.  (யோவான் 17:20 - 26) அவரையே நாமும் அன்பு செய்வோம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

No comments: