இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Tuesday, August 06, 2024

போரடிக்கிற புதிதும் கூர்மையுமான இயந்திரம்

 ✉'ஆதவன்' 💚ஆகஸ்ட் 14, 2024. 💚புதன்கிழமை 💚 வேதாகமத் தியானம் - எண்:- 1,283   

"உன்னோடே போராடினவர்களைத் தேடியும் காணாதிருப்பாய்; உன்னோடே யுத்தம்பண்ணின மனுஷர் ஒன்றுமில்லாமல் இல்பொருளாவார்கள்." ( ஏசாயா 41 : 12 )

பழைய ஏற்பாட்டுக்கும் புதிய ஏற்பாட்டுக்கும் அதிக வித்தியாசம் உண்டு. இன்றைய வசனத்துக்கு நாம் பழைய ஏற்பாட்டு முறையில் பொருள்கொண்டு நம்மை எதிர்த்தவர்கள் எல்லோரும் அழிந்துபோகவேண்டும் என்று எண்ணுவோமானால் நாம் மெய்யான கிறிஸ்தவர்கள் அல்ல. 

ஏனெனில், நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எதிரிகளுக்காகவும், நம்மை அவமதிப்பவர்களுக்காகவும் வேண்டுதல்செய்ய நமக்கு அறிவுறுத்தியுள்ளார். மட்டுமல்ல, அவரே தனது பாடுகளின்போது அதனையே செய்தார். "பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே" ( லுூக்கா 23 : 34 ) என்று தன்னைச் சிலுவையில் அறைந்தவர்களுக்காக பிதாவிடம் மன்னிப்பு வேண்டினார். 

எனவே இன்றைய தியான வசனம் நம்மோடு போராடுபவர்கள் யுத்தம் செய்பவர்கள் என்று கூறுவது நம்மைப் பாவத்தில் விழவைக்கும்  சத்துருவானவனையே. ஆம் அன்பானவர்களே, நாம் பாவத்தை எதிர்த்து போராடி அதனை மேற்கொள்வதுதான் ஆவிக்குரிய வளர்ச்சி. அப்படி உன்னோடே போராடின பாவக் காரியங்களைத்  தேடியும் காணாதிருப்பாய்; உன்னோடே யுத்தம்பண்ணின பழைய பாவங்கள் அனைத்தும் ஒன்றுமில்லாமல் இல்பொருளாகும் என்கிறார் தேவனாகிய கர்த்தர். 

அப்படிப் பாவத்தை மேற்கொள்ள "உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்." ( ஏசாயா 41 : 13 ) என்கிறார் கர்த்தர். 

இப்படிப் பாவங்களை நாம் மேற்கொள்ளம்போது தான் தேவன் நம்மைப் பயன்படுத்த முடியும். "இதோ, போரடிக்கிறதற்கு நான் உன்னைப் புதிதும் கூர்மையுமான பற்களுள்ள இயந்தரமாக்குகிறேன்; நீ மலைகளை மிதித்து நொறுக்கி, குன்றுகளைப் பதருக்கு ஒப்பாக்கிவிடுவாய்." ( ஏசாயா 41 : 15 ) என்று இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து கூறப்பட்டுள்ளது. 

ஆம்  அன்பானவர்களே, நமது சுய பலத்தால் பாவங்களை நாம் மேற்கொள்ள முடியாது. தேவனது ஒத்துழைப்பு நமக்குத் தேவையாயிருக்கிறது. தேவனிடம் உண்மையான விருப்பத்தோடு வேண்டுவோமானால் தேற்றரவாளரான பரிசுத்த ஆவியானவரை அவர் நமக்குத் தருவார். "அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்". ( யோவான் 16 : 8 ) இப்படி உணர்த்தி நம்மைப் பாவத்தை மேற்கொள்ளச் செய்வார். 

அப்போதுதான் நாமும் இதுவரை நம்மை அடிமையாக்கி வைத்திருந்த மலைபோன்ற பாவங்களை மிதித்து நொறுக்கி, அவைகளை பதருக்கு ஒப்பாக்கி போரடிக்கிறதற்கு உதவும் புதிதும் கூர்மையுமான பற்களுள்ள இயந்தரமாக்கப்பட்டு கர்த்தருக்கென்று பயன்படமுடியும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்        

No comments: