ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் :-
சகோ. எம்.ஜியோ பிரகாஷ்
1947 ஆம் ஆண்டு கும்ரன் குகையில் ஆடுமேய்த்த சிறுவர்கள் கண்டுபிடித்த மண்பாண்டங்களில் பல ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் எழுதப்பட்ட வேதாகம தோல்சுருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் தாவீது எழுதிய சங்கீதம் ஒன்றும் இருந்தது. வேதாகமத்தில் இல்லாத அந்தச் சங்கீதம் இதோ:-
நிச்சயமாக ஒரு புழு உம்மைத் துதிக்க முடியாது; கல்லறைப் புழு உம் இரக்கத்தைப் புகழ்ந்திடாது. ஆனால் ஜீவனுள்ளோர் உம்மைத் துதிக்கமுடியும்!!. தள்ளாடுகிறவன்கூட உம்மைப் போற்றிப் புகழ முடியும்.
உமது இரக்கத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தி உமது நீதியால் அவர்களை மகிழ்விக்கின்றீர். ஏனெனில் ஜீவனுள்ளோரின் ஆன்மாக்கள் உமது கரங்களில் உள்ளன. மாம்சமான அனைத்துக்கும் உயிரளித்தவர் நீரே.
உமது நன்மைக்கேற்ப, உமது இரக்கம் நீதிக்கேற்ப எம்மிடம் செயல்புரியும்.
கர்த்தரின் நாமத்தின்மேல் பற்றுதல் கொள்வோரின் குரலை அவர் கேட்கிறார். தனது இரகத்தினால் அவர்களைக் கைவிடாமல் காக்கின்றார்.
நீதியை நடப்பிக்கும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவரே பரிசுத்தவான்களை தனது அன்பினாலும் இரகத்தினாலும் முடிசூட்டுகின்றார்.
என் ஆன்மா கர்த்தரது நாமத்தை உயர்த்திப் போற்றுகின்றது. அவரது அன்பின் கிரியைகளை புகழ்ந்து பாடுகின்றது. உமது நீதியைப் போற்றிப் புகழ்ந்து பாடுவதற்கு முடிவே இல்லை.
எனது பாவங்களும் மீறுதல்களும் என்னை மரணத்துக்குச் சமீபமாக இழுத்துச் சென்றன. ஆனால் கர்த்தாவே, உமது மகா கிருபையினாலும் நீதியினாலும் நீரே என்னை மீட்டுக்கொண்டீர்.
தேவனே! உண்மையிலேயே உமது நாமத்தை நான் நேசிக்கிறேன். உமது பாதுகாப்பில் அடைக்கலம் காண்கிறேன். உமது வல்லமையினை நினைவுகூரும்போது எனது இருதயம் தைரியம் கொள்கின்றது. உமது இரக்கத்தின்மேல் சாய்ந்துகொள்கிறேன்.
என் பாவங்களை மன்னியும், கர்த்தாவே என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும். என் ஆத்துமாவை உமது உண்மையிலும் நீதியிலும் காத்து நான் அழிந்திடாமல் பாதுகாத்தருளும்.
அலகை என்னை மேற்கொள்ளாமலும், அசுத்தஆவி என்னை வேதனைப்படுத்தி என் எலும்புகளை மேற்கொள்ளாமலும் இருப்பதாக! தேவனே, நீரே என்புகழ்ச்சி; நாள்முழுதும் நீரே என் நம்பிக்கை.
உமது இரக்கத்தின் மேன்மையைக்கண்டு ஆச்சரியப்படும் என் சகோதரர்கள் என்னோடும் என் தகப்பன் வீட்டாரோடும் அக்களிப்பார்களாக.
தேவனே! நான் எப்போதும் உம்மிலே மகிழ்ந்திருப்பேன்.!
No comments:
Post a Comment