Wednesday, September 21, 2022

கிறிஸ்துவுக்குள் வேர்கொண்டவர்களாக வாழும்போதே நாம் வளர்ச்சியடைகின்றோம்

 ஆதவன் 🖋️ 605 ⛪ செப்டம்பர் 24,  2022 சனிக்கிழமை

"உம்மிலே பெலன்கொள்ளுகிற மனுஷனும், தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள். அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக் கொள்ளுகிறார்கள்; மழையும் குளங்களை நிரப்பும்." ( சங்கீதம் 84 : 5, 6 )

நாம் கர்த்தருக்குள் வாழ்வது மட்டுமல்ல,ஆவிக்குரிய அனுபவங்களில் வளருபவர்களாகவும் இருக்கவேண்டியது அவசியம். குழந்தைகள் பலமற்றவர்கள். நாம் வளர வளர பலம் கொள்ளுகின்றோம். கிறிஸ்துவுக்குள் வேர்கொண்டவர்களாக வாழும்போதே நாம் வளர்ச்சியடைகின்றோம். "ஆகையால், நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு,"( கொலோசெயர் 2 : 6 ) என்று அப்போஸ்தலனாகிய பவுல் எழுதுகின்றார். 

இப்படிக் கிறிஸ்துவுக்குள்  பலம் கொள்ளுகின்ற மனிதன்தான் இருதயத்தில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கமுடியும். இப்படி பெலன்கொள்ளுகிற மனுஷனும், தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள்.

இதனால்தான் அப்போஸ்தலனாகிய பேதுருவும், "நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள்." ( 2 பேதுரு 3 : 18 ) என்று கூறுகின்றார். 


"நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல், அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு, தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக" ( எபேசியர் 4 : 14,15 ) என்கின்றார் பவுல் அடிகள்.

இப்படிப் பலம் கொள்ளும்போது என்ன நடக்கும் என்பதை இன்றைய தியான வசனத்தின் பிற்பகுதி விளக்குகின்றது. இப்படிப்  பலம் கொள்ளும் மனிதர்கள் அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக் கொள்ளுகிறார்கள். அதாவது துன்பங்கள் பிரச்சனைகளை அவர்கள் சந்தித்தாலும் அதனைக் கடந்து தங்கள்  வாழ்வைக்  களிப்பான நீரூற்றாக மாற்றிக்கொள்கிறார்கள்.  மட்டுமல்ல, ஆவிக்குரிய மழை அவர்கள்மேல் பொழியும். அவர்கள் நீர் நிறைந்த  குளங்களைப்போல  ஆவியின் அருளினால் நிரம்பி அனைவருக்கும் பயன்தருபவர்களாக மாறுவார்கள். 

அன்பானவர்களே, என்றோ ஒருநாள் பெற்ற பாவ மன்னிப்பின் அனுபவத்தோடேயே நாம் நின்றுவிடக்கூடாது. அந்த அனுபவத்தில் வளரும்போதுதான் நாம் மீட்பு பெற முடியும். ஆம், இறுதிவரை நிலை நிற்பவனே இரட்சிக்கப்படுவான்   என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கூறியுள்ளார். ஆவிக்குரிய வாழ்வில் தினமும் வளருவோம். நாம் நீர் ஊற்றி வளர்க்கும் மரமோ செடியோ வளருவதை நாம் பார்க்கும்போது நமக்குள் ஒரு மகிழ்ச்சி ஏற்படுகின்றது. அதுபோல நாம் ஆவிக்குரிய வாழ்வில் வளரும்போதே கிறிஸ்துவும் மகிழ்ச்சியடைவார். 

ஏனெனில் வளரும்போதுதான் மரமானது ஏற்ற கனிகளைக் கொடுக்கும். நாம் கனி கொடுப்பவர்களாக வாழ்வதே தேவனுடைய சித்தம். ஆவிக்குரிய வளர்ச்சிபெற்று கனிகொடுக்காத மரங்கள் அக்கினியில் சுட்டெரிக்கப்படும். 

"இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது; ஆகையால், நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்." ( மத்தேயு 3 : 10 ) வளருவோம்; பெலனடைவோம்; அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக் கொள்ளுவோம். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                                           தொடர்புக்கு- 96889 33712                       

No comments: