Friday, August 30, 2024

சந்தேகம்

 'ஆதவன்' செப்டம்பர் 07, 2024. 💚சனிக்கிழமை    வேதாகமத் தியானம் - எண்:- 1,307


"இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான்." ( யாக்கோபு 1 : 8 )

இருமனமுள்ளவர்கள் உலக காரியங்களில் மட்டுமல்ல, ஆவிக்குரிய வாழ்விலும் எதனையும் பெற்றுக்கொள்ள முடியாதவர்களாக தோல்வி வாழக்கையையே சந்திப்பார்கள். உலக காரியங்களில் சிலர் ஒரு வேலையினைச் செய்யத் துவங்குவார்கள். பின்னர் மற்றவர்களையும் தங்களது செயலில் ஏற்படும் பிரச்சனைகளையும் கண்டு மனம்மாறி வேறு ஒரு செயலைச் செய்யத் துவங்குவார்கள். இத்தகைய மனிதர்கள் நிலையற்றவர்கள் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

இதற்குக் காரணம் சந்தேகம். ஒருவேளை நாம் செய்யும் இந்தச் செயல் நஷ்டத்தில் முடியுமோ? என்று சந்தேகப்படுவது. ஆவிக்குரிய வாழ்விலும் பலர் இப்படியே இருக்கின்றனர். எப்போதும் எதெற்கெடுத்தாலும் சிலர் சந்தேகத்திலேயே இருப்பார்கள். நன்றாக ஜெபிப்பார்கள், ஆனால் ஒருவேளை நாம் ஜெபித்தபடி நடக்காவிட்டால் என்னசெய்வது? என்பதே இவர்களது எண்ணமாக இருக்கும். எனவேதான் அப்போஸ்தலரான யாக்கோபு இன்றைய தியான வசனத்தின் முந்தின வசனத்தில், "அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக." ( யாக்கோபு 1 : 7 ) என்று கூறுகின்றார். 

இயேசு கிறிஸ்துவும், "நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்ளுவீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்." ( மாற்கு 11 : 24 ) என்று கூறுகின்றார். 

எனவேதான் இன்றைய தியான வசனத்தின் முன்பு யாக்கோபு கூறுகின்றார், "சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான். அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக." ( யாக்கோபு 1 : 6, 7 ) என்று. ஆம் அன்பானவர்களே, சந்தேகம் ஒரு பெரிய நோய். உலக காரியங்களிலும் ஆவிக்குரிய காரியங்களிலும் மனிதர்களின் அழிவுக்கு சந்தேகம் இட்டுச்செல்லும். 

எனவே நாம் ஜெபிப்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் சந்தேகப்படாமல் ஜெபிப்பது. எனது ஜெபத்துக்கு நான் விரும்பும் பதில் வந்தாலும் வராவிட்டாலும் நான் கர்த்தர்மேலுள்ள விசுவாசத்தை விட்டுவிடமாட்டேன் என்று உறுதியாக இருப்பது. இந்த உறுதி இருக்குமானால் நாம் கலங்கிடமாட்டோம். நிலையற்றவர்களாக அலைந்து திரியமாட்டோம். இன்று கிறிஸ்தவர்கள் பலர்கூட தங்களுக்குச் சில பிரச்சனைகள் வரும்போது  பல்வேறு மூட நம்பிக்கைச் செயல்பாடுகளையும் பிறமதத்தினர் கையாளும் காரியங்களுக்கும் அடிமைகளாக உள்ளனர். இது தவறல்ல, இந்தியன் கல்ச்சர் என்று கூறித் தங்கள் தப்பிதங்களை நியாயப்படுத்திக்கொண்டு வாழ்கின்றனர். 

இத்தகைய இருமனதுள்ளவர்களைப் பார்த்து வேதம் கூறுகின்றது,  "நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்; கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள்." ( 1 இராஜாக்கள் 18 : 21 )

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்        

No comments: