நாம் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருப்போம்

 ஆதவன் 🖋️ 586 ⛪ செப்டம்பர் 05,  2022 திங்கள்கிழமை

"தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே."( 2 கொரிந்தியர் 6 : 16 )

நமது தேவன் மனிதர்களோடு உறவுகொண்டு வாழ விரும்புகின்றவர். அவர் பேசக்கூடாத ஒரு சிலையல்ல. இந்த விருப்பத்தில் தேவன் மனிதர்களோடு மனிதனாக உலாவியதை நாம் ஆதியாகமத்தில் வாசிக்கின்றோம். ஆதாம் ஏவாளோடு அவர் ஏதேன் தோட்டத்தில் உலாவினார். "பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள்." ( ஆதியாகமம் 3 : 8 ) என வாசிக்கின்றோம்.

உயிருள்ள மனிதரோடுதான் உறவுகளை, நமது உணர்ச்சிகளைப் பரிமாறிக்கொள்ள முடியும். நாம் விக்கிரகங்களை வணங்கும்போது நமது இருதயமும் கண்களும் அந்த விக்கிரகத்தை நோக்குமேயல்லாமல் அதற்குமேலாக தேவனை நோக்காது; நமது ஆத்துமாவில் அது எந்த உணர்ச்சியையும் தூண்டாது. 

இன்றைய வசனம், "நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே" என்று கேள்வி எழுப்புகின்றது. ஆம், நாமே ஜீவனுள்ள தேவன் வசிக்கும் ஆலயம்.  இதனை 1 கொரிந்தியர் 3:16, 6:19 வசனங்களிலும் நாம் வாசிக்கலாம். இந்த ஆலயத்தை நாம் கெடுத்தால் தேவன் நம்மைக் கெடுப்பார்.  "ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்." ( 1 கொரிந்தியர் 3 : 17 ) என்றும் வாசிக்கின்றோம். தேவனது ஆலயமாகிய நமது உடலாகிய ஆலயத்தை விக்கிரக ஆராதனை செய்யும்போது நாம் கெடுக்கின்றோம். 

மேலும், வேதாகம அடிப்படையில் சிலைவழிபாடு எனும் விக்கிரக ஆராதனை என்பது வெறும் சிலையை வழிபடுவதை மட்டும் குறிக்கவில்லை. மாறாக, தேவனுக்குக் கொடுக்கவேண்டிய முக்கியத்துவத்தை உலக பொருட்களுக்கு கொடுப்பதும் சிலைவழிபாடுதான். ஆம், பொருளாசையும் சிலைவழிபாடே. 

"விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே." ( எபேசியர் 5 : 5 ) என எழுதுகின்றார் அப்போஸ்தலரான பவுல். 

அதாவது, இன்றைய தியானத்துக்குரிய வசனத்தின் ஒட்டுமொத்தக் கருத்து, நமது உடல் தேவனுடைய ஆலயம். இதனை தேவன் தனக்காக முற்றிலும் நாம் பயன்படுத்த விரும்புகின்றார். இந்த உடலில் மனிதர்களோடு மனிதனாக வாழ்ந்து தன்னை வெளிப்படுத்த விரும்புகின்றார். எனவே, அவருக்குக் கொடுக்க வேண்டிய முதலிடத்தை அவருக்குக் கொடுக்கவேண்டும். இதற்கு மிஞ்சியது அனைத்துமே சிலைவழிபாடுதான். 

அதனையே இன்றைய வசனம், தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? என்று சொல்லுகின்றது. ஆம், கிறிஸ்துவுக்கு உரியவர்கள் என்றால் அவருக்கே நமது உடலாகிய ஆலயத்தில் முதலிடம் கொடுக்கவேண்டும். அப்படி நாம் வாழும்போது மட்டுமே அவர் நமக்குள் உலாவி நமது தேவனாக இருப்பார்; நாம் அவரது மக்களாக இருப்போம். 

இன்று பெரும்பாலான கிறிஸ்தவர்கள் தாங்கள் மண்ணினால் செய்யப்பட்டச் சிலைகளை வாங்காததால் தாங்கள் சிலைவழிபாடு செய்யவில்லை என்று தவறாக எண்ணிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் மிகப்பெரிய பொருளாசையில் சிக்கி இருக்கின்றனர். பொருளுக்காகவும், புகழுக்காகவும், பதவிக்காகவும் அலையும் எல்லோருமே விக்கிரக ஆராதனைக்காரர்கள்தான்.

அன்பானவர்களே, தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது?  தேவன் நமக்குள்ளே வாசம்பண்ணி, உலாவி, நமது தேவனாயிருக்கவும் நாம் அவரது  ஜனங்களாயிருக்கவும் இடம்கொடுப்போம். அப்போது மட்டுமே நாம் தேவன் சொன்னபடி, ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருப்போம். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                                               தொடர்புக்கு- 96889 33712                                                

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்