Thursday, August 15, 2024

தேவனுடைய ராஜ்யம் நமக்குள்

 'ஆதவன்' ஆகஸ்ட் 22, 2024. வியாழக்கிழமை 💚         வேதாகமத் தியானம் - எண்:- 1,291   

"தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது. இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது; இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார்." ( லுூக்கா 17 : 20, 21 )

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்குள் வந்து நம்மை ஆட்சிசெய்வதே தேவனுடைய ராஜ்ஜியம். அது நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்றதே தவிர வெளியில் இருப்பதல்ல.  

இந்த உலகத்தில் பல சர்வாதிகாரிகள் தங்களுக்குக் கீழே ஆட்சி அதிகாரத்தை நிலைநிறுத்தி மொத்த உலகத்தையே ஆட்சிசெய்ய முயன்றனர். ஆனால் அவர்களால் அது கூடாமல்போயிற்று. ஆனால் அமைதியின் அண்ணலான இயேசு கிறிஸ்து அமைதியாக இன்று தனது ராஜ்யத்தை விசுவாசிகளின் உள்ளத்தில் நிறுவி அழியாமல் இருக்கின்றார். 

ஆம், எனவேதான் தேவனுடைய ராஜ்யத்தை எவராலும் அழிக்கமுடியவில்லை. அது ஒரு குறிப்பிட்ட இடத்திலல்ல நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்றது. எனவேதான் இயேசு கூறினார்,  "தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது. இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது" என்று. 

உலக அரசாங்கங்களின் ராஜ்ஜியம் உழைப்பதும் பொருள் சேர்ப்பதும் உண்பதும் குடிப்பதும் தான். ஆனால், தேவனுடைய ராஜ்ஜியம் அப்படிப்பட்டதல்ல என்கின்றார் அப்போஸ்தலரான பவுல், "தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது." ( ரோமர் 14 : 17 ) 

நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமும் நமக்குள் இருக்கின்றது என்றால் நமக்குள் தேவனுடைய ராஜ்ஜியம் இருக்கின்றது என்று பொருள். ஆம் அன்பானவர்களே, சந்தோஷம் சமாதானம் எப்போது நமக்கு வரும்? அது நீதியுள்ள ஒரு வாழ்க்கை வாழும்போது மட்டுமே. தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் நமக்குள் இருந்து நம்மை நடத்துவதால் இந்த சந்தோஷமும் சமாதானமும் நமக்குக் கிடைக்கின்றது. இத்தகைய ஒரு வாழ்வே தேவனுடைய ராஜ்யத்துக்கு ஏற்ற வாழ்வு. 

தேவனுடைய ராஜ்ஜியம் நமக்குள் இருக்குமானால் நாம் பரலோக ராஜ்யத்துக்குத் தூரமானவர்கள் அல்ல. ஆவியானவருக்கு நம்மை ஒப்புக்கொடுத்து அவரது வழிநடத்துதலை வேண்டுவோம். கிறிஸ்து நமக்குள் வந்து தனது ராஜ்யத்தை நமக்குள் நிறுவிட இடம்கொடுப்போம். இதோ, தேவனுடைய ராஜ்யம் நமக்குள் தான் இருக்கின்றது. 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

No comments: