Monday, September 12, 2022

பிறர் ஏற்றுக்கொள்ளவேண்டுமானால், கனியுள்ள வாழ்க்கை நமக்கு இருக்கவேண்டும்.

 ஆதவன் 🖋️ 594 ⛪ செப்டம்பர் 13,  2022 செவ்வாய்க் கிழமை 

"தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி, நீங்கள் கிறிஸ்துவின் நாளுக்கென்று துப்புரவானவர்களும் இடறலற்றவர்களுமாயிருக்கவும் வேண்டுதல் செய்கிறேன்." ( பிலிப்பியர் 1 : 10, 11 )

இன்றைய வசனம் ஒரு கிறிஸ்தவன்  எப்படிப்பட்டவனாக இருக்கவேண்டுமென்று விளக்குகின்றது. மட்டுமல்ல, ஒரு ஊழியன் தன்னை நாடிவரும் மக்களுக்கு எதற்கு முன்னுரிமை கொடுத்து ஜெபிக்கவேண்டுமென்றும் விளக்குகின்றது. 

அப்போஸ்தலனாகிய பவுல் தனது செய்கையின்மூலம் நமக்கு வழிகாட்டுகின்றார். அதாவது ஒரு கிறிஸ்தவன் அல்லது கிறிஸ்துவின் விசுவாசி கிறிஸ்துவினால் வருகின்ற நீதியின் கனிகளால் நிரம்பியவனாக இருக்கவேண்டும். கனியற்ற வாழ்க்கை நம்மை பிறருக்கு எடுத்துக்காட்டாது. கனியுள்ள வாழ்வே நம்மை பிறருக்கு வெளிச்சமிட்டுக் காட்டும். அப்படிக்  கனியுள்ள வாழ்க்கை வாழும்போதுதான் தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும் என்கின்றார் பவுல் அடிகள். 

மேலும் இப்படி ஒரு கிறிஸ்தவ விசுவாசி வாழ்வதே அவனை கிறிஸ்துவின் நாளுக்கு, அதாவது கிறிஸ்துவின் வருகையின்போது அவருக்குமுன் தூய்மையானவர்களாகவும் இடறலற்றவர்களாகவும் இருக்கச் செய்யும்.  என்று கூறுகின்றார் பவுல் அடிகள். 

கனியற்ற வாழ்க்கை வாழ்ந்துகொண்டு நாம் கிறிஸ்துவை அறிவிக்க முடியாது. ஒரு சாதாரண சினிமா நடிகன்கூட மக்களால் ரசிக்கப்படுபவனாக இருக்கவேண்டுமானால் அவனுக்குச் சிலத் தனித் தகுதிகள் வேண்டும். அப்போதுதான் மக்கள் அவனை ஏற்றுக்கொள்வார்கள். அதுபோல கிறிஸ்தவர்களை பிறர் ஏற்றுக்கொள்ளவேண்டுமானால், வித்தியாசமான கனியுள்ள வாழ்க்கை நமக்கு இருக்கவேண்டும்.  

இன்றைய வசனம் ஊழியர்களுக்கும் ஒரு படிப்பினையாக உள்ளது. அதாவது இங்கு அப்போஸ்தலனாகிய பவுல் தனது சபை மக்கள் இப்படிக் கனியுள்ளவர்களாக, தூய்மையுள்ளவர்களாக, கிறிஸ்துவின் வருகைக்குத் தகுதியுள்ளவர்களாக இருக்கவேண்டுமென்று விண்ணப்பம் பண்ணுகின்றார்.

அவர் வெறும் போதனையும், ஆடலும், பாடலும், துள்ளலும் செய்பவராக இருக்கவில்லை. தனது சபை மக்கள் மேற்படி தகுதியுள்ளவர்களாக விளங்கவேண்டுமென்று அவர்களுக்காக தேவனிடம் விண்ணப்பம் பண்ணுபவராக இருந்தார்.   தனது சபைக்கு வருபவர்கள் எல்லோரும் உலக ஆசீர்வாதம் பெற்றவர்களாகவும், செழிப்பானவர்களாகவும் மாறவேண்டுமென்று அவர் ஜெபித்துக்கொண்டிருக்கவில்லை. 

என்னை ஆவிக்குரிய வழியில் நடத்திய பாஸ்டர் ஜான்சன் டேவிட் ஐயா அவர்கள் இப்படிப்பட்டவராக இருந்தார். மிகப்பெரிய தீர்க்கதரிசியாகவும் இருந்தார் அவர். நாம் ஏதாவது தவறோ, விசுவாசக் கேட்டுக்கான காரியங்களோ செய்துவிட்டால் அது அவருக்குத் தெரிந்துவிடும். ஞாயிறு ஆராதனை முடிந்து அவரிடம் ஜெபிக்கச் செல்லும்போது கண்டித்துக் கூறுவார். "தம்பி , எச்சரிக்கையாயிருங்கள் ஆண்டவர் தொலைத்துவிடுவார் " என்று பயமுறுத்தும் விதமாக எச்சரிப்பார். தனிப்பட்ட விதத்தில் நல்ல நண்பனாக இருந்தாலும் ஆண்டவர் கூறிய காரியத்தை நம்மிடம் எச்சரித்துக் கூறாமல் இருக்கமாட்டார். 

ஆனால் ஆசீர்வாதத்தைத் தேடிவரும் விசுவாசிகள் அவரை விரும்புவதில்லை. அவர் எல்லோரையும் சபிப்பதாகக் குறை சொல்வார்கள். அவரது சபைக்கு அருகிலுள்ள பல விசுவாசிகள் அந்த சபையைவிட்டு பேருந்து ஏறி தொலைவிலுள்ள வேறு சபைகளுக்குச் செல்வார்கள். ஆம், விசுவாசிகளுக்கு தங்கள் பாவங்கள் குத்தப்பட்டு சூடு உண்டாக்கும் சபைகளைவிட ஏர்கண்டிஷன் செய்யப்பட்ட குளுகுளு சபைகள் பிடித்துள்ளது. அங்கு சென்று கைதட்டிப்பாடி நடனம் செய்வதே அவர்களுக்குப் பிடித்துள்ளது.  

எனது இன்றைய நிலைமையைச் சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே அவரால் கூறமுடிந்தது. அதுவே இன்றும் தேவன்மேல் அசைக்க முடியாத விசுவாசத்தை என்னுள் வளர்ந்துள்ளது. ஆனால் இத்தகைய ஊழியர்கள் எண்ணிக்கையில் மிகமிகக் குறைவாகவே இன்று உள்ளனர். 

அன்பானவர்களே, இதனை வாசிக்கும் நீங்கள் விசுவாசிகளாக இருந்தால், கனியுள்ள வாழ்க்கை வாழ ஒப்புக்கொடுங்கள். ஊழியராக இருந்தால் பவுலைப்போல உங்கள் சபை விசுவாசிகளின் உலக ஆசீர்வாதத்துக்காக அல்ல,  அவர்கள்  பரிசுத்தமும் கனியுள்ளவர்களுமாக மாறிட ஜெபியுங்கள்.  

 தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                                           தொடர்புக்கு- 96889 33712                       

No comments: