மனிதன் பாவத்தினாலும் விசுவாசக் குறைவினாலும் பாதிக்கப்படும்போது, தேவன் அவனைத் தள்ளிடாமல் இருக்கிறார்.

  ஆதவன் 🖋️ 587 ⛪ செப்டம்பர் 06,  2022 செவ்வாய்க்கிழமை

"நான் எப்போதும் வழக்காடமாட்டேன்; நான் என்றைக்கும் கோபமாயிருப்பதுமில்லை; ஏனென்றால், ஆவியும், நான் உண்டுபண்ணின ஆத்துமாக்களும், என் முகத்துக்கு முன்பாகச் சோர்ந்துபோகுமே." ( ஏசாயா 57 : 16 )

நாம் அனைவருமே அவரைப்போல பரிசுத்தர்களாக மாறவேண்டும் என தேவன் எதிர்பார்க்கின்றார். ஆனால், மனிதர்கள் அப்படி முற்றிலும் பரிசுத்தமாக வாழ முடியவில்லை. எனவே எத்தனைத்தான் புனித வாழ்வு வாழ்ந்தாலும் சில நேரங்களில் மனிதர்கள் தவறு செய்துவிடுவதுண்டு. அனால், தேவன் அன்புள்ளவராக இருப்பதால் மனிதர்களை மன்னிக்கின்றார். எப்போதும் அவர் கோபப்படுவதில்லை. ஏனெனில் அப்படி அவர் கோபப்பட்டு மனிதர்களை புறம்தள்ளுவாரென்றால் எல்லோருமே சோர்ந்துபோவோம். அதனையே இன்றைய வசனத்தில் கூறுகின்றார்.

இதேபோல நோவாவின்காலத்திலும் மனிதர்கள் தங்களைக் கெடுத்துப் பாவம்செய்தபோது தேவன் கூறினார், " என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை; அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப்போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார்." ( ஆதியாகமம் 6 : 3) இது மனிதர்கள் சில வேளைகளில் கூறுவது போல இருக்கின்றது. கொடிய நோய்வாய்ப்பட்டு மரணத்தை நெருங்கும் மனிதர்களுக்கு மருத்துவர்களே அந்த மனிதர்களது வீட்டாரிடம், " இனி ரெம்ப நாள் செல்லாது, அவர் இருக்கப்போவது இன்னும் ஒன்று  ரெண்டு மாதங்கள்தான். அவர் ஆசைப்பட்டு கேட்பதெல்லாம் அவருக்கு கொடுங்கள்" என்பார்கள். அதுபோலவே தேவன் பாவ வியாதி பிடித்த மனிதர்களது வாழ்வைப்பற்றி வேதனையுற்று இப்படிக்  கூறுகின்றார்.  போகட்டும், அவன் இருக்கப்போகும் நாட்கள் நூற்று இருப்பது வருஷம்தானே ?

எனவேதான் பலவீனமான மனிதன் பாவத்தினாலும் விசுவாசக் குறைவினாலும் பாதிக்கப்படும்போது, தேவன் கோபங்கொண்டு அவனை முற்றிலும் தள்ளிடாமல் இருக்கிறார். ஆம், "அவர் நியாயத்திற்கு ஜெயங்கிடைக்கப்பண்ணுகிறவரைக்கும், நெரிந்த நாணலை முறிக்காமலும், மங்கியெரிகிற திரியை அணைக்காமலும் இருப்பார்." ( மத்தேயு 12 : 20 )

சில வேளைகளில் நமக்குள் நமது ஆவிக்குரிய வாழ்க்கையினைக் குறித்து சந்தேகம் எழுந்துவிடும். மங்கி எரிகிற திரிபோல ஒளி இழந்து காணப்படுவதுபோலத்தெரியும். 'ஐயோ , நான் செய்த இந்தச்  செயல் தேவனுக்கு ஏற்புடைய செயல் அல்ல .... எனவே அவர் என்மேல் கோபமாயிருப்பார்' என எண்ணக்கூடும். ஆனால் அப்படி நாம் மனம் மடிந்திடத் தேவையில்லை. மங்கி எரியும் திரிதானே என்று அணைத்திடமாட்டார். 

எப்போது நாம் நமது உள்ளத்தில் நமது தவறை, பாவத்தை உணர்ந்து கொள்கின்றோமோ அப்போதே தேவன் நம்மேலுள்ள கோபத்தை மாற்றிவிடுகின்றார். "ஏனென்றால், ஆவியும், நான் உண்டுபண்ணின ஆத்துமாக்களும், என் முகத்துக்கு முன்பாகச் சோர்ந்துபோகுமே." என்பதே தேவனுக்குரிய தாய் உள்ளத்தின் எண்ணம். 

ஆனால், இந்த வசனம் துன்மார்க்கனுக்குப் பொருந்துவதில்லை. ஏனெனில் துன்மார்க்கன் தான் செய்த தவறை உணர்வதுமில்லை, அவனது உள்ளத்தில் தேவனைப்பற்றிய எண்ணம் எழுவதுமில்லை. எனவே துன்மார்க்கர்களது ஆவி தேவனால் கைவிடப்பட்டு பல வேளைகளில் தற்கொலைமூலம் மாய்ந்து பாதாளத்துக்குப் போகின்றது. 

அன்பானவர்களே, நாம் மெய்யான ஆவிக்குரிய வாழ்க்கை வாழ்வோமென்றால்  எனவே தைரியமாக ஆவிக்குரிய வாழ்வைத் தொடரலாம். சிறு சிறு தவறுகள், பாவங்களுக்கு தேவனிடம் மன்னிப்பு கேட்டு ஆவிக்குரிய வாழவைத் தொடர்வோம். 

ஏனெனில், நமது தேவன் எப்போதும் வழக்காடமாட்டார்; அவர் என்றைக்கும் கோபமாயிருப்பதுமில்லை; ஏனென்றால், ஆவியும், தான் உண்டுபண்ணின ஆத்துமாக்களும், அவரது முகத்துக்கு முன்பாகச் சோர்ந்துபோகும் என்பது அவருக்குத் தெரியும். 

தேவன் இத்தனை அன்பானவர் என்பதனை நாம் உணர்ந்து கொள்ளும்போது தான் அவரிடம் நமது அன்பும் அவருக்கேற்ற வாழ்க்கையை நாம்  கண்டிப்பாக வாழவேண்டுமெனும் எண்ணமும் ஆசையும் நம்மை நிரப்பும். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                                                       தொடர்புக்கு- 96889 33712                                          

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்