Tuesday, September 27, 2022

"நானே வழியும் சத்தியமும்"

 ஆதவன் 🖋️ 614 ⛪ அக்டோபர் 03,  2022 திங்கள்கிழமை

"இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர் சொல்லுகிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே." ( ஏசாயா 48 : 17 )

நமது தேவனாகிய கர்த்தர் உலக செல்வ ஆசீர்வாதங்களைத் தந்து நம்மை நடத்துபவரல்ல; மாறாக, நம்மை அவர் விரும்பும் பரிசுத்தமான வழியில் நடக்க விரும்புபவர், நடத்துபவர். நான் பரிசுத்தர் எனவே நீங்களும் பரிசுத்தராய் இருங்கள் என்று கூறியவர் அப்படி நாம் பரிசுத்த வாழ்க்கை வாழ உதவி செய்பவராகவும் இருக்கின்றார்.  

கர்த்தரின் பரிசுத்தமான வழியில் நாம் நடப்பதற்கு வழிகாட்டவும் நமக்கு முன்மாதிரியாக அந்தப் பரிசுத்த வழியில் நடந்து மாதிரி காண்பிக்கவும் இயேசு கிறிஸ்து உலகத்தில் வந்தார். எனவேதான் அவர் கூறினார், " நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்." ( யோவான் 14 : 6 ) ஆம், பரிசுத்தரான பிதாவை அடைந்திட கிறிஸ்து ஒருவரே வழியும் உண்மையாய் இருக்கின்றார். 

இயேசு கிறிஸ்து உலகத்தில் இருந்த நாட்களில் தனது சீடர்களோடு இருந்து நடத்தினார். அவர் தனது மீட்புப் பணியினை நிறைவு செய்து மீண்டும் தந்தையிடம் செல்லுமுன்பாக தந்து சீடர்களை வழிநடத்தவும், தன்னை விசுவாசிப்பவர்களை பரிசுத்த வழியில் நடத்திடவும்  பரிசுத்த ஆவியனவரை வாக்களித்தார். பரிசுத்த ஆவியான "அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்."( யோவான் 16 : 8 ) என்றார் இயேசு கிறிஸ்து. 

"பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே" என்று வாக்களித்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இன்று பரிசுத்த ஆவியாக நம்முடனிருத்து நடத்துகின்றார். 

ஆனால், இன்றைய பெரும்பாலான மக்களுக்கு இயேசு கிறிஸ்து உலக ஆசீர்வாதங்களை கொடுக்கும் ஒரு தெய்வமாகவே காண்பிக்கப்படுகின்றார். அன்பானவர்களே, இந்த உலகத்தில் நடக்கக்கூடிய காரியங்களைக்கொண்டே இது தவறான எண்ணம் என்பதை நாம் உணர்ந்துகொள்ளலாம். இன்று உலக அளவில் ஆசீர்வாதங்களை பெற்றுள்ளவர்கள் கிறிஸ்துவை அறிந்தவர்களல்ல. கிறிஸ்துவை அறியாத, அவரது போதனைகளைக் கடைபிடிக்காதவர்களே இன்று பெரும் உலக பணக்காரர்களாகவுள்ளனர். இதிலிருந்தே கிறிஸ்து உலக ஆசீர்வாதங்களுக்காக வரவில்லை என்பது தெளிவு.

கிறிஸ்து இல்லாத வாழ்க்கையில் எவ்வளவு பணமோ பதவியோ இருந்தாலும் அங்கு பரிசுத்தம் இருக்காது; தேவனுக்கு  ஏற்புடைய ஒரு வாழ்க்கை இருக்காது. சமுதாயத்தில் மதிப்போடு பார்க்கப்படும் பலர் சில வேளைகளில் தவறு செய்து சட்டத்தின் பிடியில் சிக்கிக்கொள்ளும்போது அவர்களைப்பற்றி வெளிவரும் செய்திகள், "ஐயோ, இவரா இப்படியெல்லாம் வாழ்ந்தார்?' என உலகம் ஆச்சரியப்படுகின்றது. ஆனால் நாம் கிறித்துவுக்குள் இருந்தால் இந்த ஆச்சரியம் நமக்கு வராது. காரணம், கிறிஸ்து இல்லாத வாழ்க்கை இப்படித்தான் இருக்குமென்று நமக்குத் தெரியும். 

அன்பானவர்களே, பிரயோஜனமாயிருக்கிறதை நமக்குப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழியிலே நம்மை நடத்துகிற நம் தேவனாகிய கர்த்தரிடம் பரிசுத்த ஆவியானவரை வேண்டுவோம்.  அவரே நம்மை நீதியில் பாதையில் நடத்தி நித்திய ஜீவனை நாம் பெற்றிட உதவிட முடியும்.

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

No comments: