ஆதவன் 🖋️ 584 ⛪ செப்டம்பர் 03, 2022 சனிக்கிழமை
"ஆகையால் கர்த்தர் அவனோடிருந்தார்; அவன் போகிற இடம் எங்கும் அவனுக்கு அனுகூலமாயிற்று" ( 2 இராஜாக்கள் 18 : 7 )
இன்றைய வசனம் எசேக்கியா ராஜாவைபற்றிக் கூறுகின்றது. கர்த்தர் அவரோடு இருந்ததால் அவர் போகுமிடமெல்லாம் அவருக்கு வெற்றியாயிற்று. இந்த எசேக்கியா "ராஜாவாகிறபோது, இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே இருபத்தொன்பது வருஷம் அரசாண்டான்" ( 2 இராஜாக்கள் 18 : 2 ) ஆம் இருபத்தைந்து வயதிலேயே எசேக்கியா கர்த்தரை அறிந்து அவருக்கு ஏற்புடையவராய் வாழத் தன்னை ஒப்புக்கொடுத்திருந்தார்.
யூதாவின் பல ராஜாக்களும் கார்த்தரைவிட்டு பின்மாறிப்போன காலத்தில் எசேக்கியா மட்டும் கர்த்தருக்கு உண்மையானவராக வாழ்ந்தார். "அவன் கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் அவரைச் சார்ந்திருந்து, கர்த்தர் மோசேக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு நடந்தான்." ( 2 இராஜாக்கள் 18 : 6 ) என்று வாசிக்கின்றோம்.
அன்பானவர்களே, பழைய ஏற்பாட்டுக்கால மக்கள் தேவனை அச்சத்துக்குரியவராகவே பார்த்து வந்தனர். அந்தக்காலகட்டத்திலேயே தாவீது, எசேக்கியா போன்றவர்கள் கர்த்தரிடம் அன்புகொண்டு வாழ்ந்தார்களானால் இன்று கிறிஸ்துவின் அன்பை ருசித்த நாம் கர்த்தர்மேல் எவ்வளவு அன்புள்ளவர்களாக வாழவேண்டும்?
இதனைத்தான் நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும், "என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்." ( யோவான் 15 : 4 ) என்று கூறினார். நாமும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு இருந்ததால் நாம் போகுமிடமெல்லாம் நமது ஆவிக்குரிய வாழ்வு நமக்கு வெற்றியாகும்.
மேலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு இணைந்து அவருக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும்போது நமது ஜெபங்களையும் அவர் கனிவுடன் கேட்டுப் பதிலளிப்பார்.
எசேக்கியாவோடு கர்த்தர் இருந்ததால் அவரது ஜெபத்தைக்கேட்டு ஏசாயா தீர்க்கதரிசி மூலம் தான் கூறிய வார்த்தைகளையே கர்த்தர் மாற்றினார். மரித்துப்போவாய் என்று முதலில் கூறியிருந்தும் தனது முடிவினை கர்த்தர் மாற்றி எசேக்கியா மேலும் பதினைந்து ஆண்டுகள் வாழ வாழ்வை நீட்டிக்கொடுத்து மகிழப்பண்ணினார்.
எசேக்கியா ஜெபித்தபோது, தான் கர்த்தருக்கு உண்மையாக இருந்ததை கர்த்தருக்கு நினைவு படுத்தினார். "ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மனஉத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணினான். எசேக்கியா மிகவும் அழுதான்." ( 2 இராஜாக்கள் 20 : 3 ) என்று கூறப்பட்டுள்ளது.
நாம் இப்படி நமது சாட்சியுள்ள வாழ்வை கர்த்தருக்கு எடுத்துக்கூறி ஜெபிக்கக்கூடியவர்களாக வாழ்வோமானால் எசேக்கியாவுக்குச் செய்ததுபோல நமக்கும் அதிசயமான நன்மைகளைச் செய்வார். ஆம், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்முள் வசிக்கும்படி இடம்கொடுக்கும்போது நாம் செயல்கள் அனைத்தையும் அவர் நமக்கு அனுகூலமாக்குவார். மட்டுமல்ல, நமது விண்ணப்பங்களும் உடனடியாகப் பதில் தருவார்.
தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு- 96889 33712
No comments:
Post a Comment