Sunday, September 25, 2022

குழந்தையைப்போன்ற சுத்த இருதயம் நமக்கு வேண்டும்

 ஆதவன் 🖋️ 610 ⛪ செப்டம்பர் 29,  2022 வியாழக்கிழமை

"அதிக ஞானத்திலே அதிக சலிப்புண்டு; அறிவுபெருத்தவன் நோவுபெருத்தவன்." ( பிரசங்கி 1 : 18 )

இன்று உலகமானது தேவனை அறியமுடியாமல் இருப்பதற்கு ஒரு முக்கியக்  காரணம் தங்களது அறிவு மூலம் அவரைத் தேடி கண்டுபிடிக்க முயல்வது. நவீன விஞ்ஞான வளர்ச்சியைக்கண்டு பலர் எல்லாமே மனிதனால் கூடும் என்று நம்பத் துவங்கிவிட்டனர். தேவனை நாங்கள் அறிந்துள்ளோம் என்று கூறும் மனிதர்கள்கூட வேதாகமத்தை இறையியல் கல்லூரிகளில் சென்று படித்து பட்டங்கள் பெற்று தாங்கள் மற்றவர்களைவிட தேவனைப்பற்றி அதிகம் அறிந்துள்ளதாக எண்ணிக்கொள்கின்றனர். உண்மைதான்; இவர்கள தேவனைப்பற்றி அதிகம் அறிந்துள்ளனரே தவிர தேவனை அறியவில்லை.

வேதம் கூறுகின்றது, அறிவு பெருத்தவன் நோவு பெருத்தவன் என்று. ஆம்,  அதிக அறிவேத் தேவனை அறிய பலருக்குத் தடையாக உள்ளது.  மூளை அறிவால் தேவனைப்பற்றி அறிய முடியுமே தவிர தேவனை அறிய முடியாது. சுத்தமுள்ள இதயத்தால் மட்டுமே அவரை அறியமுடியும். "இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்." ( மத்தேயு 5 : 8 ) என்று இயேசு கிறிஸ்து கூறவில்லையா? 

இருதய சுத்தம் யாருக்கு வரும்? அது சிறு குழந்தையாக நாம் மாறும்போது அதாவது சிறு குழந்தைக்குரிய இருதய சிந்தனை கொண்டவர்களாக வாழும்போது மட்டுமே நாம் சுத்த இருதயம் கொண்டவர்களாக முடியும். எனவேதான் இயேசு கிறிஸ்து, "பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்." ( மத்தேயு 11 : 25 ) என்று கூறி ஜெபித்தார்.

ஆம், வேதாகமத்தை நன்கு படித்து அறிவதாலோ, மற்றவர்களைவிட நாம் அதிகம் படித்துள்ளதாலேயோ நாம் தேவனை அறிய முடியாது. நான் ஒருமுறை ஒரு ஆலயத்தில் ஒருவரது பிரசாங்கத்தைக் கேட்டேன். இதுவரை அத்தகைய ஒரு பிரசங்கத்தை நான் கேட்ததில்லை. அவ்வளவு தெளிவான ஆழமான தேவ செய்தி அது.  இறையியல் படிப்பில் டாக்டர் பட்டம்பெற்ற ரெவெரென்ட்கள் கூட அத்தகைய தேவ செய்தியைக் கொடுக்கமுடியாது. ஆனால் அந்தச் செய்தியைக் கொடுத்த ஊழியர் வெறும் எட்டாவது வகுப்புப் படித்தவர். தேவனோடு தொடர்பில் இருக்கும் மனிதனது செய்திகள் இப்படியே இருக்கும்.

"ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்." ( 1 கொரிந்தியர் 1 : 27 ) என்கின்றார் அப்போஸ்தலனாகிய பவுல் அடிகள்.

அன்பானவர்களே, நமது படிப்பு, அறிவு இவைகளின் அடிப்படையில் நாம் தேவனை அறியமுடியாது. நமது அறிவே தேவனை நாம் அறியத்  தடையாக இருக்கலாம். கல்வியறிவற்ற, மீன்பிடித்துக்கொண்டிருந்த பேதுருவின் முதல் பிரசங்கத்தில் 3000 பேர் இரட்சிக்கப்பட்டனர் (அப்போஸ்தலர் 2:41). இன்னொரு பிரசாங்கத்தால் 5000 பேர் இரட்சிக்கப்பட்டு விசுவாசிகள் ஆனார்கள் (அப்போஸ்தலர் 4:4). காரணம் அவர் கிறிஸ்துவோடு இருந்தவர்கள். 

இன்றைய வசனம் கூறுவதன்படி நமது அறிவை நாம் நம்பிக்கொண்டு வாழ்ந்தால் நோவுதான் அதிகரிக்கும். உலக காரியங்களிலும்கூட இதுவே உண்மை. அறிவு எப்போதும் கைகொடுக்காது. எனவே, எவ்வளவு உலக அறிவை நாம் பெற்றிருந்தாலும் பவுலைப்போல நம்மைத் தாழ்த்தி தேவனை நமக்குள் முதலில் பெறவேண்டும். அதற்கு குழந்தையைப்போன்ற சுத்த இருதயம் நமக்கு வேண்டும். 

"தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்." ( சங்கீதம் 51 : 10 ) எனத் தாவீதைப்போல முழு இருதயத்தோடு வேண்டுதல் செய்வோம்.


 தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                                           தொடர்புக்கு- 96889 33712             

No comments: