'ஆதவன்' செப்டம்பர் 04, 2024. 💚புதன்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,304
"உங்களைக்குறித்துப் பேசவும் நியாயந்தீர்க்கவும் எனக்கு அநேக காரியங்களுண்டு. என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர்; நான் அவரிடத்தில் கேட்டவைகளையே உலகத்துக்குச் சொல்லுகிறேன். " ( யோவான் 8 : 26 )
இன்றைய தியான வசனத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நாம் கடைபிடிக்கவேண்டிய ஒரு முக்கியமான குணத்தைக்குறித்துப் பேசுகின்றார். மனிதர்களாகிய நாம் பல வேளைகளில் ஒருவரைக்குறித்து முழுவதும் அறியாமல் அவர்களைப் பற்றிப் பல காரியங்களைப் பேசவும் அவர்களிடம் நாம் காணும் குறைகளைவைத்து அவர்களை நியாயம்தீர்க்கவும் செய்கின்றோம்.
ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எல்லோரையைப் பற்றியும் அவர்களது மனத்தின் எண்ணங்களைக்குறித்தும் நன்கு அறிந்திருந்தார். இதனை நாம், "மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருந்தபடியால், மனுஷரைக் குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சி கொடுக்கவேண்டியதாயிருக்கவில்லை." ( யோவான் 2 : 25 ) என்று வாசிக்கின்றோம். ஆனால் அவர் மனிதர்களைப்போல ஒருவரது குறையை மற்றவர்களிடம் கூறிக்கொண்டிருக்கவில்லை.
இதனையே அவர் இன்றைய தியான வசனத்தில் கூறுகின்றார், "உங்களைக்குறித்துப் பேசவும் நியாயந்தீர்க்கவும் எனக்கு அநேக காரியங்களுண்டு. என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர்; நான் அவரிடத்தில் கேட்டவைகளையே உலகத்துக்குச் சொல்லுகிறேன்." என்று. அதாவது, உங்களைக் குறித்துப் பேச உங்களைப்பற்றி பல காரியங்கள் எனக்குத் தெரியும். ஆனால் நான் அவைகளைப் பேச விரும்பவில்லை, மாறாக என்னை அனுப்பின சத்தியமுள்ள பிதாவாகிய தேவன் என்னிடம் சொல்ல நான் கேட்டவைகளையே உலகத்துக்குச் சொல்லுகிறேன்".
ஆம் அன்பானவர்களே, நாம் பேசவேண்டியக் காரியங்கள் இப்படியே இருக்கவேண்டும். மற்றவர்களைக்குறித்து அரையும் குறையுமாக நாம் கேள்விப்பட்டவற்றைப் பேசுவதையும் அதன் அடிப்படையில் அவர்களை நியாயம் தீர்ப்பதையும் விட்டுட்டு தேவனுக்கேற்ற காரியங்களை மட்டுமே பேச முயற்சியெடுக்க வேண்டும். பிறரைக்குறித்த தேவையற்ற பேச்சுக்கள் மனிதர்களிடையே சண்டையையும் பிரச்சனைகளையுமே வளர்க்கும்.
ஒருவரைக்குறித்து நாம் சில காரியங்களை எளிதில் பேசிவிடலாம். ஆனால் நாம் பேசியது தவறு என்று பின்னர் நாம் உணர்ந்துகொண்டாலும் நாம் மற்றவர்களிடம் சென்று நான் இன்னாரைக்குறித்து பேசியது தவறு என்று கூறிக்கொண்டிருக்க முடியாது. காரணம் நாம் தவறுதலாகக் கூறிய அந்தச் செய்தி அதற்குமுன் பலரிடம் பரிமாறப்பட்டிருக்கும். அதாவது நாம் ஒருவரது நற்பெயருக்கு கெடுதல் உண்டாக்கியிருக்கின்றோம் என்று பொருள்.
எனவே, மற்றவர்களைக்குறித்து நாம் கேள்விப்படுகின்ற காரியங்களை நாம் நமக்குளேயே வைத்துக்கொள்வது நல்லது. இதனால்தான் வேதம் கூறுகின்றது, "தூற்றிக்கொண்டு திரிகிறவன் இரகசியங்களை வெளிப்படுத்துவான்; ஆதலால் தன் உதடுகளினால் அலப்புகிறவனோடே கலவாதே." ( நீதிமொழிகள் 20 : 19 ) அவர்களோடு கலவாமல் இருப்பது மட்டுமல்ல; நாமும் அதுபோல தூற்றிக்கொண்டும் இரகசியக்களை வெளிப்படுத்திக்கொண்டும் வாழாமல் தேவனுக்குச் சித்தமானவைகளை மட்டுமே பேசுபவர்களாக வாழ்வோம்.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
No comments:
Post a Comment