ஆதவன் 🖋️ 604 ⛪ செப்டம்பர் 23, 2022 வெள்ளிக்கிழமை
"அவன் வனாந்தரத்தில் ஒருநாள் பிரயாணம் போய், ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்து, தான் சாகவேண்டும் என்று கோரி: போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என் பிதாக்களைப்பார்க்கிலும் நல்லவன் அல்ல என்று சொல்லி, படுத்துக்கொண்டு நித்திரைபண்ணினான்; அப்பொழுது ஒரு தூதன் அவனைத் தட்டியெழுப்பி: எழுந்திருந்து போஜனம்பண்ணு என்றான்." ( 1 இராஜாக்கள் 19 : 4, 5 )
ஆவிக்குரிய வாழ்வில் எப்போதுமே மகிழ்ச்சியும் செழிப்பும் மட்டுமே இருக்கும் என்று நாம் எண்ணிவிடக்கூடாது. துன்பங்களும், கஷ்டங்களும் நம்மைத் தொடரலாம், வனாந்தரம் போன்ற வறண்ட சூழல் ஏற்படலாம்.
எலியா மிகப்பெரிய தீர்க்கதரிசிதான். ஆனால் அவரும்கூட உலக வாழ்க்கை வெறுத்து ஆண்டவரிடம் சாவை வேண்டக்கூடிய நிலைமைக்கு வந்துவிட்டார். ஆகாபின் மனைவி யேசபேல் எலியாவின்மேல் கோபமாகி அவரைக் கொலைசெய்யத் தேடினாள். அப்போது எலியா மிகவும் மனமடிவுக்குள்ளானார். "கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என் பிதாக்களைப்பார்க்கிலும் நல்லவன் அல்ல" என்று வேதனையோடு ஜெபித்தார்.
அன்பானவர்களே, எலியாவுக்கு வந்ததுபோன்ற மனமடிவு நமக்கும் ஏற்படலாம். ஆனால், தேவன் நம்மை அப்படியே விட்டுவிடமாட்டார். வேதனையோடு படுத்து உறங்கிய எலியாவுக்குத் தேவன் தனது தூதனை அனுப்பி உணவளித்து பலப்படுத்தினார். "அப்பொழுது அவன் எழுந்திருந்து புசித்துக் குடித்து, அந்த போஜனத்தின் பலத்தினால் நாற்பது நாள் இரவு பகல் ஓரேப் என்னும் தேவனுடைய பர்வதமட்டும் நடந்து போனான்." ( 1 இராஜாக்கள் 19 : 8 )
நாமும் இதுபோல தேவ பர்வதத்தை நோக்கியே பயணம் செய்கின்றோம். கர்த்தருடைய தூதன் அளித்த உணவின் பலத்தால் எலியா நாற்பது நாள் இரவும் பகலும் ஓரேப் பர்வதம் வரை நடந்தார். தேவதூதன் அளித்த உணவின் பலம் அவருக்கு எந்த பலவீனமுமில்லாமல் நாற்பது நாட்கள் நடக்கக் கூடிய சக்தியைக் கொடுத்தது. ஆவிக்குரிய வாழ்வில் நாம் சோர்ந்துபோகும்போது இதேபோல பெலனைத் தேவன் நமக்கும் தருவார்.
ஆம், நமது பலவீனத்தில் கர்த்தரது பலத்தை நாம் அனுபவிக்கமுடியும். "என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்" ( 2 கொரிந்தியர் 12 : 9 ) என்று அப்போஸ்தலனாகிய பவுலைப் பலப்படுத்திய தேவன் நம்மையும் அதுபோலப் பலப்படுத்துவார்.
கர்த்தருடைய ஒரு தூதன் எலியாவைத் தட்டியெழுப்பி: எழுந்திருந்து போஜனம்பண்ணு என்றான். நமக்கோ கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே தூதன் கொடுத்ததைவிட மேலான உணவினை நேரடியாக நமக்குக் கொடுத்துள்ளார்.
"என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது. என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன்."( யோவான் 6 : 55, 56 )
எனவே நாம் எலியாவைப்போல மனமடிவு ஏற்படும்போது இந்த வானக உணவினை உண்ணும்போது பலமடைகின்றோம். ஆம், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்காகத் தனது உடலையும் இரத்தத்தையும் உணவாகத் தந்துள்ளார். இதனை விசுவாசித்து அவர் நமக்காக மரித்தார் எனவே நம்மை முற்றும் முடிய இரட்சிப்பார் என விசுவாசிக்கும்போது; உண்ணும்போது எலியாவைப்போல பலமடைகின்றோம். எலியா நடந்ததுபோல் பரம கானானை நோக்கி தொய்வில்லாமல் நாமும் நடப்போம்.
தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு- 96889 33712
No comments:
Post a Comment