Wednesday, September 28, 2022

கிறிஸ்து இயேசுவோ எல்லாம் இருந்தும் நமக்காகத் தன்னை ஒன்றுமில்லாதவராக மாற்றினார்.

 ஆதவன் 🖋️ 616 ⛪ அக்டோபர் 05,  2022 புதன்கிழமை  

"நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள்நிமித்தம் தரித்திரரானாரே." ( 2 கொரிந்தியர் 8 : 9 ) 

தங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் நல்ல நிலையில் இருக்கவேண்டுமென்பதற்காக தாய் தகப்பன்மார் பல்வேறு உபத்திரவங்களைச் சகிக்கின்றனர்; கடுமையாக உழைக்கின்றனர். ஒருமுறை 80 வயதில் பனையேறும் ஒரு முதியவரைச் சந்தித்தேன். இந்தத் தள்ளாடும்  வயதிலும் அவர் தனது குடும்பத்துக்காக உழைக்கின்றார். இதுவரைத் திருமணமாகாத தனது மகளை நல்ல இடத்தில திருமணம் செய்துகொடுக்க வேண்டுமென்பதே அவரது எண்ணமெல்லாம். இதுபோலவே கிடைக்கும் சிறு வருமானத்திலும் தங்களது ஆசைகளை அடக்கி தங்கள் குழந்தைகளது படிப்புக்காக தியாகம் செய்கின்றனர் பல பெற்றோர்கள்.   

ஆம் அன்பானவர்களே, இதுபோலவே நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும்  இருக்கிறார் என்று இன்றைய வசனம் சொல்கின்றது. அவர் செல்வந்தன்தான். ஆனால் நாம் செல்வந்தர்கள் ஆகவேண்டும் என்பதற்காக; நாம் மீட்கப்பட்டு பரலோகத்தைச் சுதந்தரிக்கவேண்டும் என்பதற்காக அவர் தந்து செல்வ நிலைமையை விட்டுவிட்டு நமக்காக தரித்திரனானார். எப்படி ஒரு  தாய் தனது பிள்ளைக்காக தியாகம் செய்வாளோ அதுபோல அவர் மிகப்பெரிய தியாகம் செய்தார். 

"அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்." ( பிலிப்பியர் 2 : 6,7 )

அடிமை என்பவன் எந்த அடிப்படை மனித உரிமையும் இல்லாதவன். இந்த அண்ட சராசரங்களைப் படைத்து ஆளும் தேவன் ஒரு அடிமையைப்போல ஆனார் என்பதை எண்ணிப்பாருங்கள். எதற்காக? நமக்காக. நாம் மீட்பு பெறவேண்டுமென்பதற்காக. நாம் முன்பு பார்த்த உதாரணத்தில் அந்த முதியவர் ஒன்றுமில்லாத நிலையிலிருந்து உழைத்தார். ஆனால் கிறிஸ்து இயேசுவோ  எல்லாம் இருந்தும் நமக்காகத் தன்னை ஒன்றுமில்லாதவராக மாற்றினார். இந்த விதத்தில் அவரது அன்பு மனிதர்களது அன்பைவிட பல மடங்கு மேலானதல்லவா?  

வறுமையில் பல தியாகங்கள் செய்து சேகரித்தப்  பணத்தில் மகனைப் படிக்கவைக்கும் தாய், அந்த மகன்  வேண்டாத நண்பர்களது சகவாசம்கொண்டு படிக்காமல் தாய் அனுப்பும் பணத்தையும் தாறுமாறாய்ச் செலவழித்தால் அந்தத் தாய் எவ்வளவு வேதனைப்படுவாள்? 

அன்பானவர்களே, இன்று பலரும் கிறிஸ்துவின் மீட்பினை அலட்சியம்செய்து உலக ஆசையில் மூழ்கி கிறிஸ்துவை மறுதலித்து வாழும்போது அவர் இதுபோலவே வேதனைப்படுவார் என்பதை எண்ணிப்பாருங்கள்.   நமக்காகத் தரித்திரரான இயேசு கிறிஸ்துவின் அன்பை நாம் உணருவோமானால் அவரது விருப்பப்படி வாழ நம்மை ஒப்புக்கொடுப்போம். 

அன்பான இயேசுவே இதனை நாட்களும் உமது மேலான அன்பை உணராமல் அலட்சியமாக வாழ்ந்துவிட்டேன். என்னை மன்னியும். உமக்கு ஏற்ற வாழ்க்கை வாழ இன்றே என்னை ஒப்புக்கொடுக்கிறேன்.  என் பாவங்களை மன்னித்து ஏற்றுக்கொள்ளும். உமது பரிசுத்த ஆவியானவரை எனக்குத் தந்து உமக்கு ஏற்புடைய வழியில் நான் தொடர்ந்து நடக்க எனக்கு உதவி செய்யும் என வேண்டுதல் செய்வோம். 

நாம் எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும் கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொள்வார். ஏனெனில் அவர் நமக்காகச் செய்த உயிர் தியாகம் வீணாவதை அவர் விரும்பமாட்டார். தனிமையில் கிறிஸ்துவிடம் மனம் திறந்து பேசுங்கள். மேலான தேவ அனுபவத்தை அளித்து நம்மை மகனாக / மகளாக ஏற்றுக்கொள்வார். 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

No comments: