Sunday, September 25, 2022

அவரை நம்பும் நம்மை அவர் கேடகமாய் இருந்து காத்துக்கொள்வார்.

 ஆதவன் 🖋️ 611 ⛪ செப்டம்பர் 30,  2022 வெள்ளிக்கிழமை

"தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்." ( சங்கீதம் 18 : 30 )

இந்த உலகத்தில் எல்லா நாடுகளிலும் பாதுகாப்புக்காக செலவிடப்படும் தொகைதான் அதிகம். இந்திய அரசாங்கம் பாதுகாப்புத் துறைக்கு இந்த ஆண்டு ஒதுக்கியுள்ள தொகை ரூபாய் 5,25,166 கோடிகள். இதுபோல தனியார் நிறுவனங்கள் தங்களது பாதுகாப்புக்காக பெரிய தொகையை ஆண்டுதோறும் ஒதுக்குகின்றன. ஆனால் இன்றைய வசனம் கூறுகின்றது, "கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்." அதாவது கர்த்தரது வசனமே பெரிய கேடகமாக இருந்து பாதுகாக்கும் என்று. 

நாடுகள் பாதுகாப்புக்காக பணத்தை ஒதுக்கீடு செய்வதுபோல நமது பாதுகாப்புக்கும், நமது குடும்பம், சமுதாயம் இவற்றின் பாதுகாப்புக்கும் நாம் தேவனது வசனத்தை ஒதுக்கீடு செய்யவேண்டும். அதாவது தேவ வசனங்களின்மேல் விசுவாசம்கொண்டு அவரையே நம்பி வாழவேண்டும். கோலியாத்தை வீழ்த்த தாவீது தேவனாகிய கர்த்தரையே நம்பிச் செயல்பட்டார். தேவனைச் சேனைகளின் கர்த்தராகக் கண்டார். வெற்றிபெற்றார். 

கர்த்தரால் வரும் பாதுகாப்பையும் இரட்சிப்பையும் தாவீது நன்கு அனுபவித்து அறிந்திருந்தார். எனவேதான் இந்த பதினெட்டாம் சங்கீதத்தையே எழுதினார். கர்த்தர் தாவீதை அவனது எல்லா சத்துருக்களிடமிருந்தும் சவுலினிடமிருந்தும் விடுவித்தபோது தாவீது பாடிய சங்கீதம் என்று இந்தச் சங்கீதம் குறிப்பிடப்பட்டுள்ளது.

"கர்த்தரை அல்லாமல் தேவன் யார்? நம்முடைய தேவனையன்றிக் கன்மலையும் யார்?" ( சங்கீதம் 18 : 31 )

"என்னைப் பலத்தால் இடைகட்டி, என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர் தேவனே." ( சங்கீதம் 18 : 32 )

என வரிக்குவரி இந்த சங்கீதத்தில் தேவனது பாதுகாப்பை தாவீது நினைவுகூருகின்றார். 

தாவீதைப்போல கர்த்தர்மேல் உறுதியான விசுவாசம் கொண்டு வாழும்போது அவரே நமது அரணும்  கோட்டையுமாக இருந்து நம்மைப் பாதுகாப்பார். ஆனால் ஒரு நிபந்தனை. இன்றைய வசனம், "தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது" என்று கூறுகின்றது.

அதாவது தேவனுடைய தூய்மையான உத்தமுமான வழியில் நாம் நடக்கவேண்டும் மட்டுமல்ல புடமிடப்பட்ட கர்த்தரது வசனம் நம் வாழ்வில் இருக்கவேண்டும், வசனத்தின்படி நாம் வாழவேண்டும். இப்படி வாழ்பவர்களுக்கு அவர் கேடகமாயிருப்பார்.

விஞ்ஞானத்தில் நாம் ஒரு குறிப்பிட்ட கோட்பாடை நிரூபிக்கவேண்டுமானால் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கும். அந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு செயல்பட்டால் மட்டுமே எதிர்பார்க்கும் முடிவு கிடைக்கும். அதுபோல எல்லா வேத ஆசீர்வாத  வசனங்களும் நிபந்தனைகளோடுதான் இருக்கும். தேவன் விதித்துள்ள அந்த நிபந்தனைகளை நிறைவேற்றும்போதே அவை நமது வாழ்வில் செயல்படும். 

தேவனுடைய தூய்மையான உத்தமுமான வழியில் நாம் நடக்க நம்மை ஒப்புக்கொடுத்து அவரது புடமிடப்பட்ட வசனம் கூறுகின்றபடி வாழ்வோம். அப்போது இன்றைய வசனம் கூறுவதுபோல அவரை நம்பும் நம்மை அவர் கேடகமாய் இருந்து காத்துக்கொள்வார். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                                           தொடர்புக்கு- 96889 33712            

No comments: