Thursday, September 22, 2022

முன்னோர்களின் சாபங்களும் நம்மைத் தொடராமல் பாதுகாக்கப்படுகின்றோம்

 ஆதவன் 🖋️ 606 ⛪ செப்டம்பர் 25,  2022 ஞாயிற்றுக்கிழமை

"பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின என்று அந்நாட்களில் சொல்லமாட்டார்கள். அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தமே சாவான்; எந்த மனுஷன் திராட்சக்காய்களைத் தின்பானோ அவனுடைய பற்களே கூசிப்போகும்." ( எரேமியா 31 : 29, 30 )

புதிய உடன்படிக்கைக்கால மேலான ஒரு ஆசீர்வாதத்தை எரேமியா தீர்க்கதரிசி இங்குக் கூறுகின்றார். தாய் தகப்பன் செய்யும் மீறுதல்கள் பிள்ளைகளைப் பாதிக்கும் என்பது பழைய ஏற்பாட்டு கற்பனை. "குற்றவாளியைக் குற்றமற்றவனாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர்" ( யாத்திராகமம் 34 : 7 ) என்று கூறப்பட்டுள்ளது.

"பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம், நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்." ( உபாகமம் 5 : 9 )

இதனையே சாபங்கள் என்று கூறுகின்றோம். அதனையே இங்கு "பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின" என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் பழைய முறைமை மாற்றப்படும் என்று எரேமியா கூறுகின்றார். 

தாய் தகப்பன் செய்த பாவமல்ல, அவனவன் செய்த பாவமே அவனைத் தண்டிக்கும் என்கின்றார். அதனையே,  "அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தமே சாவான்; எந்த மனுஷன் திராட்சக்காய்களைத் தின்பானோ அவனுடைய பற்களே கூசிப்போகும்." என்று கூறப்பட்டுள்ளது. 

ஆம், இன்று நாம் கிறிஸ்து இயேசுவினால் நமது பாவங்கள் கழுவப்பட்டு, கிறிஸ்துவுக்குள் புதுப்பிறப்பு அடைந்திருந்தோமானால் முன்னோர்களின் சாபம் நம்மைத் தொடராது. ஏனெனில், "மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்." ( கலாத்தியர் 3 : 13 )

பாவங்களிலிருந்த்து நாம் மீட்கப்பட்டு கிறிஸ்துவின் மறுபிறப்பு அனுபவத்தைப்பெறும்போது மட்டுமே நமக்கு இந்த பெரும் பாக்கியம் கிடைக்கின்றது. கிறிஸ்துவின் மீட்பு மற்றும் மறுபிறப்பு அனுபவத்தைப் பெறாதவர்கள் இன்னும் நியாயப்பிரமாணத்துக்கு உட்பட்டிருப்பதால் அவர்களை முன்னோர்களின் சாபம் தொடரும். 

கிறிஸ்துவின் கிருபையினால் உண்டான மீட்பினை பெறாமல் வெறும் கட்டளைகளையே நம்பி கைக்கொண்டிருப்பது (அதாவது நியாயப்பிரமணத்தையே நம்பியிருப்பது) ஒருவரை சாபத்துக்கு நீங்கலாக்காது. ஒருவருக்குள் கிறிஸ்து வரும்போது மேலான கட்டளைகளுக்கு நேராக அவரை நடத்துவார். இதனையே அப்போஸ்தலராகிய பவுல் அடிகள், "நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள் என்று எழுதியிருக்கிறதே." ( கலாத்தியர் 3 : 10 )

இது ஏனென்றால், கட்டளைகளுக்குக் கீழ்ப்படிபவன் அப்படி ஒரு கட்டளை இருப்பதால் கீழ்படிகின்றான். ஆனால் மறுப்பிற்ப்பு அனுபவம் பெற்றவர்கள் தேவனுடைய ஆவியானவரால் நடத்தப்படுவதால் இயல்பிலேயே நீதி, நேர்மையாய் நடக்கிறார்கள். தேவ அன்புடன் அப்படிச் செய்கிறார்கள். 

அன்பானவர்களே, கிறிஸ்து இயேசுவின் இரத்தத்தால் கழுவப்படும்போது கிடைக்கும் மேலான அனுபவம் இதுதான். பாவங்கள் கழுவப்படுவதுமட்டுமல்ல முன்னோர்களின் சாபங்களும் நம்மைத் தொடராமல் பாதுகாக்கப்படுகின்றோம். கிறிஸ்துவுக்கு நம்மை ஒப்புக்கொடுத்து பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுவோம். அவர் நம்மை மேலான ஆசீர்வாதங்களுக்குள் நடத்துவார்.

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                                           தொடர்புக்கு- 96889 33712                             

No comments: