Wednesday, September 07, 2022

சினிமா நடிகர்களுக்கு ரசிகர்கள் இருப்பதுபோல ஊழியர்களுக்கும் ரசிகர் கூட்டம்

 ஆதவன் 🖋️ 591 ⛪ செப்டம்பர் 10,  2022 சனிக்கிழமை

"என் ஜனங்கள் காணாமற்போன ஆடுகள், அவர்களுடைய மேய்ப்பர்கள் அவர்களைச் சிதறப்பண்ணி, பர்வதங்களில் அலையவிட்டார்கள்; ஒரு மலையிலிருந்து மறுமலைக்குப் போனார்கள்; தங்கள் தொழுவத்தை மறந்துவிட்டார்கள்." ( எரேமியா 50 : 6 )

கிறிஸ்துவை விட்டு ஊழியர்களை மகிமைப்படுத்தும் கூட்டம் இன்று பெருகிவிட்டது. கவர்ச்சியாக பேசும் ஊழியனின் பின்னால் ஒரு கூட்டம், பொய் ஆசீர்வாதங்களையே பேசி மக்களை மயக்கும் ஊழியனின் பின்னால் ஒரு கூட்டம், ஊழியம் எனும் பெயரால் இசை ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் மனிதனின்பின்னாலும் கிளப் டான்ஸ் போல நடனமாடும் ஊழியனின் பின்னாலும் மதிமயங்கி ஒரு கூட்டம் என  இன்று சினிமா நடிகர்களுக்கு ரசிகர்கள் இருப்பதுபோல ஊழியர்களுக்கும் ரசிகர் கூட்டம்.  

ஆம், இவர்களைத்தான் தங்கள் தொழுவத்தை மறந்த ஆடுகளாக எரேமியா காண்கின்றார்.  நமது தொழுவமும், தொழுவத்துக்கு வாசலும்  ஆயனும்  கர்த்தருமாகிய  இயேசு கிறிஸ்துதான். (யோவான் 10). ஆனால் இன்று தங்களைக் கிறிஸ்தவ  விசுவாசிகள் என்று கூறிக்கொள்ளும் பலர் கிறிஸ்துவைவிட இந்த ஊழியர்களை அன்புசெய்பவர்களாக இருக்கின்றனர்.  இந்த ஊழியர் அடிமை விசுவாசிகள் பதிவிடும் முகநூல் பதிவுகள், வாட்ஸப் செய்தி பகிர்வுகள் இவர்கள் குறிப்பிட்ட  ஊழியர்களின் விசிறிகள் என்பதை  வெளிக்காட்டுகின்றனவே தவிர இவர்கள் கிறிஸ்துவை அறிந்தவர்கள் என்பதைப் பிரதிபலிப்பதில்லை. தாங்கள் துதிபாடும்  இந்த ஊழியர்கள் பேசுவதும் செய்வதும் வேதத்துக்கு ஏற்புடைவைதானா என்று கூட இந்த விசிறிகள் பார்ப்பதில்லை.    

இந்த என் ஜனங்கள் காணாமற்போன ஆடுகள், அவர்களுடைய மேய்ப்பர்கள் அவர்களைச் சிதறப்பண்ணி, பர்வதங்களில் அலையவிட்டார்கள்; ஒரு மலையிலிருந்து மறுமலைக்குப் போனார்கள் என்கின்றார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. ஆம், இவர்கள் கிறிஸ்துவைவிட்டுக் காணாமல் போய்விட்டார்கள். இவர்களுக்கு உபதேசங்கள், போதனைகள் இவற்றை கிறிஸ்துவின் ஆவியானவர் கொடுக்கவில்லை. மாறாக இவர்கள் அடிமைகளாக இருக்கும் பிரபல ஊழியர்கள் தான் கொடுக்கின்றனர். அவர்கள்தான் இவர்களை வழி நடத்துகின்றனர். கிறிஸ்துவுக்கும் இவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. 

இப்படி அடிமைகளாக இருக்கும் இந்த விசுவாசிகள் ஏதோ குறிப்பிட்ட ஒரு சம்பவத்தில் இவர்கள் நம்பிப்  பின்பற்றும் ஊழியர் பெரிய தவறு செய்யும்போது மனம் வேதனைப்பட்டு மற்றுமொரு பிரபல ஊழியனின் அடிமைகளாக மாறுகின்றனர். ஆம், அவர்கள் இன்றைய வசனம் கூறுவதுபோல மேய்ச்சலைத் தேடி , ஒரு மலையிலிருந்து மறுமலைக்குப் போகிறார்கள். ஆனாலும் இறுதிவரை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குத் தங்களை ஒப்புவித்து அவரது வழிநடத்துதலுக்குள் வரத் தயங்குகிறார்கள். காரணம் கிறிஸ்துவின் மெய்யான உபதேசம் இவர்களுக்குக் கசக்கிறது; இவர்களது வாழ்க்கையின் அலங்கோலங்களை வெளிப்படுத்தி அவர்களது இருதயத்தைக் குத்துகின்றது. 

அன்பானவர்களே, குறிப்பிட்ட ஊழியர்களுக்கு அடிமை எனும் நிலையிலிருந்து வெளிவரும்போது மட்டுமே கிறிஸ்துவின் அன்பையும் வழிகாட்டுதலையும் ருசிக்க முடியும்; அப்போது மட்டுமே பாவத்திலிருந்து விடுதலையையும், பாவத்தை மேற்கொள்ளும் வல்லமையையும் பெற முடியும். 

தொழுவத்தை மறந்த ஆடுகளாய் ஒரு மலையிலிருந்து மறு மலைக்கு அலைந்துதிரியும் அவல  நிலையிலிருந்து விடுபட்டு பிரதான மேய்ப்பனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தொழுவத்துக்கு வந்து சேரும்போதே நாம் அவரால் அறிந்துகொள்ளப்பட்டவர்கள் ஆவோம்.  

"அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது."( யோவான் 10 : 4 ) என்று இயேசு கிறிஸ்து கூறிய இந்த வார்த்தைகள் வெறும் வசனமல்ல, ஆவிக்குரிய மேலான அனுபவம். ஆடுகள் தொழுவத்துக்குள் வரும்போது மட்டுமே இந்த அனுபவத்தைப் பெற முடியும். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                                           தொடர்புக்கு- 96889 33712                                                

No comments: