ஆதவன் 🖋️ 590 ⛪ செப்டம்பர் 09, 2022 வெள்ளிக்கிழமை
"ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது." (1 பேதுரு 3:21)
ஞானஸ்நானம் என்பது விசுவாசிகள் மேற்கொள்ளவேண்டிய முக்கிய கடமையாக வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஞானஸ்நானம் பெறும் விசுவாசி கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதாக அறிக்கையிட்டு அதன் அடையாளமாக நீரில் மூழ்கி ஞானஸ்நானம் பெறுகின்றார். இது நீரில் மூழ்கி உடலின் அழுக்கை நீக்குதலல்ல, குளிப்பதுபோலத் தெரிந்தாலும் இது குளிப்பதல்ல. மாறாக அப்போஸ்தலரான பேதுரு கூறுவதுபோல தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கை.
அதாவது இது தேவனுக்கும் நமக்குமான ஒரு ஒப்பந்தம் (Agreement ). இதுவரை உலக மனிதனாக வாழ்ந்த நான் இன்றுமுதல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை என் ஆத்தும இரட்சகராக ஏற்றுக்கொள்கிறேன். இனி நான் கிறிஸ்துவுக்கு உரியவன் என்று நாம் அறிக்கையிடுகின்றோம்.
ஆனால் இன்று பல கிறிஸ்தவ சபைகளில் ஊழியர்கள் இவை எதனையும் கணக்கில்கொள்ளாமல் சபையின் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டி தங்கள் சபைக்கு வருகின்ற எல்லோருக்கும் ஞானஸ்நானம் கொடுக்கின்றனர். ஞானஸ்நானத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து அறிக்கைசெய்வதும், பாவத்திலிருந்து மனம் திரும்புவதும் தான் முக்கிய அம்சம். ஆனால் இன்று பலர் கடமைக்காக, சாதாரண ஒரு கட்டளைக்குக் கீழ்படிவதுபோல எந்த வித ஆத்தும இரட்சிப்பு அனுபவமோ பாவ மன்னிப்பின் நிச்சயமோ இல்லாமல் ஞானஸ்நானம் பெறுகின்றனர். இதனால் சாட்சி வாழ்க்கையினை இவர்களிடம் நாம் காண முடிவதில்லை.
மனம் திரும்புதலுக்கான ஞானஸ்நானத்தை யோவான் ஸ்நானன் கொடுத்துவந்தார். (மத்தேயு 3) ஆனால் அவரிடம் இயேசு கிறிஸ்துவும் ஞானஸ்நானம் பெற்றார். அவர் மனம் திரும்புதலுக்காக ஞானஸ்நானம் பெறவில்லை. காரணம், பாவமில்லாத அவர் மனம் திரும்பவேண்டிய அவசியமில்லை. அவர் நீதியை நிலை நாட்டவே ஞானஸ்நானம் பெற்றார். (மத்தேயு 3: 15) ஆம், ஞானஸ்நானம் பெறவேண்டுமென்பது பிதாவாகிய தேவன் வகுத்துள்ள நீதி. அதற்குக் கீழ்படியவேண்டியே இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் பெற்றார்.
எத்தியோப்பிய நிதி மந்திரி பிலிப்பு மூலம் இயேசு கிறிஸ்துவை அறிந்து விசுவாசித்து ஞானஸ்நானம் பெறுவதை நாம் அப்போஸ்தலர் பணி புத்தகத்தில் வாசிக்கின்றோம். பிலிப்பு அவரிடம், நீர் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால் ஞானஸ்நானம் பெறத் தடையில்லை என்று கூறியபோது மந்திரி, "இயேசு கிறிஸ்துவைத் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறேன்" என்று சொல்லி ஞானஸ்நானம் பெற்றார். ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 8 : 37 )
அப்போஸ்தலரான பவுல், இயேசு கிறிஸ்துவை நேரடியாகத் தரிசித்து ஞானஸ்நானம் பெற்றார். ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 9 )
பிலிப்பு சமாரியாவில் நற்செய்தி அறிவித்தபோது சீமோன் எனும் மாயவித்தைக்காரனும் அவரிடம் ஞானஸ்நானம் பெற்றான். அவன் மெய்யான மனம் திரும்புதல் இல்லாமல் பிலிப்பு செய்த அற்புதங்களையும் அதிசயங்களையும் கண்டு அதிசயித்து ஞானஸ்நானம் பெற்றான். ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:13 ) எனவேதான் அவன் பணத்தின்மூலம் பரிசுத்த ஆவியானவரின் வரத்தைப் பெறுவதற்கு முயன்றான். அப்போஸ்தலரான பேதுரு அவனைப்பார்த்து, "நீ உன் துர்க்குணத்தைவிட்டு மனந்திரும்பி, தேவனை நோக்கி வேண்டிக்கொள்; ஒருவேளை உன் இருதயத்தின் எண்ணம் உனக்கு மன்னிக்கப்படலாம்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 8 : 22 ) என்கின்றார்.
அன்பானவர்களே, இன்றும் பலர் இப்படியே மாயவித்தைக்காரனான சீமோனைப்போல மெய்யான மனம் திரும்புதல் இல்லாமல் வெறும் உணர்ச்சிகளின் அடிப்படையில் ஞானஸ்நானம் பெறுகின்றனர்.
பலர் ஊழியர்களால் வற்புறுத்தப்பட்டு ஞானஸ்நானம் பெறுகின்றனர். இப்படி ஊழியர்களின் வற்புறுத்தலுக்கு உட்படாமல் மெய்யாகவே கிறிஸ்துவை ஏற்று, பாவ மன்னிப்பின் நிச்சயம் பெற்று ஞானஸ்நானம் பெறுவதே வேதம் காட்டும் வழி. இது தேவனுக்கும் நமக்குமான ஒரு ஒப்பந்தம் (Agreement ) என்பதை மறந்துவிடக் கூடாது.
தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு- 96889 33712
No comments:
Post a Comment