'ஆதவன்' ஆகஸ்ட் 16, 2024. வெள்ளிக்கிழமை 💚 வேதாகமத் தியானம் - எண்:- 1,285
"நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. அந்தப்படி, நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருந்து....." ( 1 தெசலோனிக்கேயர் 4 : 3 )
தேவன் நம்மை உலகத்தில் படைத்தது வெற்று வாழ்க்கை வாழ்வதற்கல்ல; மாறாக அவரைப்போல நாமும் பரிசுத்தராக வாழவேண்டும் என்பதற்காகவே. உலக உதாரணம்கொண்டு இதனை நாம் புரிந்துகொள்ளலாம். ஒரு புகழ் பெற்ற மருத்துவர் ஒருவர் இருக்கின்றார் என்று வைத்துக்கொள்வோம். அவர் தனது மகனும் தன்னைப்போல ஒரு சிறந்த மருத்துவராகவேண்டும் என்றுதான் விரும்புவார். அந்த மகனுக்காகப் பல முன்னேற்பாடுகளைச் செய்துவைப்பார்.
அதுபோலவே தேவனும் தன்னைப்போன்ற பரிசுத்தமுள்ளவர்களாக நாம் மாறவேண்டும் என்று விரும்புகின்றார். நாம் பரிசுத்தமாய் வாழ்வதற்கு உதவியாக பரிசுத்த ஆவியானவரை ஏற்பாடுசெய்துள்ளார். ஆம் அன்பானவர்களே, "தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார்." ( 1 தெசலோனிக்கேயர் 4 : 7 )
நாம் தொடர்ந்து ஆவியானவரின் விருப்பத்துக்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருப்போமானால் நாம் அவரை அசட்டைப் பண்ணுகின்றோம் என்று பொருள். எனவே தான் அப்போஸ்தலரான பவுல், "ஆகையால் அசட்டைபண்ணுகிறவன் மனுஷரை அல்ல, தமது பரிசுத்த ஆவியை நமக்குத் தந்தருளின தேவனையே அசட்டைபண்ணுகிறான்." ( 1 தெசலோனிக்கேயர் 4 : 8 ) என்று கூறுகின்றார்.
ஆம் அன்பானவர்களே, நாம் பரிசுத்தக் கேடான வாழ்க்கை வாழும்போது "நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது..." எனும் வசனத்தை நாம் மீறுபவர்களாக இருப்போம்; தேவ சித்தத்தை மீறுகின்றவர்களாக இருப்போம்.
இன்றைய தியான வசனம், "அந்தப்படி, நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருந்து....." என்று கூறுகின்றது. அதாவது விபச்சார பாவத்தையே பரிசுத்தக் கேட்டுக்கு ஒரு உதாரணமாக இந்த வசனம் கூறுகின்றது. தேவன் அருவருக்கும் இரண்டு பாவங்கள் விபச்சாரம் மற்றும் விக்கிரக ஆராதனை. விக்கிரக ஆராதனை என்பது சிலைகளை வணங்குவது மட்டுமல்ல, தேவனுக்கு அளிக்கும் முன்னுரிமையை உலகப் பொருட்களுக்குக் கொடுப்பதும் விக்கிரக ஆராதனையே.
எனவே நாம் இவற்றுக்கு முன்னுரிமை கொடுக்கும் போது பரிசுத்தத்தை மீறுகின்றோம் என்று பொருள். எனவேதான் அப்போஸ்தலரான பவுல், "விபச்சாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே."( எபேசியர் 5 : 5 ) என்று எச்சரித்துக் கூறுகின்றார். தேவன் விரும்பும் பரிசுத்தத்தைக் காத்துக்கொள்வோம்.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
No comments:
Post a Comment