Tuesday, September 13, 2022

"எனக்குள்ளதைத் தந்துவிட்டாய், இந்த ஏழை குழந்தைகளுக்கு ஏதாவது தா"

 ஆதவன் 🖋️ 595 ⛪ செப்டம்பர் 14,  2022 புதன்கிழமை 

"நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்; அவர்களாலே தூஷிக்கப்படுகிறார்; உங்களாலே மகிமைப்படுகிறார்." (1 பேதுரு 4:14)

இன்றைய காலகட்டங்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிரானச் செயல்பாடுகளும் அவதூறானச் செய்திகளும் அதிகமாகப் பரவியுள்ளன. ஆனால் இத்தகைய செயல்பாடுகளுக்கு நாம் பதிலளிக்கவோ மற்ற உலக மனிதர்கள் செய்வதுபோல எதிர்ச்செயல் செய்யவோ வேதம் நமக்கு அறிவுறுத்தவில்லை.  

இப்படி நிந்திக்கப்படுவது நம்மை பாக்கியவானாக மாற்றுகின்றது என்கின்றது இன்றைய வசனம். அது ஏன்? எப்படி?

கிறிஸ்துவுக்கு உரிமையானவர்களாகிய நம்மேல் தேவனுடைய ஆவியானவர் குடிகொண்டுள்ளார். எனவே நம்மை ஒருவர் தூஷிப்பது, அவமானப்படுத்துவது, கேவலமாய் நடத்துவது இவை நம்மையல்ல நம்முள் இருக்கும் ஆவியானவரையே அப்படிச் செய்கின்றார்கள். இப்படி அவர்கள் நம்மை இழிவாய் நடத்தும்போது நாம் அமைதியாக இருந்தோமானால் நமது அமைதிச் செயல்பட்டு நம்மூலம் ஆவியானவர் மகிமைப்படுத்தப்படுகின்றார்.

இயேசு கிறிஸ்து துன்பங்களை சகித்தார். மட்டுமல்ல நமக்கும் அவ்வாறு சகிக்கவேண்டுமென்று அறிவுறுத்தினார். ஒரு கன்னத்தில் அறைபவனுக்கு மறுகன்னத்தையும் காட்டு என்பதே அவரது போதனை. அந்தப் போதனையின்படி வாழும்போது தேவன் மகிமைப்படுகின்றார். இப்படி வாழ்வது  சிரமமான காரியம்தான். ஆனால், நாம் அன்றாட ஜெபத்தில் தேவனிடம் பெலத்தைப் பெற்று இருப்போமானால் இந்தக்காரியத்தில் ஜெயம் பெறலாம். 

அன்னை தெரசா அவர்கள் ஒருமுறை கல்கத்தா நகரில் ஏழைகளுக்காக கடைகளில்  பணம் சேகரிக்கச் சென்றார். ஒரு கடைக்காரன் கோபத்தில் அவரது மேல் காறித்துப்பி விட்டான். அன்னை அவர்கள் சிரித்துக்கொண்டே அவனிடம், "எனக்குள்ளதைத் தந்துவிட்டாய், இந்த ஏழை குழந்தைகளுக்கு ஏதாவது தா" என்றார். இந்தச் செய்கை அவனை அழச் செய்தது. அன்னையிடம் மன்னிப்புக்கேட்டு அவர்களுக்கு உதவினான். 

ஒரு பள்ளியில் குறிப்பிட்ட ஒரு ஆசிரியருக்கு வேண்டப்படாதவர் ஒருவர் தனக்கு ஆதரவாகச் சிலரைத் தன்னுடன் சேர்த்துக்கொண்டு எப்போதும் அவரைப்பற்றி பள்ளி நிர்வாகத்துக்கு குறைகூறி மனு அனுப்பிக்கொண்டிருந்தார். அந்தப் பள்ளி நிர்வாகம் அந்த ஆசிரியரைக் கூப்பிட்டு விசாரித்து அந்தக் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று அறிந்ததால் அவர்மீது நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் அந்தக் குறிப்பிட்ட ஆசிரியர் பள்ளிக்கும் பள்ளி நிர்வாகத்துக்கும் உண்மையுள்ளவராகப்  பணியாற்றிவந்தார். 

அந்த ஆசிரியர் நல்ல எழுத்தாற்றல் உள்ளவர். அவர் ஓய்வு நேரங்களில் கதைகள், நாவல்கள் எழுதிவந்தார்.  அவர் எழுதிய நாவலுக்கு இந்திய அரசு சாகித்ய அகாடமி விருது வழங்கி கௌரவித்தது. மறுநாள் அனைத்துப் பத்திரிகைகளிலும் , வானொலி , தொலைக்காட்சிகளிலும் அவரைபற்றியும் அவர் பணிபுரியும் பள்ளி பற்றியும் செய்திகள் வெளியாயின. பள்ளி நிர்வாகத்தின் பேட்டியும் தொலைக்காட்சிகளில் வெளியாயின.  ஆம், அந்த ஆசிரியரால் அந்தப்பள்ளி மகிமை அடைந்தது. இன்னொரு செய்தி, அவர் அந்தப் பரிசு பெற்ற நாவலில் தனது பள்ளி அனுபவத்தை, தான்  நிந்திக்கப்பட்ட அனுபவத்தையே கதையாக்கியிருந்தார்.

அன்பானவர்களே, இந்த ஆசிரியரைப்போலவே நாம் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்; அந்த ஆசிரியர் அந்த நிந்தனையையே கதையாக்கி வெற்றிபெற்றதுபோல தேவன் நமக்கும்  ஜெயம் தருவார்.  ஆம், ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் நம்மேல்  தங்கியிருக்கிறார்; மற்றவர்களால் தூஷிக்கப்பட்டாலும் நம்மால் மகிமைப்படுகிறார்.

நமக்கு எதிரான நிந்தனைகளைச் சகித்து வாழ பெலன் வேண்டி ஜெபிப்போம். கர்த்தர்தாமே நம்மை ஆசீர்வதிப்பார். 

 தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                                           தொடர்புக்கு- 96889 33712                   

No comments: