Thursday, September 22, 2022

ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே

 ஆதவன் 🖋️ 607 ⛪ செப்டம்பர் 26,  2022 திங்கள்கிழமை

"லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள்." ( லுூக்கா 17 : 32 )

இயேசு கிறிஸ்து தனது உபதேசத்தில் பல்வேறு இடங்களில் பழைய ஏற்பாட்டிலிருந்து உதாரங்களைக் காட்டி விளக்கியுள்ளார். இன்றைய வசனத்தில் ஆதியாகமத்திலிருந்து ஒரு சம்பவத்தை உதாரணம் காட்டுகின்றார். 

ஆணடவராகிய இயேசு கிறிஸ்து தனது இரண்டாம் வருகையினைக் குறித்துக் கூறும்போது இந்த வசனத்தைக் கூறுகின்றார். இந்த உலக செல்வங்கள் மகிமைகள் இவற்றையே எண்ணிக்கொண்டு, செல்வம் சேர்ப்பத்திலும் இந்த உலக நாட்டங்களிலும் ஈடுபட்டு  தேவனுடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படியாமல் போனால் எல்லோரும் அழிந்துபோவீர்கள் என்கிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.  

சோதோம் கொமோராவை தேவன் அழிக்கும் முன்பு லோத்துவைக் காப்பாற்றுவதற்குத் தனது தூதனை அனுப்பினார். அந்தத் தூதன் "அவர்களை வெளியே கொண்டுபோய்விட்டபின்பு,  "உன் ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே; இந்தச் சமபூமியில் எங்கும் நில்லாதே; நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ என்றார்." ( ஆதியாகமம் 19 : 17 )

இதனையே இயேசு கிறிஸ்து இன்றைய தியான வசனத்தில் கூறுகின்றார். சோதோம் கொமோராவுக்கு நேர்ந்ததுபோன்ற அழிவு பூமிக்கு வரப்போகின்றது. எனவே, அந்த மக்களைப்போல அறிவிலிகளாய் இராமல் உங்கள் ஜீவனைக் காத்துக்கொள்ளுங்கள் என்கின்றார் இயேசு கிறிஸ்து. 

இயேசு கிறிஸ்து கூறினார், "லோத்தினுடைய நாட்களில் நடந்ததுபோலவும் நடக்கும்; ஜனங்கள் புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார்கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள். லோத்து சோதோமை விட்டுப் புறப்பட்ட நாளிலே வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் வருஷித்து, எல்லாரையும் அழித்துப்போட்டது." ( லுூக்கா 17 : 28, 29 ) இப்படியான அழிவுக்குத் தப்பித்துக்கொள்ளுங்கள் என்கின்றார்.

இப்படி கிறிஸ்துவின் கட்டளைக்குக் கீழ்படியாவிட்டால் என்ன நடக்கும் என்பதை விளக்க  இயேசு இன்றைய வசனத்தில், " லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள்" என்கின்றார்.  அந்தத் தூதன் லோத்துவிடம், "உன் ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே; இந்தச் சமபூமியில் எங்கும் நில்லாதே; நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ என்றார்". ஆனால், அவர்களது சொத்துக்கள், வீடு, இதர ஆஸ்திகளை எண்ணி அவன் மனைவி தூதனது கட்டளையினை மீறி திரும்பிப் பார்த்தாள். ஆம்,  "அவன் மனைவியோ பின்னிட்டுப்பார்த்து, உப்புத்தூண் ஆனாள்."( ஆதியாகமம் 19 : 26 )

இந்த உலகத்தில் நம்மைக் கிறிஸ்துவைவிட்டுப் பிரிக்கும் பல்வேறு இச்சை காரியங்கள் உள்ளன. அவற்றுள் மிக முக்கியமானது பொருளாசை. அந்த ஆசைதான் லோத்தின் மனைவியைப் பின்னிட்டுப்பார்க்கத் தூண்டியது. எனவேதான் இயேசு கிறிஸ்து அவளை நமக்கு எச்சரிப்புக்காக எடுத்துக்காட்டுகின்றார்.

அன்பானவர்களே, கிறிஸ்துவை நோக்கி வந்தபின்பு நாம் உலக ஆசைகள், பிரச்சனைகள் துன்பங்களைக்கண்டு கிறிஸ்துவின்மேலுள்ள விசுவாசத்தைவிட்டுப்  பின்னிட்டுப் பார்க்கக் கூடாது. அந்தத் தூதன் லோத்துக்குக் கூறியதுபோல மலையை நோக்கி நாம் ஓடவேண்டும். அந்தக் கன்மலை கிறிஸ்துவே. (1 கொரிந்தியர் 10:4) உலகக் கவர்ச்சி, மாயைகளில் நாட்டம்கொண்டு பின்னிட்டுப்பார்த்தால் லோத்தின் மனைவியைப்போல ஆகிவிடுவோம். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                                           தொடர்புக்கு- 96889 33712        

No comments: