Thursday, August 29, 2024

ஞானமுள்ளவர்களாக பிதாவின் சித்தம் செய்வோம்

 'ஆதவன்' செப்டம்பர் 06, 2024. வெள்ளிக்கிழமை     வேதாகமத் தியானம் - எண்:- 1,306


"நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்." ( எபேசியர் 5 : 15, 16 )

இந்த உலகத்தில் நமக்கு வாழக்கொடுக்கப்பட்ட நாட்கள் குறைவு. எனவே அந்தக் குறைந்த  நாட்களை நாம்  நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. ஏன் கவனமாக நடக்கவேண்டும்? இந்த உலகத்தின் நாட்கள் பொல்லாதவைகளாய் இருக்கின்றன. காரணம் இந்த உலகம் பொல்லாங்கனுக்குள்  கிடக்கின்றது. "நாம் தேவனால் உண்டாயிருக்கிறோமென்றும், உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம்." ( 1 யோவான்  5 : 19 ) என்று கூறுகின்றார் யோவான். 

நாம் தேவனால் உண்டாயிருக்கிறோம், ஆனால்  உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் (பிசாசு அல்லது சாத்தானின் கையில்)  கிடக்கிறது. இந்த முரண்பாடே பிரச்னைகளுக்குக் காரணமாக இருக்கின்றது. எனவே நாம்  ஞானமற்றவர்களாய் இருக்காமல்  ஞானமுள்ளவர்களாய்க் கவனமாய் நடந்து கொள்ளவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.   

ஞானமில்லாதவன் அறிவில்லாமல் சில காரியங்களைச் செய்வதைப்போல நாமும் செய்துவிடக்கூடாது என்கிறார் அப்போஸ்தலராகிய பவுல். எனவேதான் இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து கூறுகின்றார்,  "ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்." ( எபேசியர் 5 : 17 ) அதாவது ஞானமுள்ளவன் தன்னைக்குறித்த தேவனது சித்தம் இன்னதென்று அறிந்தவனாக இருப்பான். ஞானமில்லாதவனுக்கு அந்த அறிவு இருக்காது. 

இந்த உலகத்தில் படைக்கப்பட்ட ஒவ்வொருவரைக்குறித்தும் தேவனுக்கு ஒரு சித்தம் உண்டு. அந்தச் சித்தத்தைச் செய்வதே தேவனுக்கு உகந்ததாகும். தேவ சித்தத்தை மீறும்போது நாம் பாவம் செய்தவர்களாகின்றோம். எனவேதான் அப்போஸ்தலராகிய பவுல், "இதனிமித்தம், நாங்கள் அதைக்கேட்ட நாள்முதல் உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம்பண்ணுகிறோம்; நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும்......." ( கொலோசெயர் 1 : 9 ) என்று கொலோசெய சபை விசுவாசிகள் தேவ சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்பட ஜெபிப்பதாகக் கூறுகின்றார். 

இயேசு கிறிஸ்துவும் தான் சொல்லிக்கொடுத்த ஜெபத்தில், "உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக." ( மத்தேயு 6 : 10 ) என்று ஜெபிக்கச் சொல்லிக்கொடுத்தார். ஆம் அன்பானவர்களே, பிதாவின் சித்தம் பரலோகத்தில் எப்படி அவரது விருப்பப்படி செய்யப்படுகின்றதோ அதுபோல பூமியில் நாம் அதனை நிறைவேற்றவேண்டும்.  எனவே, நாட்கள் பொல்லாதவைகளானதால் நமது குறுகிய வாழ்நாள்  காலத்தைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். ஞானமுள்ளவர்களாக நம்மைக்குறித்த பிதாவின் சித்தம் அறிந்து செயல்படுவோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

No comments: