Monday, September 26, 2022

அவர் நம்மிடம் எதிர்பார்ப்பது கடுகளவு விசுவாசம்தான்.

 ஆதவன் 🖋️ 612 ⛪ அக்டோபர் 01,  2022 சனிக்கிழமை

"நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம்." ( எபிரெயர் 3 : 14 )

கிறிஸ்துவின்மேல் நம்பிக்கைகொண்டு விசுவாசிகள் ஆகின்ற நாம் அவர்மேல் கொண்ட நம்பிக்கையினை முடிவுவரைக் காத்துக்கொள்பவர்களாக இருக்கவேண்டியது அவசியம். எனக்குத் தெரிந்த சில பெயர் கிறிஸ்தவர்கள் தங்களது குடும்ப பிரச்சனைகள், நோய்களுக்காக பிற மதத்தினரைப்போல குறி கேட்கவும், மந்திரவாதம் செய்யவும் முற்படுவதைப் பார்த்துள்ளேன். இது அவர்களுக்கு எள்ளளவும் கிறிஸ்துவின்மேல் விசுவாசம் இல்லை என்பதையே காட்டுகின்றது. 

கிறிஸ்துவின்மேல் நாம் கொண்டுள்ள சிறிது விசுவாசத்தை நாம் காத்துக்கொண்டால்கூட அவர் நம்மை கனப்படுத்துவார். ஆம், அவர் நம்மிடம் எதிர்பார்ப்பது கடுகளவு விசுவாசம்தான். (லூக்கா 17:6)

தன்னைப்  பின்பற்றுபவர்களைப்பற்றி இயேசு கிறிஸ்து கூறினார், "முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்." (மத்தேயு 24:13) இன்பமோ துன்பமோ, நாம் கொண்ட விசுவாசத்தில் இறுதிவரை நிலைநிற்கவேண்டியது அவசியம்.  

இயேசு கிறிஸ்து கூறிய மேற்படி வசனம் மாற்கு நற்செய்தியில் பின்வருமாறு உள்ளது:- "என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள். முடிவுபரியந்தம்   நிலைநிற்பவனே  இரட்சிக்கபடுவான்."  (மாற்கு 13:13)

நாம் கிறிஸ்தவராக இருப்பதால் மற்றவர்களால் பகைக்கப்படலாம்; சில அரசாங்கச்  சலுகைகள் நமக்கு கிடைக்காமல் போகலாம். அதற்காக நாம் கிறிஸ்துவை மறுதலிக்க முடியாது. ஆனால் இன்று பலர் அரசாங்கத்தின் சலுகைகளைப் பெறுவதற்குவேண்டி கிறிஸ்துவை மறுதலிப்பவர்களாக இருக்கின்றனர். 

ஆனால், இன்றைய வசனம் கூறுவது இவற்றைவிட வேறான பொருளிலாகும். அதாவது, ஆவிக்குரிய மறுதலிப்பு. உலகப்பிரகாரமான மறுதலிப்பைவிட, ஆவிக்குரிய வாழ்வில் கிறிஸ்துவை மறுதலிப்பது அதிக தீமையானதாகும்.  

ஒருவேளை நமது குடும்பத்தினர்; மனைவி அல்லது கணவர் கிறிஸ்துவ ஆவிக்குரிய வாழ்வில் வளர்ச்சியடையாமல் இருக்கலாம். அவர்களுக்காக சிலமுரண்பாடான  காரியங்களை நாம் செய்யவேண்டியிருக்கலாம். அத்தகைய நிலையில் மனத்தளவில்நாம் கிறிஸ்துவைவிட்டு மாறிடாமல் இருக்கவேண்டியது அவசியம்.  மெய்யான ஆவிக்குரிய வாழ்வு வாழ்பவர்களுக்கு இது ஒரு சிலுவை போன்றது.

மெய் தேவனை அறிந்துகொண்ட நாகமான் எலிசாவிடம் ரிம்மோன் கோவிலுக்குள் செல்ல அனுமதியை கேட்டதுபோல (2 ராஜாக்கள் 5:18) தேவ அனுமதியோடு நமது இருதயம் கர்த்தரை நோக்கி இருக்க நாம் சில காரியங்களைச் செய்யவேண்டியது இருக்கும். நமது தேவன் இருதயங்களை ஆராய்ந்து அறிகின்றவர். நமது வாயில் சொல் பிறக்குமுன்பே அதனை அறிந்துள்ளவர். எனவே ஆவிக்குரிய வாழ்வு வாழும் நமது செயல்பாடுகள் சிலவேளைகளில் முரண்பாடுபோல உலகுக்குத் தெரிந்தாலும் தேவனுக்குமுன் அது நீதியும் சரியான செயலுமாக இருக்கும்.  

இதனை வாசிக்கும் நீங்கள் ஒருவேளை புதிதாக கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட பிற மத நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கலாம்.  உங்கள் வீடுகளில் கிறிஸ்துவுக்கு பிரியமில்லாத காரியங்கள்  நடைபெறலாம். உங்களைக் கட்டாயப்படுத்திச் சில காரியங்களைச் செய்யும்படிச் சொல்லலாம். மனம் தடுமாறவேண்டாம். உங்கள் இருதயம் மட்டும் கிறிஸ்துவுக்கு நேராக இருந்தால் போதும்.  

ஆம் அன்பானவர்களே, ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை மட்டும்  முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்பீர்களென்றால், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்பீர்கள். 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

No comments: