ஆதவன் 🖋️ 588 ⛪ செப்டம்பர் 07, 2022 புதன்கிழமை
"கர்த்தர் வருமளவும் நீடிய பொறுமையாயிருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடையவேண்டுமென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும், நீடிய பொறுமையோடே காத்திருக்கிறான். நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே" ( யாக்கோபு 5 : 7, 8 )
இன்றைய தியானத்துக்குரிய வசனத்தில் அப்போஸ்தலரான யாக்கோபு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு நாம் காத்திருக்கவேண்டியதை விவசாயத்துடன் ஒப்பிட்டுப் பேசுகின்றார்.
விவசாயம் செய்பவர்கள் குறிப்பிட்டக் காலங்களைக் கணக்கிட்டு விவசாயத்துக்கான முன் ஏற்பாடுகளைச் செய்வார்கள். அக்டோபர் மாதம் மழை வரும் என்பது தெரியுமானதால் விவசாயம் செய்பவர்கள் விதைகளையும் விவசாயத்துக்குத் தேவையான பொருட்களையும் சேகரித்துவைத்து மழையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். முதல் மழை விழுந்ததுமே விதையை விதைத்து விடுவார்கள்.
சில ஆண்டுகளில் மழை குறிப்பிட்ட காலத்தில் பெய்யாமல் கால தாமதம் ஆகிவிடும். அப்போது விவசாய வேலைகள் தாமதமாகத் துவங்கும். எந்த விவசாயியும் மழை வருவதற்குத் தாமதமாகிவிட்டால் விதையை விதைக்க மாட்டான். பெறுமையோடு காத்திருந்து நிலத்தைப் பண்படுத்துவான்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகை சமீபமானதால் நாமும் விவசாயிகள் முன் தயாரிப்புச் செய்வதுபோல பொறுமையோடு காத்திருந்து நமது இருதயங்களை ஸ்திரப்படுத்தவேண்டும் என்கின்றார் யாக்கோபு.
இன்று பல ஊழியர்களும் வருகைக்கு ஆயத்தப்படுதல் குறித்துப் பேசுகின்றனர். வருகைக்கு ஆயத்தப்படுதல் என்பது சிறப்பான பலவிதச் செயல்பாடுகளைச் செய்வதல்ல, மாறாக, வேதத்தில் கூறப்பட்டுள்ள வாழ்க்கை வாழ்வதுதான்.
நாம் வாழவேண்டிய வழிமுறைகள், போதனைகள் எல்லாமே ஏற்கெனவே வேதத்தில் கூறப்பட்டுள்ளன. அவற்றின்படி வாழ்வதுதான் வருகைக்கு ஆயத்தப்படுதல். ஆனால் பல கிறிஸ்தவர்களுக்கும் இயேசுவின் இரண்டாம் வருகை குறித்து பேசும்போது அது சிரிப்புக்குரியதாகத்தான் தெரிகின்றது. "இரண்டாயிரம் ஆண்டுகளாக இயேசு வருகிறார் என்றுதான் கூறிக்கொண்டிருக்கிறார்கள் எப்போதுதான் வருவார்?" என்கின்றனர். இவர்களுக்கு அப்போஸ்தலரான பேதுரு கூறுகின்றார்:-
"அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின்தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள்." ( 2 பேதுரு 3 : 4 )
"தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்." ( 2 பேதுரு 3 : 9 ) ஆம், எல்லோரும் மனம்திரும்பித் தூய ஒரு வாழ்க்கை வாழவேண்டும், ஒருவருமே கெட்டுபோய்விடக்கூடாது என்பதற்காகவே அவரது வருகை தாமதமாகின்றது.
மேலும், நமது காலத்தில் அவர் வருகின்றாரோ இல்லையோ நாம் எப்போது மரித்தாலும் அவரை எதிர்கொள்ளவேண்டியது வரும். அது எப்போதும் நிகழலாம். எனவே நாம் எப்போதும் ஆயத்தமாய் இருக்கவேண்டியது அவசியம்.
அன்பானவர்களே, அப்போஸ்தலரான யாக்கோபு கூறுவதுபோல ஒரு விவசாயி பருவகாலத்துக்குக் காத்திருந்து முன் ஏற்பாடுகள் செய்வதுபோல நாமும் கிறிஸ்துவின் வருகைக்கு முன்னேற்பாடுகள் செய்து காத்திருக்கவேண்டியது அவசியம். அவர் வரும்போது கைவிடப்பட்டவர்களாக நாம் ஆகிவிடக்கூடாது. ஆவியானவரின் துணையோடு கிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தமாவோம்.
தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு- 96889 33712
No comments:
Post a Comment