இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Saturday, August 17, 2024

தாய் குழந்தையைச் சேர்த்துக்கொள்வதுபோல

 'ஆதவன்' 💚ஆகஸ்ட் 26, 2024. 💚திங்கள்கிழமை        வேதாகமத் தியானம் - எண்:- 1,295 


"அவருடைய கோபம் ஒர் இமைப்பொழுதே, அவருடைய தயவோ ஆயுள் காலம் வரை; சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்." ( சங்கீதம் 30 : 5 )

மனிதர்களுடைய பலவீனம் தேவனுக்குத் தெரியும். அவர் எப்போதும் மனிதர்கள்மேல் கோபம் கொள்வதில்லை. எனவே, நமது தப்பிதங்களுக்கு அவர் தண்டனை கொடுத்தாலும் ஒரு தாய் தவறு செய்த குழந்தையை மீண்டும்  சேர்த்துக்கொள்வதுபோல அணைத்துச் சேர்த்துகொள்கின்றார். "நான் எப்போதும் வழக்காடமாட்டேன்; நான் என்றைக்கும் கோபமாயிருப்பதுமில்லை; ஏனென்றால், ஆவியும், நான் உண்டுபண்ணின ஆத்துமாக்களும், என் முகத்துக்கு முன்பாகச் சோர்ந்துபோகுமே." ( ஏசாயா 57 : 16 ) என்று கூறுகின்றார் தேவனாகிய கர்த்தர். 

இதனையே இன்றைய தியான வசனத்தில் நாம் "சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்." என்று வாசிக்கின்றோம்.  ஒரு இரவு முடிந்து பகல் விடிவதைப்போல நமது துக்கங்கள் துயரங்களை அவர் மாற்றுவார். காரணம், "அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது." ( லுூக்கா 1 : 50 ) என்று கூறப்பட்டுள்ளது. அதாவது நாம் தேவனுக்கு பயப்படும் ஒரு வாழ்க்கை வாழும்போது இது சாத்தியமாகின்றது. 

இதனையே நாம் மேலும் ஏசாயா நூலில் வாசிக்கின்றோம், "அற்பகாலம் மூண்ட கோபத்தினால் என் முகத்தை இமைப்பொழுது உனக்கு மறைத்தேன்; ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன் என்று கர்த்தராகிய உன் மீட்பர் சொல்லுகிறார்." ( ஏசாயா 54 : 8 ) ஆம் அன்பானவர்களே, "அவருடைய இரக்கங்கள் மகா பெரியது" (1 நாளாகமம் 21:13) அவரது கோபமோ அற்பகாலம்தான்.

இன்று ஒருவேளை பல்வேறு துன்பங்கள் நம்மை நெருக்கிக்கொண்டிருக்கலாம். ஆனால் அவை நிரந்தரமல்ல. தேவனுக்கு ஏற்ற வாழ்க்கை வாழ்வோமானால்  அவரது இரக்கங்கள் நமக்கு நிச்சயம் உண்டு. மனம்திரும்பிய ஒரு வாழ்க்கை வாழ விரும்புவோமானால் அவரது இரக்கம் நமக்கு நிச்சயம் உண்டு.  

இஸ்ரவேல் மக்கள் பல்வேறு முறை தேவனுக்கு எதிராக செயல்பட்டு எதிரி இராஜாக்களிடம் அடிமைகளாக ஒப்புக்கொடுக்கப்பட்டபோதும் அவர்கள் மனம் திரும்பியபோது தேவன் அவர்களை விடுவித்து இரட்சித்தார். அதுபோலவே, இன்று நமது பாவ வாழ்க்கை நமக்குப்  பல்வேறு  துன்பங்களை வாழ்வில் கொண்டு வந்திருக்கலாம். "அவருடைய கோபம் ஒர் இமைப்பொழுதே, அவருடைய தயவோ ஆயுள் காலம் வரை" என்று இன்றைய தியான வசனம் சொல்வதற்கேற்ப நாம் மனம்திரும்பும்போது நமது ஆயுள் காலம்வரை நமக்கு அவர் இரக்கம் காட்டுவார். 

தகப்பன் தன்  பிள்ளையை நேசிப்பதால்தான் தண்டிக்கின்றானேத்தவிர ஒரேயடியாக அழித்துவிடவேண்டுமென்று தண்டிப்பதில்லை. ஆம் அன்பானவர்களே, தேவனிடம் திரும்புவோம்.  அப்போது சாயங்காலத்தில் அழுகை தங்கினாலும்  விடியற்காலத்திலே நமது வாழ்வில் களிப்புண்டாகும்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

No comments: