இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Tuesday, August 20, 2024

வேறே ஆண்டவன்மார் எங்களை ஆண்டார்கள்

'ஆதவன்' 💚ஆகஸ்ட் 28, 2024. 💚புதன்கிழமை 💚 வேதாகமத் தியானம் - எண்:- 1,297 


"எங்கள் தேவனாகிய கர்த்தாவே, உம்மையல்லாமல் வேறே ஆண்டவன்மார் எங்களை ஆண்டார்கள்; இனி உம்மை மாத்திரம் சார்ந்து உம்முடைய நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்துவோம்." ( ஏசாயா 26 : 13 )

மனம்திரும்பாத வாழ்க்கை வாழும்போது நாம் பல்வேறு உலக பொருள்களுக்கும் பாவங்களுக்கும் அடிமைகளாக இருக்கின்றோம். அதாவது இவைகள் நம்மை ஆண்டுவருகின்றன என்று பொருள்.  அப்போது நாமும் தேவனாகிய கர்த்தரைத் தேடாமலும் அவர் நம்மை ஆட்சிசெய்ய விடாமலும் வாழ்ந்து வருகின்றோம்.  இதனையே, "எங்கள் தேவனாகிய கர்த்தாவே, உம்மையல்லாமல் வேறே ஆண்டவன்மார் எங்களை ஆண்டார்கள்" என்று இன்றைய வசனத்தில் வாசிக்கின்றோம். 

ஆனால் நாம் கிருபையால் தன்னை அறிந்துகொள்ள தேவன் கிருபை செய்தார்.  வேறு ஆண்டவன்மார்களுக்கு அடிமைகளாக வாழ்ந்த நம்மைத் தேவன் விடுவித்துத் தனக்கு அடிமைகளாக்கினார்.  

இப்படி வேறு ஆண்டவன்மார் தங்களை ஆண்டபோது இஸ்ரவேல் மக்கள் பல்வேறு துன்பங்களுக்குள்ளானதை நாம் நியாயாதிபதிகள் மற்றும், அரசர்கள் நூல்களில் வாசிக்கின்றோம். அதுபோல, அந்த மக்கள் தங்கள் பாவங்களுக்கு மனம்திரும்பி மன்னிப்பு கேட்டபோதெல்லாம் தேவன் அவர்களை மன்னித்து விடுவித்ததையும் பார்க்கின்றோம்.   "தேசத்திலே குடியிருந்த எமோரியர் முதலான சகல ஜனங்களையும் கர்த்தர் நமக்கு முன்பாகத் துரத்தினாரே; ஆகையால் நாங்களும் கர்த்தரைச் சேவிப்போம்." ( யோசுவா 24 : 18 ) என்று இஸ்ரவேல் மக்கள் அறிக்கையிட்டதையும் பார்க்கின்றோம். 

"நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம் என்றான்." ( யோசுவா 24 : 15 ) என்கின்றார் யோசுவா. 

அன்பானவர்களே, இன்று நம்மை அடிமைப்படுத்த உலக அரசர்கள் வருவதில்லை. மாறாக, உலகப் பொருளாசை, புகழாசை, பதவியாசை இவையே அடிமைப்படுத்த முயல்கின்றன.  இவற்றுக்கு நாம் அடிமைகளாகின்றபோது நாம் இவை நம்மை ஆட்சிசெய்யும்படி ஒப்புக்கொடுக்கின்றோம் என்று பொருள். இப்படி இவை நம்மை ஆளவிடாமல் தேவனாகிய கர்த்தரே நம்மை ஆளும்படி ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று இன்றைய வசனம் மூலம் நாம் அறிகின்றோம்.  

ஏசாயா கூறுவதைப்போல, உம்மையல்லாமல் வேறே ஆண்டவன்மார் எங்களை ஆண்டார்கள்; இனி உம்மை மாத்திரம் சார்ந்து உம்முடைய நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்துவோம் என்று நம்மை நாம் முற்றிலும் தேவனுக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுக்க வேண்டியது அவசியம். 

இப்படி நாம் பாவங்களுக்கும் அசுத்தமான வாழ்க்கைக்கும் விலகி கிறிஸ்துவுக்கு நம்மை ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று அப்போஸ்தலராகிய பவுல் நமக்கு அறிவுரைகூறுகின்றார். ஆம், "அக்கிரமத்தை நடப்பிக்கும்படி முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமையாக ஒப்புக்கொடுங்கள்." ( ரோமர் 6 : 19 )

இப்படி நமது உடலை நீதிக்கு அடிமையாக ஒப்புக்கொடுக்கும்போது நாம் இதுவரை நம்மை ஆண்டுவந்த வேறே ஆண்டவன்மார்களை விட்டு விலகுகின்றோம் என்று பொருள். கர்த்தர் நம்மை ஆளும்படி ஒப்புக்கொடுத்த நாம் இனி கர்த்தரையேச் சார்ந்து அவருடைய நாமத்தை மட்டுமே  பிரஸ்தாபப்படுத்துவோம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

No comments: