Saturday, September 17, 2022

முழு இருதயத்தோடு கர்த்தர்மேல் நம்பிக்கையாய் இருப்போம்

 ஆதவன் 🖋️ 600 ⛪ செப்டம்பர் 19,  2022 திங்கள்கிழமை   

"உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்." ( நீதிமொழிகள் 3 : 5, 6 )

மனிதர்கள் அனைவருக்கும் தேவன் புத்தியைக் கொடுத்துள்ளார். அந்தப் புத்தி நாம் உலகினில் அறிவுபூர்வமாக வாழ்வதற்கும், செயல்படுவதற்குமே தவிர அதனையே நம்பி வாழ்வதற்கல்ல. நமது முழு நம்பிக்கையும் கர்த்தரைச் சார்ந்தே இருக்கவேண்டும் என்கின்றது இன்றைய வசனம். நமது மனத்தின்படி முடிவுகள் எடுக்கும்போது அதனை தேவனுக்குத் தெரியப்படுத்தி அவரது சித்தத்தை அறிந்து செயல்படுவதே சிறந்தது.

இன்று உலக அறிஞர்களும் சாதாரண மக்களும் பெரும்பாலும் கர்த்தரை மறந்து தங்களது புத்தி சொல்வதன்படியே வாழ்கின்றனர். இதுவே பெரும்பாலும் பிரச்சனைகளுக்குக் காரணமாக அமைந்துவிடுகின்றது. 

ஆதாம் ஏவாள் இப்படித்தான் பாவத்தில் வீழ்ந்தார்கள். அவர்கள் தேவனது வார்த்தைகளை மறந்து தங்கள் சொந்த புத்தியின்படி செயல்பட்டனர். வீழ்ச்சியடைந்தனர். சுய புத்தியில் நடக்கும் பாதை பெரும்பாலும் சரியாக அமைவதில்லை. உலக மக்களுக்கு ஒருவேளை அவை வெற்றி வாழ்க்கைபோலத் தெரியலாம். ஆனால், நமது ஆவிக்குரிய வாழ்வானது சுய புத்தியின்படி நடக்கும்போது தோல்வியையேத்  தரும். 

மேலும் சுய புத்தியால் வெற்றிபெறும்போது நம்மை அறியாமல்  கடவுளை நாம் இரண்டாம் இடத்துக்குத் தள்ளுகின்றோம். "என்னால் தான்" அல்லது, "என் கடின உழைப்பால்தால்" நான் வெற்றிபெற்றேன் எனும் பெருமை மனிதர்களுக்குள் வந்து விடும். மட்டுமல்ல, மற்றவர்களை அற்பமாக் எண்ணும்  மனநிலையும் ஏற்பட்டுவிடும். "உன் ஞானமும் உன் அறிவுமே உன்னைக் கெடுத்தது; நான்தான், என்னைத் தவிர ஒருவருமில்லையென்று உன் இருதயத்தில் எண்ணினாய்."  ( ஏசாயா 47 : 10 ) என்று ஏசாயா பாபிலோனைப்பார்த்துக் கூறுவதுபோல ஞானமும் அறிவுமே நம்மைக் கெடுத்துவிடும். 

நன்றாக படிக்கக்கூடிய பல மாணவர்கள், நல்ல மதிப்பெண் பெற்று நல்ல கல்லூரிகளில் இடம் பிடித்து, படித்து பட்டம்பெற்று, வேலையும் கிடைத்தபின்பும் அவர்களது வாழ்க்கை நன்றாக அமையாத சூழ்நிலையினை பல சாட்சிகள் மூலம் கேட்டுள்ளேன். "நன்றாகக் படிப்பான் பிரதர், பல்கலைக்கழகத்தில்  முதலிடம் (University Rank) பெற்றான்  ஆனால் அவன் வாழ்க்கை இப்படி நாசமாகி விட்டது" என்று ஒருமுறை ஒரு அம்மா அழுதார்கள். 

அன்பானவர்களே, பிறரைவிட நமக்கு அறிவும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய சக்தியும் இருக்கலாம். ஆனால் அது மட்டுமே நமது வாழ்க்கையினை சிறப்பாக மாறிட மாட்டாது. எந்தச் சூழ்நிலையிலும் நமது இருதயம் கர்த்தரைவிட்டு பின்வாங்கிடாமல் காத்துக்கொள்வோம். அவரே நமக்கு அறிவையும் ஞானத்தையும் தருகின்றவர். 

எந்த வேலையில் இருந்தாலும், எவ்வளவு சம்பாதித்தாலும் கர்த்தரே நமது நம்பிக்கையாக இருக்கவேண்டும். நமது முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, நமது செயல்பாடுகளையும் அவருக்கு ஏற்றதாக மாற்றி அவரையே வாழ்வில் நினைத்துக்கொள்ளும்போது அவர் நமது பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.

அப்போஸ்தலரான பவுல் கர்த்தரோடு இணைந்து அவரது சித்தத்துக்கு ஒப்புக்கொடுத்து ஊழியம் செய்ததால் தனது  ஊழியத்தில் சுய சித்தத்துக்கு இடமளிக்கவில்லை.  அவரைக் கர்த்தரே ஊழியத்தில் வழி நடத்தினார். அவர்களது சுய சித்தத்தைத் தேவனே தடைப்பண்ணி தேவ சித்தம் செய்யச் செய்தார். 

"அவர்கள் பிரிகியா கலாத்தியா நாடுகளைக் கடந்துபோனபோது, ஆசியாவிலே வசனத்தைச் சொல்லாதபடிக்குப் பரிசுத்த ஆவியினாலே தடைபண்ணப்பட்டு, மீசியா தேசமட்டும் வந்து, பித்தினியா நாட்டுக்குப்போகப்பிரயத்தனம் பண்ணினார்கள்; ஆவியானவரோ    அவர்களைப்                        போகவொட்டாதிருந்தார். ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 16 : 6, 7 )

ஆம் அன்பானவர்களே நமது முழு இருதயத்தோடு கர்த்தர்மேல் நம்பிக்கையாய் இருப்போம்;  அவரையே நினைத்துக்கொள்வோம், அவர் நமது பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.  

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                                           தொடர்புக்கு- 96889 33712                           

No comments: