Sunday, September 18, 2022

ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல..

 ஆதவன் 🖋️ 603 ⛪ செப்டம்பர் 22,  2022 வியாழக்கிழமை 


"நீர் என்னை உலகத்தில் அனுப்பினதுபோல, நானும் அவர்களை உலகத்தில் அனுப்புகிறேன்." ( யோவான் 17 : 18 )

இந்த உலகத்தில்  நாம் பணி செய்யும் இடங்களில் நமது பணி நிமித்தமாக நாம் பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்படுகின்றோம். உயர் அதிகாரிகளாக இருந்தாலும் சிறிய பதவிகளில் இருந்தாலும் நமது பணிக்கேற்ப சில வேலைகளுக்காக நாம் அனுப்பப்படுகின்றோம். 

நாம் ஒரு ஆசிரியராக இருந்தால், தேர்வு மையங்களில் பணி புரிய, விடைத்தாள்களைத் திருத்தும் செய்யச் செல்லவேண்டியிருக்கும். ஒரு வங்கி அதிகாரி,  மேலதிகாரிகளின் கூட்டத்திற்கோ, கடன் கொடுப்பது சம்பந்தமாக கிராமங்களுக்கோ செல்ல வேண்டியதுண்டு. அலுவலக உதவிப்பணியாளர் என்றால், அலுவலக சம்பந்தகமாக தபால் நிலையத்துக்கோ, தேநீர் கடைக்கோ செல்லவேண்டியது வரும். இப்படி நாம் ஒவ்வொருவருமே ஒரு பணிக்காக அனுப்பப்படுகின்றோம்.  இப்படி அனுப்பப்படும்போது நமக்கு நியமிக்கப்பட்டப் பணியை நாம் சிறப்பாகச் செய்யவேண்டியது அவசியம். 

இதுபோலவே, பிதாவாகிய தேவன் இயேசு கிறிஸ்துவை தனது பணிக்காக இந்த உலகத்தில் அனுப்பினார். இந்த உலகம் மீட்புப்பெறவும் அதனால் கிறிஸ்து இயேசு பிதாவோடு இருப்பதுபோல நாமும் அவர் இருக்கும் இடத்தில அவரோடுகூட இருக்கத் தகுதிபெறும்படி நம்மை மாற்றிடவும் அவர் அனுப்பப்பட்டார்.  (யோவான் 17:21) பிதாவாகிய தேவன் கொடுத்த இந்தப்பணியை அவர் தனது இரத்தத்தைச் சிந்தி செய்து முடித்தார். அவர் மாதிரி காட்டியதுபோல வாழ்ந்து மக்களை அதே வழியில் நடத்திட சீடர்களை அனுப்பினார். 

எனவேதான், "நீர் என்னை உலகத்தில் அனுப்பினதுபோல, நானும் அவர்களை உலகத்தில் அனுப்புகிறேன்." ( யோவான் 17 : 18 ) என்று பிதாவிடம் அவர்களுக்காக மன்றாடினார். 

இந்தப்பணி கடினமான பணி என்பதை இயேசு கிறிஸ்து அறிந்திருந்தார். வஞ்சக ஓநாய்கள் நிறைந்த உலகம் இது. நல்லவைகளை எப்போதுமே இந்த உலகம் ஏற்றுக்கொள்ளாது என்பது இயேசு கிறிஸ்துவுக்குத் தெரியும். எனவேதான் சீடர்களை இந்தப் பணிக்கு அனுப்பும்போது அவர் கூறினார், "ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடமற்றவர்களுமாய் இருங்கள். "( மத்தேயு 10 : 16 )

அன்பானவர்களே, இயேசு கிறிஸ்து கூறிய வார்த்தைகள் சீடர்களுக்கு மட்டுமல்ல, இன்று உலகினில் கிறிஸ்துவுக்கு ஏற்ற சாட்சியாக வாழமுயலும் எல்லோருக்கும் பொருந்தும். நாம் நமது சாட்சியுள்ள வாழ்க்கையால் கிறிஸ்து இயேசுவை அறிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம். அதற்காகவே கிறிஸ்து நம்மை அனுப்பியுள்ளார். எனவே, இந்த ஓநாய் குணமுள்ள மக்களிடம் நாம் பாம்பைப்போல  முன்னறிவுள்ளவர்களாகவும் புறாவைப்போல கபடம் இல்லாதவர்களாகவும் நடந்து கிறிஸ்துவை அறிவிக்கவேண்டும்.

ஆம், காடுகளில் வாழும் ஓநாய்களை சமாளிக்க நமக்குப் பாம்பைப்போன்ற  முன்னறிவு தேவை;  ஓநாய்களை நம் பக்கம் திருப்பி அவைகளை மனம் திரும்பிடச் செய்ய நமக்கு புறா போன்ற கபடமற்ற உள்ளம் தேவை. 

கிறிஸ்து நமக்குத் தந்துள்ள பணியை நாம் சிறப்பாகச் செய்திட முயல்வோம்; அதற்காக வேண்டுதல் செய்வோம். நமது தலைமை ஆயனாம் இயேசு கிறிஸ்துவும் நமக்காக ஜெபித்துள்ளார். (யோவான் 17) எனவே நாம் நமது பணியினை தயக்கமின்றி தைரியமாகத் தொடர்ந்து செய்வோம். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                                           தொடர்புக்கு- 96889 33712                

No comments: