Wednesday, August 14, 2024

போலிகளைப் புறக்கணிப்போம்

'ஆதவன்' 💚ஆகஸ்ட் 21, 2024. 💚புதன்கிழமை 💚       வேதாகமத் தியானம் - எண்:- 1,290   

"பரலோகத்தில் உங்களுக்காக வைத்திருக்கிற நம்பிக்கையினிமித்தம், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தி, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டுதல்செய்கிறோம்." ( கொலோசெயர் 1 : 4, 5 )

இன்றைய தியான வசனம் நாம் எப்படிப்பட்ட ஊழியர்களை நமக்கு வழிகாட்டிகளாகத் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்கு ஒரு உதாரணமாக உள்ளது. 

நம்மைக்குறித்து பரலோகத்தில் ஒரு நம்பிக்கை உள்ளது. அந்த நம்பிக்கையின்படி நாம் வாழும்போது பரலோகத்தில் மகிழ்ச்சியுண்டாகின்றது. "மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப்பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( லுூக்கா 15 : 7 ) என்று இயேசு கிறிஸ்துக் கூறவில்லையா?

அந்த "நம்பிக்கையினிமித்தம், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தி, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டுதல்செய்கிறோம்." என்று அப்போஸ்தலராகிய பவுல் கூறுகின்றார். 

விசுவாசிகளுக்கு என்னென்ன காரியங்கள் வேண்டும் என்று அவர் ஜெபிக்கின்றார் என்றும் கூறுகின்றார். "நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும், சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும், சந்தோஷத்தோடே கூடிய எல்லாப்பொறுமையும் நீடியசாந்தமும் உண்டாவதற்கு, மகிமையான அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படவும், உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம். (கொலோசெயர் 1:9-11)

ஆனால் இன்றைய பிரபல ஊழியர்களும் கன்வென்சன் பிரசங்கிகளும் டி.வி ஊழியர்களும் என்னென்ன காரியங்களுக்காக ஜெபிக்கின்றார்கள்? தங்களது விசுவாசிகளுக்கு தொழில் முன்னேற்றமடைய, சொத்து வாங்க, வீடுகட்ட, கார் வாங்கிட  இன்னும் இதுபோல என்னென்ன உலக ஆசீர்வாதங்கள் உண்டோ அனைத்துக்காகவும் ஜெபித்துக் கொண்டிருக்கின்றார்கள். மட்டுமல்ல, வேத சத்தியங்களை மறைத்துப் பிரசங்கித்து விசுவாசிகள்  பரலோகத்துக்குச் செல்லத் தடையாக இருக்கின்றனர். 

ஒவ்வொரு ஆண்டு துவக்கத்திலும் மாதத்  துவக்கத்திலும், "சென்ற ஆண்டைப்போல /மாதத்தைப்போல நீ துன்பத்தைக் காணமாட்டாய்... கர்த்தர் உன் கண்ணீர்களை பார்க்கின்றார். இந்த மாதம் / வருடம் உனக்கு ஆசீர்வாதமானது" என்கின்றார்கள். அப்படியானால் இவர்கள் சென்ற மாதம் / ஆண்டு சொன்னது பொய்யா அல்லது இப்பொது கூறுவது பொய்யா என்று மக்களும் சிந்திப்பதில்லை.  

அன்பானவர்களே, நாம் தேடவேண்டியது இப்படிப்பட்ட போலிகளையல்ல; இன்றைய வசனத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் வேண்டுதல்செய்ததுபோல  நமக்காக உண்மையாக வேண்டுதல் செய்யும் ஊழியர்களையே. 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

No comments: