Sunday, September 18, 2022

காண்டாமிருகத்துக்கொத்த பெலன் நமக்கு உண்டு.

 ஆதவன் 🖋️ 602 ⛪ செப்டம்பர் 21,  2022 புதன்கிழமை    

"இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்." ( ஏசாயா 60 : 2 )

கர்த்தருடைய பிள்ளைகளுக்கான ஆசீர்வாதத்தை இன்றைய வசனம் எடுத்துக் கூறுகின்றது. கர்த்தருக்குள் உண்மையான வாழ்க்கை வாழும்போது, நாம் மற்றவர்களிலிருந்து வேறுபிரிக்கப்படுகின்றோம். மற்றவர்கள் உலக காரியங்களைச் சிந்தித்து உலக நாட்டம்கொண்டு அலைவார்கள். ஆனால் கர்த்தருடைய பிள்ளைகள் அவரையே நம்பி வாழ்வார்கள். அவர்களை தேவனே வழி நடத்துவார். 

மோசே இஸ்ரவேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து அழைத்து வர பார்வோனுக்குமுன் அநேக அதிசயங்களையும் வல்ல செயல்களையும் செய்யவேண்டியிருந்தது. அவற்றுள் ஒரு அடையாளம் இருள். இஸ்ரவேல் மக்களை தேவன் காரிருளுக்குத் தப்புவித்து எகிப்தியரையோ இருளை அனுபவிக்கச் செய்தார். 

"மோசே தன் கையை வானத்திற்கு நேராக நீட்டினான்; அப்பொழுது எகிப்து தேசம் எங்கும் மூன்றுநாள் மட்டும் காரிருள் உண்டாயிற்று. மூன்றுநாள் மட்டும் ஒருவரை ஒருவர் காணவும் இல்லை, ஒருவரும் தம்மிடத்தைவிட்டு எழுந்திருக்கவும் இல்லை; இஸ்ரவேல் புத்திரர் யாவருக்குமோவெனில் அவர்கள் வாசஸ்தலங்களிலே வெளிச்சம் இருந்தது." ( யாத்திராகமம் 10 : 22, 23 )

இதுபோல இஸ்ரவேல் மக்களை கர்த்தர் மேக ஸ்தம்பமாகவும் அக்கினி ஸ்தம்பமாகவும் இருந்து அவர்களை வழி நடத்தினார்.  

இதுபோலவே கடவுளை அறியாதவர்களையும் கடவுளுளது கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் செயல்படுபவர்களையும்  பிரச்சனைகள், துன்பங்கள் எனும் இருளானது மூடிக்கொள்ளும்போது அவருக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ்வோர்மீது கர்த்தர் தனது ஒளியைப் பிரகாசிக்கச்செய்வார். ஆம்,    "இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்." என்கிறார் கர்த்தர்.

அன்பானவர்களே, எந்தச் சூழ்நிலையிலும் கர்த்தரை விட்டுப் பிரியாத, அவருக்கு ஏற்புடைய ஒரு வாழ்க்கை வாழ்வோமானால் மற்றவர்களிலிருந்து கர்த்தர்  நம்மை வேறுபடுத்திக்காட்டுவார் என்பதே இந்த வசனத்தின் அடிப்படைக்  கருத்து.

சிப்போரின் மகனான பாலாக் ராஜா, பிலேயாமை அழைத்து இஸ்ரவேல் மக்களை சபிக்கும்படிக் கூறினான். ஏனெனில் பிலேயாம் ஆசீர்வதிப்பவன் ஆசீர்வாதம்பெறுவான் , அவன் சபிக்கிறவன் சாபமடைவான். ஆனால் மூன்று முறை முயன்றும் தேவன் பிலேயாமை இஸ்ரவேலை சபிக்க அனுமதிக்கவில்லை. (எண்ணாகமம் 22,23,24) 

மாறாக அவன், "அவர் யாக்கோபிலே அக்கிரமத்தைக் காண்கிறதும் இல்லை, இஸ்ரவேலிலே குற்றம் பார்க்கிறதும் இல்லை; அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களோடே இருக்கிறார்; ராஜாவின் ஜயகெம்பீரம் அவர்களுக்குள்ளே இருக்கிறது. தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்; காண்டாமிருகத்துக்கொத்த பெலன் அவர்களுக்கு உண்டு." ( எண்ணாகமம் 23 : 21, 22 ) என்று கூறி அவர்களை ஆசீர்வதித்தான்.

ஆம், எகிப்து எனும் பழைய பாவவாழ்க்கையிலிருந்து விடுதலை பெற்று மீட்பு அனுபவம் பெற்றிருந்தோமானால் இதுபோலவே நம்மை தேவன் ஆசீர்வதிப்பார். 

நமது தேவனாகிய கர்த்தர் நம்மோடே இருப்பார். ராஜாவின் ஜயகெம்பீரம் நமக்குள்ளே இருக்க்கும். காண்டாமிருகத்துக்கொத்த பெலன் நமக்கு உண்டு.

"நீ நெகிழப்பட்டதும், கைவிடப்பட்டதும், ஒருவரும் கடந்து நடவாததுமாயிருந்தாய்; ஆனாலும் உன்னை நித்திய மாட்சிமையாகவும், தலைமுறை தலைமுறையாயிருக்கும் மகிழ்ச்சியாகவும் வைப்பேன்." ( ஏசாயா 60 : 15 ) என்கிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                                           தொடர்புக்கு- 96889 33712                               

No comments: