✉'ஆதவன்' 💚ஆகஸ்ட் 10, 2024. 💚சனிக்கிழமை 💚 வேதாகமத் தியானம் - எண்:- 1,279
"நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவானவளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரணபுருஷராகும் வரைக்கும்,....." ( எபேசியர் 4 : 11 )
சுவிசேஷம் ஏன் உலகுக்கு அறிவிக்கப்படவேண்டும் என்பதனை இன்றைய தியான வசனம் கூறுகின்றது. அதாவது இந்த உலகத்தில் வாழக்கூடிய அனைவரும் தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசத்தினால் பற்றிக்கொண்டு கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியைப்போல நாமும் வளர்ந்து பூரண மனிதர்களாக வேண்டும். பூரணம் என்பது நிறைவைக் குறிக்கின்றது. நாம் அனைவருமே நம்மில் எந்தக் குறைவுமின்றி கிறிஸ்துவைப்போல மாறவேண்டும்.
எனவேதான், "...சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும், அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார்." ( எபேசியர் 4 : 12, 13 )
அதாவது, எப்படியாவது மக்கள் கிறிஸ்துவை அறிவதன்மூலம் பூரணம் அடையவேண்டும் என்பதற்காக, அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள், சுவிசேஷகர்கள், மேய்ப்பர்கள் மற்றும் போதகர்கள் என ஐந்துவகை ஊழியங்களை தேவன் ஏற்படுத்தினார் என்று கூறப்பட்டுள்ளது.
கிறிஸ்துவை வாழ்வில் அறிந்திடாத மக்கள் பலர் இந்த ஐந்து வகை ஊழியங்களில் ஏதாவது ஒன்றினாலும் தொடப்பட்டு கிறிஸ்துவுக்கு நேராகத் திரும்பியுள்ளதை நாம் உலகினில் பார்க்கலாம். அப்போஸ்தல அடையாளங்களான அற்புதங்கள் மூலம் பலரும், தங்கள் உள்ளத்திலுள்ளதை தீர்க்கதரிசனங்களால் வெளிப்படுத்துவதன் மூலம் சிலரும் சுவிசேஷகர்களின் நற்செய்தி அறிவிப்புகள் மூலம் மற்றும் மேய்ப்பர்கள், போதகர்கள் இவர்களின் வழிகாட்டுதலின் மூலம் பலரும் கிறிஸ்துவிடம் திரும்பியுள்ளனர்.
ஆம் அன்பானவர்களே, தேவன் எப்படியாவது மக்கள் தன்னை அறிந்து தன்னைப்போல பூரணர்களாக மாறவேண்டும் என்று இப்படிச் செய்துள்ளார். எனவே இத்தகைய சுவிசேஷ அறிவிப்புகளை நாம் புறக்கணித்துக்கொண்டே இருப்போமானால் நிச்சயம் தண்டனைக்கு நாம் தப்பமுடியாது.
"முதலாவது கர்த்தர் மூலமாய் அறிவிக்கப்பட்டு, பின்பு அவரிடத்தில் கேட்டவர்களாலே நமக்கு உறுதியாக்கப்பட்டதும், அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சி கொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்." ( எபிரெயர் 2 : 3, 4 )
ஆம் அன்பானவர்களே, சுவிசேஷ அறிவிப்புகளை அற்பமாக எண்ணாமல் அறிவிக்கப்படும் செய்திக்கு நேராக நமது இருதயத்தைத் திரும்புவோம்; கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியைப்போல நாமும் வளர்ந்து பூரண மனிதர்களாவோம்.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
No comments:
Post a Comment