இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Saturday, August 03, 2024

வானம் எனக்குச் சிங்காசனம்

 'ஆதவன்' 💚ஆகஸ்ட் 11, 2024.  ஞாயிற்றுக்கிழமை 💚  வேதாகமத் தியானம் - எண்:- 1,280        


"வானம் எனக்குச் சிங்காசனம், பூமி எனக்குப் பாதப்படி; நீங்கள் எனக்குக் கட்டும் ஆலயம் எப்படிப்பட்டது? நான் தங்கியிருக்கும் ஸ்தலம் எப்படிப்பட்டது?" ( ஏசாயா 66 : 1 )

இன்றைய தியான வசனம் நாம் பல்வேறுமுறை கேட்ட வசனம்தான். எனினும், இந்த வசனத்தை இதன் முழு அர்த்தம் தெரிய தொடர்ச்சியாக அடுத்த வசனத்தையும் நாம் வாசிக்கவேண்டியது அவசியம். 

அடுத்த வசனம் சொல்கின்றது, "என்னுடைய கரம் இவைகளையெல்லாம் சிருஷ்டித்ததினால் இவைகளெல்லாம் உண்டாயின என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆனாலும் சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்." ( ஏசாயா 66 : 2 ) அதாவது வானம், வானத்திலுள்ள அனைத்துப் படைப்புகளான விண்மீன்கள், கோள்கள், அண்டவெளிகள் இவை அனைத்தையும் நான்தான்  படைத்துள்ளேன். இவை எனக்குச் சிம்மாசனம்போல இருக்கின்றன.  

"ஆனாலும் சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்." என்று இந்த வசனம் சொல்கின்றது. இதன்பொருள், இப்படி இவையெல்லாம் எனக்குச் சிம்மாசனம்போல இருந்தாலும் இவைகள் அனைத்தையும்விட சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன் என்கிறார் தேவனாகிய கர்த்தர். 

இப்படித் தேவன் மனிதர்களை நோக்கிப்பார்க்கக் காரணம், தேவன் மனிதர்களை அவரது மற்ற படைப்புக்களைவிட மேலானவர்களாகக்  கருதுவதால்தான். எனவே தேவனது ஆகாயப் படைப்புக்கள் தேவனுக்குச் சிம்மாசனம்போல இருந்தாலும் அவர் மனிதர்களுக்குள் வசிக்கவே ஆசைப்படுகின்றார். ஆம், "ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 7 : 48 ) அவர் ஆகாயத்திலோ மனிதர்களால் கட்டப்படும் ஆலயங்களில் வசிப்பதையோவிட மனிதர்களுக்குள் வசிக்கவே ஆசைப்படுகின்றார். 

ஆம் அன்பானவர்களே, எனவேதான் நாம் நமது உடலை தேவன் வாழும் வகையில் பரிசுத்தமாகக் காத்துக்கொண்டு  வாழவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. 

நினைத்துப்பாருங்கள், பெரிய பெரிய விஞ்ஞானிகளாலும் பகுத்து உணரமுடியாத அண்டசராசரங்களைவிட தேவன் மனிதர்களை அதிகம் விரும்புகின்றார். பூமி அவரது பாதப்படியாக இருந்தாலும் அதில் வாழும் சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, அவரது வசனத்துக்கு நடுங்குகிறவர்களையே நோக்கிப்பார்க்கின்றார்.  எனவே, நொறுக்கப்பட்ட இதயத்தோடு தேவனது வசனத்துக்கு நடுங்கி வாழ்வோமானால் தேவன் நமக்குள் வந்து தங்குவார். 

தேவன் விண்ணுலகமான சிங்காசனத்தில் அமர்ந்துகொண்டு அதிகாரத்தோடு ஆட்சி செய்வதைவிட பாதப்படியான பூமியில் நம்முடன் வாசிக்கவிரும்புவது எத்தனைப் பெரிய  ஆச்சரியம். அவரது விருப்பத்தை நிறைவு செய்யும் வாழ்க்கை வாழ்வோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்            

No comments: