இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Saturday, August 17, 2024

கிறிஸ்துவைக்குறித்து வெட்கப்படாமலும் அவரை வெட்கப்படுத்தாமலும்

'ஆதவன்' ஆகஸ்ட் 25, 2024. 💚ஞாயிற்றுக்கிழமை      வேதாகமத் தியானம் - எண்:- 1,294 

"என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுகிறானோ, அவனைக்குறித்து மனுஷகுமாரனும் தம்முடைய மகிமையோடும் பிதாவின் மகிமையோடும் பரிசுத்த தூதர்களின் மகிமையோடும் வரும்போது வெட்கப்படுவார்."(லுூக்கா 9 : 26 )

இன்றைய தியான வசனத்தில் தன்னைக்குறித்து வெட்கப்படுதலைப்பற்றி இயேசு கிறிஸ்து கூறுவது ஒரு பெண் வெட்கப்படுவதுபோல வெட்கப்படுவதையல்ல; மாறாக, பிறர் மத்தியிலும் இக்கட்டான நேரங்களிலும் அவரது பெயரை வெளிப்படுத்தவும், அவர் கூறிய வசனங்களை குறிப்பிட்ட நேரங்களில் புறக்கணிப்பதையும்  நாம் அவரை ஏற்றுக்கொண்டுள்ளதை வெளிப்டையாகக் கூறத் தயங்குவதையும் குறிக்கின்றது. 

இன்று பல கிறிஸ்தவர்கள் இப்படியே இருக்கின்றனர். வேலைபார்க்கும் இடங்களில் அல்லது மற்ற மதத்தினரோடு ஒரே இடத்தில சேர்ந்து தங்க நேரிடும்போது தாங்கள் கிறிஸ்தவர்கள் என்பதனை வெளிப்படுத்தத் தயங்கி அவர்களைப்போன்ற செயல்பாடுகளைச் செய்வதைக் குறிக்கின்றது. 

மற்றவர்களோடு நாம் ஒற்றுமையாகவும் நண்பர்களாகவும் வாழவேண்டியது அவசியம். ஆனால், ஆவிக்குரிய காரியங்களில் நாம் நமது தனித் தன்மையினை விட்டுவிடக்கூடாது. அப்படி விட்டுவிடுவது கிறிஸ்துவைக்குறித்து வெட்கப்படுவதாகும். 

மேலும், கிறிஸ்துவைக்குறித்தும் அவரது வார்த்தைகளைக் குறித்தும் வெட்கப்படுவது என்பது அவரது வார்த்தைகளுக்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுவது. இன்று தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் பலரும் ஆலய வழிபாடுகளைத் தவிர மற்ற எந்த விதத்திலும் கிறிஸ்துவைப் பின்பற்றுவதில்லை. சாதாரண மனிதர்களைவிடக் கீழானவர்களாக பல வேளைகளில் செயல்படுகின்றனர்.  

கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்கிறேன் என்று கூறிக்கொள்ளும் பலர் கூட ஏமாற்று, லஞ்சம், கொலை, விபச்சாரம், பதுக்கல், பணம் சம்பாதிக்கக் கையாளும் பல்வேறு குறுக்கு வழிகள், சைபர் கிரைம் (cyber crime) போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு கையும் களவுமாக பிடிபடுவதை நாம் செய்தித்தாட்களில் வாசிக்கின்றோம். இவை போன்ற செயல்பாடுகள் செய்யும்போது நாம்  கிறிஸ்துவை வெட்கப்படுத்துகின்றோம்.  

இப்படி "என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுகிறானோ, அவனைக்குறித்து மனுஷகுமாரனும் தம்முடைய மகிமையோடும் பிதாவின் மகிமையோடும் பரிசுத்த தூதர்களின் மகிமையோடும் வரும்போது வெட்கப்படுவார்." என்கின்றார் இயேசு கிறிஸ்து. அவர் வெட்கப்படுவார் என்பது மணப்பெண்போல வெட்கப்படுவார் என்று பொருளல்ல; இப்படிச் செய்பவர்களை அருவெறுத்து புறம்பே தள்ளுவார் என்று பொருள்.   

ஆம் அன்பானவர்களே, எனவே இதுபோல கிறிஸ்துவைக்குறித்து வெட்கபடாமலும் கிறிஸ்துவை வெட்கப்படுத்தாமலும் வாழ்வோம். அதனையே அவர் விரும்புகின்றார். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

No comments: