இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Friday, September 09, 2022

ஐந்து காரியங்கள்

 ஆதவன் 🖋️ 593 ⛪ செப்டம்பர் 12,  2022 திங்கள் கிழமை

"கடைசியாக, சகோதரரே, சந்தோஷமாயிருங்கள், நற்சீர் பொருந்துங்கள், ஆறுதலடையுங்கள்; ஏகசிந்தையாயிருங்கள், சமாதானமாயிருங்கள், அப்பொழுது அன்புக்கும் சமாதானத்துக்கும் காரணராகிய தேவன் உங்களோடேகூட இருப்பார்." ( 2 கொரிந்தியர் 13 : 11 )

ஆவிக்குரிய பல்வேறு அறிவுரைகளைக் கொரிந்திய சபைக்கு இரண்டு நிரூபங்கள்  மூலம் கூறிய பவுல் அடிகள், இறுதியாக ஐந்து  காரியங்களைக் கூறுகின்றார். அவையே இன்றைய தியானத்துக்குரிய வசனம். 

ஆவிக்குரிய மக்கள் என்று தங்களைக் கூறிக்கொண்டாலும், சிலர் எப்போதும் துக்க முகத்துடனேயே இருப்பார்கள். காரணம், இவர்கள் எப்போதும் தேவனிடம் எதையாவது கேட்டுக்கொண்டே இருப்பார்கள். அவை கிடைக்கவில்லை எனும் கவலைதான் இவர்களை முக வாட்டத்தோடு இருக்கச் செய்கின்றது. எப்போவாவது முகவாட்டம் நமக்கு ஏற்படலாம், கவலை ஏற்படலாம். ஆனால் ஆவிக்குரிய மனிதன் முகத்தின் நாம் சந்தோஷத்தைக் காணவேண்டும். தேவனிடம் விசுவாசமாக இருக்கும்போது மட்டுமே துக்கம் மாறி சந்தோஷம் வரும். எனவேதான் சகோதரரே சந்தோஷமாய் இருங்கள் என்று கூறுகின்றார்.

நாற்சீர் பொருந்துங்கள் என்பது நல்ல பண்புகளோடு வாழுங்கள் என்று பொருள்.   நல்ல கிறிஸ்தவ பண்புகளோடு வாழும்போதுதான் கிறிஸ்துவை நம்மூலம்  பிறர் அறிந்திடமுடியும். 

மன ஆறுதலோடு வாழுங்கள் (என் அறிவுரைக்குச் செவி சாயுங்கள் என்று ஒருங்கிணைந்த மொழிபெயர்ப்பில் கூறப்பட்டுள்ளது) ஆறுதலான சமாதான வாழ்க்கையே கிறிஸ்தவ வாழ்க்கை.

ஏக சிந்தையாயிருங்கள் என்பது, நீங்கள் எல்லோரும் ஓர் மனம் உள்ளவர்களாய் இருங்கள். மட்டுமல்ல, உங்கள் சிந்தனையில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை மட்டுமே ஏக எண்ணமாய்க் கொண்டிருங்கள் என்று பொருள்.

எல்லோரிடமும் மன சமாதானமாய் இருங்கள். சண்டைச் சச்சரவுகள் வேண்டாம். 

இப்படி வாழும்போது, அன்புக்கும் சமாதானத்துக்கும் காரணராகிய தேவன் உங்களோடேகூட இருப்பார். என்கின்றார் பவுல் அடிகள். இங்கு முக்கியமாக நாம் கவனிக்கவேண்டியது, ஜெபியுங்கள் என்றோ, வேதாகமத்தை வாசியுங்கள் என்றோ, காணிக்கை கொடுங்கள் என்றோ, ஆலய வழிபாடுகளிலும் ஜெபக்கூட்டங்களிலும் கலந்துகொள்ளுங்கள் என்றோ பவுல் அடிகள் கூறவில்லை. இவைகளை அவரது நிரூபங்களில் அவர் கூறியிருந்தாலும் இங்கு நிறைவாக, அவர்களைவிட முக்கியமாக இவைகளைக் குறிப்பிடுகின்றார். 

அதாவது ஆவிக்குரிய மனிதன், ஜெபிப்பதுடனும் வேதம் வசிப்பதுடனும் நில்லாமல் கூடவே, மகிழ்ச்சியாகவும், நற்குணங்கள் உள்ளவனாகவும், ஆறுதலுள்ளவனாகவும், ஆவிக்குரிய வாழ்க்கை வாழும் மற்றவர்களுடன் ஒரே சிந்தையுள்ளவனாகவும்,. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையே - அவரது வசனங்களையே சிந்திப்பவனாகவும், எல்லோருடனும் சமாதானமுள்ளவனாகவும் வாழ்பவனாக இருக்க வேண்டும் என்கின்றார்.  

இப்படி வாழும்போது மட்டுமே அன்புக்கும் சமாதானத்துக்கும் காரணரான தேவன் உங்களோடுகூட இருப்பார் என்று இந்த வசனம் கூறுகின்றது. இன்று நம்மில் பலரும் ஜெபிக்கும்போது , "பவுலோடும் பேதுருவோடும் உமது அப்போஸ்தலர்களோடும் இருந்ததுபோல எங்களோடும் இரும் " என்று ஜெபிக்கின்றோம். அதற்கு முதல்படி பவுல் கூறும்  இந்த ஐந்து காரியங்களையும் நம்மில் ஆராய்ந்து சீர்படுத்தவேண்டியதுதான். 

அன்பானவர்களே, நாம் எல்லோருமே இவற்றை முதலில் நம்மிடம் உருவாக்குவோம். அப்போது சமாதானத்தின் தேவன் நம்மோடுகூட இருப்பார். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                                           தொடர்புக்கு- 96889 33712                                                

No comments: