Monday, August 19, 2024

அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை

'ஆதவன்' ஆகஸ்ட் 27, 2024. 💚செவ்வாய்க்கிழமை 💚 வேதாகமத் தியானம் - எண்:- 1,296 


"நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை." ( புலம்பல் 3 : 22 )

எரேமியா மிகப்பெரிய தீர்க்கதரிசி, அதே வேளையில் மிகப்பெரிய துன்பங்களையும் வாழ்வில் அனுபவித்தவர். புதைகின்ற சேறு நிறைந்த கிணற்றில் போடப்பட்டு அதில்  அழுந்தி பரிதபித்தவர். ஆனால் அவர் தனது அனுபவத்தில் கண்டறிந்த உண்மைதான், "நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை." என்பது. எனவே, இது வெற்று வார்த்தையல்ல. 

மட்டுமல்ல, அவர் தனது அனுபவத்தின்மூலம் துணிந்து கூறுகின்றார், "கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கை கொண்டிருப்பேன். தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர்". ( புலம்பல் 3 : 24, 25 ) சிறிய சிறிய துன்பங்களை அனுபவித்தவர்; அவற்றிலிருந்து தேவன் அவரை விடுவித்த வல்லமையினை அனுபவித்தவர்; எனவே, பெரிய துன்பம் வந்தபோது கூறுகின்றார், "அவரிடத்தில் நம்பிக்கை கொண்டிருப்பேன்" என்று.

வேதாகமத்தில் நாம் இத்தகைய வாசகங்களை பல இடங்களில் பல பரிசுத்தவான்கள் அறிக்கையிடுவதை வாசித்திருக்கின்றோம். இத்தகைய வசனங்கள் நமக்கு நம்பிக்கையும் தேவனுக்குக் காத்திருக்கும் பெலத்தையும் அளிக்கின்றன. காரணம், இந்த உலகத்தில் நமக்கு துன்பங்களும் சோதனைகளும் உண்டு என்று இயேசு  கிறிஸ்துவே கூறியிருக்கின்றார். ஆம், "என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்." ( யோவான் 16 : 33 ) அவர் உலகத்தை ஜெயித்ததைப்போல நாமும் ஜெயிக்கவேண்டும் என்று அவர் எதிர்பார்க்கின்றார்; எனவே, அதற்கான பலத்தையும் நமக்குத் தருகின்றார். 

சில ஆசீர்வாத ஊழியர்கள் பொய்யாகக்  கூறுவதுபோல, மனம்திரும்பி  இயேசு கிறிஸ்துவிடம் வந்தவுடன் அனைத்துத் துன்பங்களும் மறைந்துவிடும் என்று நாம் எண்ணிவிடக்கூடாது. ஆனால்,  ஒன்று நிச்சயம், துன்பங்கள் நெருக்கினாலும்  "ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார். அவர் சஞ்சலப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி இரங்குவார்." ( புலம்பல் 3 : 31, 32 ) இதுவே கிறிஸ்தவ நம்பிக்கை. 

ஆம் அன்பானவர்களே, நமது தேவன் கிருபை நிறைந்தவர். எனவே, "நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை." ( புலம்பல் 3 : 22 ) என்று கூறுகின்றார் எரேமியா. 

இதனை வாசிக்கும் அன்பு சகோதரனே, சகோதரியே, இன்று ஒருவேளை நீங்கள் துன்பத்தையும் பாடுகளையும் பிரச்சனைகளையும் சந்தித்துக்கொண்டிருக்கலாம். ஆனால் அவை நிரந்தரமல்ல. எந்நேரமும் கர்த்தரது கிருபையைச் சார்ந்துகொள்ளவேண்டியதே நாம் செய்யவேண்டியது. அப்படி நாம் தேவ கிருபையினைச் சார்ந்து வாழும்போது நமது பலவீனத்தில் நாம் தேவ பெலனை அனுபவிக்கமுடியும். 

"என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்"   ( 2 கொரிந்தியர் 12 : 9 ) என்று அப்போஸ்தலனாகிய பவுலிடம் கிறிஸ்து கூறவில்லையா? எனவே அவர் கூறுவதுபோல, கிறிஸ்துவின் வல்லமை நம்மேல் தங்கும்படி, நம் பலவீனங்களைக்குறித்து நாம் சந்தோஷமாய் பெருமைகொள்வோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

No comments: