இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Sunday, August 11, 2024

கண்ணீர் சிந்தாதே, உன் செயல்களுக்கு பலன் உண்டு

 'ஆதவன்' ஆகஸ்ட் 18, 2025. ஞாயிற்றுக்கிழமை 💚   வேதாகமத் தியானம் - எண்:- 1,287   

"நீ அழாதபடிக்கு உன் சத்தத்தை அடக்கி, நீ கண்ணீர் விடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உன் கிரியைக்குப் பலனுண்டென்று கர்த்தர் சொல்லுகிறார்". (எரேமியா 31:16)

ஆவிக்குரிய வாழ்க்கை வாழ்ந்தும் பல்வேறு நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் மக்கள் பலர் உண்டு. ஆம், சில வேளைகளில் நாம் எவ்வளவுதான் உண்மையும் உத்தமுமான வாழ்க்கை வாழ்ந்தாலும் நெருக்கடிகளும் பாடுகளும் நம்மைத் துரத்துவதுண்டு. யோபுவின் வாழ்க்கையைப் பாருங்கள், "அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்." (யோபு 1:1) என்று வாசிக்கின்றோம். 

ஆனால் யோபு பல்வேறு நெருக்கடிகளுக்குள்ளானார். '..ஆகையால் என் துக்கம் சொல்லிமுடியாது. சர்வவல்லவரின் அம்புகள் எனக்குள் தைத்திருக்கிறது; அவைகளின் விஷம் என் உயிரைக் குடிக்கிறது; தேவனால் உண்டாகும் பயங்கரங்கள் எனக்கு முன்பாக அணியணியாய் நிற்கிறது." ( யோபு 6 : 3, 4 ) என்று அவர் புலம்பினார். அவரது நண்பர்கள் யோபுவின் துன்பத்துக்குக்  காரணம் அவர்தான்;  அவரது பாவம்தான் என்று அவர்மேல் பழிசுமத்தினார்கள்.  ஆனால், இறுதியில் அவரது நண்பர்களைத் தேவன் கடிந்துகொண்டதை நாம் வாசிக்கின்றோம். 

ஆம், ஆவிக்குரிய வாழ்வில் வரும்  சில துன்பங்கள் நம்மால் புரிந்துகொள்ளமுடியாதவை.  ஆனால் தேவன் நமது கண்ணீரைப் பார்க்கின்றார். அதனை அவர் புறக்கணிப்பதில்லை. எசேக்கியா ராஜா நோய்வாய்ப்பட்டபோது  "ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மனஉத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணினான். எசேக்கியா மிகவும் அழுதான்." ( 2 இராஜாக்கள் 20 : 3 ) என்று கூறப்பட்டுள்ளது. எசேக்கியா தேவனுக்காக   வைராக்கியம்கொண்டு பல நல்ல செயல்களைச் செய்தவர்தான். 

இதுபோலவே இன்று நாம் ஆவிக்குரிய வாழ்வைச் சிறப்பாக வாழ்ந்துகொண்டிருந்தாலும் துன்பங்கள் வருமானால் நம்மைப்பார்த்தும் தேவன் சொல்கின்றார், "நீ அழாதபடிக்கு உன் சத்தத்தை அடக்கி, நீ கண்ணீர் விடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள்; உன் கிரியைக்குப் பலனுண்டு"

நேர்மையாக வாழ்பவர்களின் கண்ணீரைத் தேவன் புறக்கணிப்பதில்லை.  பிளவை நோய் முற்றியதால் ஏசாயா தேவ அறிவிப்புப்  பெற்று   எசேக்கியா ராஜாவிடம்  "நீர் உயிர் பிழைக்கமாட்டீர், எனவே உமது வீட்டின்  காரியங்களை ஒழுங்குபடுத்தும்"  என்று கூறினார்.  ஆனால், "ஏசாயா பெரிய தீர்க்கதரிசியல்லவா? அவரே கூறிவிட்டாரே இனி நான் பிழைக்கமாட்டேன்" என்று எசேக்கியா எண்ணவில்லை; மனம் தளரவில்லை. 

நமது தேவனிடம் இரக்கங்கள் உண்டு எனபதனை உணர்ந்திருந்த எசேக்கியா தேவனை நோக்கிக் கண்ணீருடன் விண்ணப்பித்தார்.  எசேக்கியாவின் நற்செயல்களை அறிந்திருந்த தேவன்,  "உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்; மூன்றாம் நாளிலே நீ கர்த்தருடைய ஆலயத்துக்குப் போவாய். உன் நாட்களோடே பதினைந்து வருஷங்களைக் கூட்டுவேன்." ( 2 இராஜாக்கள் 20 : 5, 6 ) என்று வாக்களித்து அதனை நிறைவேற்றினார். 

ஆம் அன்பானவர்களே, "அழாதபடிக்கு உன் சத்தத்தை அடக்கி, நீ கண்ணீர் விடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உன் கிரியைக்குப் பலனுண்டு" என்கிறார் தேவனாகிய கர்த்தர். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                              

No comments: