இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Monday, September 05, 2022

பாளயத்துக்குப் புறம்பே அவரிடத்திற்குப் புறப்பட்டுப் போகக்கடவோம்

ஆதவன் 🖋️ 589 ⛪ செப்டம்பர் 08,  2022 வியாழக்கிழமை

"அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்" ( கலாத்தியர் 1 : 4 )

இயேசு கிறிஸ்து இந்த பூமியில் மனிதனாகப் பிறந்ததற்கான காரணத்தை அப்போஸ்தலரான பவுல் இன்றைய வசனத்தில் கூறுகின்றார்.  அதாவது இந்த பொல்லாத உலக காரியங்களிலிருந்து நம்மை விடுவித்து; உலக பாவ இச்சைகள்,  நாட்டங்களிலிருந்து நம்மை விடுவித்து,  நம்மைக் காக்கும்படி பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படி தன்னை ஒப்புக்கொடுத்தார். 

பல்வேறு நீதிச் சட்டங்களை தேவன் கொடுத்திருந்தும் மனிதர்களால் அவற்றின்படி வாழ முடியவில்லை. மேலும், இந்த உலக மனிதர்களும்கூட பல நீதிகளைக் கூறியுள்ளனர்.  திருக்குறள், நன்னெறி, ஆத்திச்சூடி நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது,      திரிகடுகம்,   ஆசாரக்கோவை,  பழமொழி நானூறு,  சிறுபஞ்சமூலம்,  முதுமொழிக்காஞ்சி எனத் தமிழில் உள்ளதுபோல வேறு எந்த  மொழியிலும் நீதிநூல்கள் இல்லை. அனால் இவைகளால் மனிதர்களை நல்வழிப்படுத்த முடியவில்லை. உலகத்திலிருந்து விடுவிக்க முடியவில்லை. 

நீதி போதனைகள் மனிதர்களை நல்வழிப்படுத்தி தேவனுக்கு ஏற்புடையவர்கள் ஆக்கிட முடியாது. எனவேதான் இயேசு கிறிஸ்து உலகினில் பிறந்து இரத்தம் சிந்தி பாடுபட்டு நித்திய மீட்பினை ஏற்படுத்தினார். அவர்மேல் விசுவாசம்கொண்டு அவர் தரும் மீட்பினைப் பெறும்போது மட்டுமே நாம் பாவத்திலிருந்தும் உலக ஆசைகளிலிருந்தும் விடுதலை பெறமுடியும்.    

ஆனால் இந்த சத்தியங்கள் பவுல் அடிகள் காலத்திலேயே அப்போதிருந்த ஊழியர்களால் மறைக்கப்பட்டன. இப்போதுள்ள பண ஆசை ஊழியர்கள் மனிதர்களுக்கேற்பவும்  , மனிதர்களைத் திருப்திப்படுத்தவும்  பிரசங்கிப்பதுபோல வேத சத்தியங்களைத் திரித்தும் மறைத்தும் பிரசங்கித்தார்கள். ஆனால் அப்போஸ்தலரான பவுல் தான் அப்படிப்பட்டவனல்ல என்று கூறுகின்றார். 

"இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப்பார்க்கிறேன்? நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே." ( கலாத்தியர் 1 : 10 ). ஆம், மனிதரைப் பிரியப்படுத்தும்படி ஊழியம் செய்பவன் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்ல.

ஆசீர்வாதங்களையே பிரசங்கிப்பவன் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்ல. வேத சத்தியங்களின்படி கிறித்து ஏன் உலகத்தில் வந்தார் என்பதை எடுத்துக்கூறி, அவர் அளிக்கும் மீட்பினையும் மக்களுக்கு எடுத்துச்சொல்லி அதனை அடைந்திட மக்களுக்கு  வழி காட்டுபவனே கிறிஸ்துவின் ஊழியன். 

எனவே, உலக ஆசீர்வாதம் பெறுவதையே குறிக்கோளாகக்கொண்டு சத்தியத்தை மறுதலிக்கும்  ஊழியர்களைத் தேடி ஓடாமல் கிறிஸ்துவை நோக்கி ஓடக்கடவோம்.  இதனை எபிரெய  நிருப ஆசிரியர் அழகாகக் கூறுகின்றார், "அந்தப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார். ஆகையால், நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து, பாளயத்துக்குப் புறம்பே அவரிடத்திற்குப் புறப்பட்டுப் போகக்கடவோம்." ( எபிரெயர் 13 : 12,13 )

ஆம்  அன்பானவர்களே, கிறிஸ்துவின் சிலுவையினை அன்றாடம் சுமந்துகொண்டு பாளயத்துக்குப் புறம்பே (உலக ஆசைகளுக்குப் புறம்பே) அவரிடத்துக்குப் புறப்பட்டுப் போவோம். உலகம் கொடுக்க முடியாத நித்திய சமாதானத்தினாலும், பரிசுத்த வாழ்க்கை வாழ மீட்பு அனுபவத்தினாலும் அவர் நம்மை நிரப்பி நடத்துவார்.  

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                                           தொடர்புக்கு- 96889 33712                                                

1 comment:

பால் பாலன் said...

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரருக்கு தங்களின் செய்திகள் அநேகருக்கு அனுப்புகிறேன். மிகவும் பிரயோஜனமாயிருகிறது. ஜீவனுள்ள கடவுளுக்கே மகிமை. நீங்கள் கொடுத்துள்ள போன் நம்பரில் தொடர்பு கொண்டால் எடுப்பதே இல்லையே ! ஏன்?