Wednesday, September 28, 2022

காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள்

 ஆதவன் 🖋️ 615 ⛪ அக்டோபர் 04,  2022 செவ்வாய்க்கிழமை

"அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள் என்று சொன்னான் என்றார்." ( லுூக்கா 16 : 31 )

இன்று கடவுளைப்பற்றி பேசும்போது சிலர், "கடவுள் என ஒருவர் உண்டென்று சொன்னால்  அவர் என்னிடம் நேரில் வந்து பேசட்டும் , அப்போது நான் நம்புகின்றேன்" என்று கூறுவதுண்டு.  கடவுளுக்கு ஒவ்வொரு மனிதனிடமும் வந்து நான் இருக்கிறேன் என்று மெய்ப்பிக்க வேண்டிய தேவையில்லை. எவர்கள் தங்களைத் தாழ்த்தி உண்மையான மனதுடன் அவரைத் தேடுகிறார்களோ அவர்களுக்கு அவர் தன்னை வெளிப்படுத்துவார். 

இன்றைய தியான வசனம் இயேசு கிறிஸ்து கூறிய செல்வந்தனும் லாசரும் உவமையில் கூறப்பட்டுள்ளது. மரித்து புதைக்கப்பட்ட செல்வந்தன் பாதாளத்திலிருந்து மேலே பரலோகத்தில் ஆபிரகாமின் மடியில் இருக்கும் லாசரைப் பார்க்கின்றான். அவனுக்கும் ஆபிரகாமுக்கு நடந்த உரையாடலின் இறுதியில் அவன், லாசரை தனது சகோதரர்களிடம் அனுப்பி அவர்களை மனம்திரும்பி நல்ல வாழ்க்கை வாழவும் இந்த பாதாளத்தில் அவர்களும் வராமல் இருக்கவும் அறிவுறுத்த அனுப்புமாறு வேண்டுகின்றான். அவனுக்கு ஆபிரகாம் கூறிய பதில்தான் இன்றைய வசனம். 

எனது நண்பர் சகோதரர் சொர்ணகுமார் (இயேசு விசாரிக்கிறார் ஊழியங்கள்) அவர்கள் ஒருமுறை தான் சந்தித்து உரையாடிய ஒரு சாட்சியைப்பற்றி என்னிடம் கூறினார்கள்.

கிறிஸ்துவை அறியாத சமூகத்தில் பிறந்த ஒருவர்  நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். அவரை அவரது மத நம்பிக்கையின்படி செய்யவேண்டிய அனைத்துச் சடங்குகளும் செய்து மயானத்தில் எரியூட்டுவதற்குக் கொண்டு வந்தார்கள். அங்கும் சில சடங்குகளைச் செய்து அவரை எரிப்பதற்குக் கொண்டுசெல்லும் போது அவர் உயிர்பெற்று எழுந்துவிட்டார். அவரைத் தூக்கிச் சென்றவர்கள் பயந்து அலறி ஓடினார்கள். 

அவர் எழுந்து தனது வீட்டிற்குச் சென்றார். வீட்டிலிருந்தவர்களும் பயந்து பிசாசு என அலறினர். அவர் தான் மரித்தபின் மேலே சென்றதாகவும் அங்கு இயேசு கிறிஸ்துவைக் கண்டதாகவம் அவரே தன்னைப்பற்றி சாட்சிகொடுக்க மீண்டும் பூமியில் அனுப்பியதாகவும் கூறினார். அவர் கூறியதை அவர் சமூகத்தைச் சார்ந்த ஒருவர்கூட நம்பவில்லை.  பிசாசு என கருதி அவரை வீட்டிலேயே சேர்க்கவில்லை. அவர் அருகிலிருந்த ஊரிலிருந்த கிறிஸ்தவ ஊழியரிடம் சென்று தனது அனுபவத்தைச் சொல்லி, கிறிஸ்தவ அனுபவத்தில் வளர்ந்து ஞானஸ்நானம் பெற்று  அவரோடு இணைந்து இப்போது ஊழியம் செய்து வருகின்றார். அந்த மனிதனே மேற்படி அனுபவத்தை நேரடியாக எனது சகோதர நண்பனிடம் கூறியுள்ளார். 

ஆம் அன்பானவர்களே, வேதத்தில் கூறப்பட்டுள்ள காரியங்களை விசுவாச கண்கொண்டு பார்க்காமல் குதர்க்கம் பேசுபவர்கள் மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள். குறிப்பிட்ட ஒரு சமூகத்தை கிறிஸ்துவுக்குள் வழிநடத்த தேவன் தெரிந்துகொண்ட மேற்படி சாட்சியில் கூறப்பட்ட நபர் கூறியதை ஒருவர்கூட ஏற்றுக்கொள்ளவில்லை; மனம்திரும்பவுமில்லை. காரணம், அவர்கள் தங்களது மத நம்பிக்கையை விட்டு வெளிவர விரும்பவில்லை. 

வேத சத்தியங்கள் பலவும் விசுவாசித்து ஏற்றுக்கொள்ள வேண்டியவை. அவைகளைக்  கேள்வி கேட்டுக் கொண்டிருந்தோமானால்  நாம் உண்மையை அறியமுடியாது. இயேசு கிறிஸ்து மரித்து உயிர்த்த பின் தனது சீடர்களுக்குத் தோன்றியபோது ஒரு சீடரான தோமா அவர்களோடு இல்லை. அவர்கள் கிறிஸ்துவை நாங்கள் கண்டோம் என்று கூறியபோது தோமா நம்பவில்லை. ஆனால் அவர் மறுபடி காட்சியளித்தபோது தோமா அவரைக்கண்டு விசுவாசித்தார். அப்போது இயேசு கிறிஸ்து, "தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்." ( யோவான் 20 : 29 )

ஆம் அன்பானவர்களே, வேதத்திலுள்ள ஒவ்வொரு வார்த்தையையும் நம்பி ஏற்றுக்கொள்வோம். அப்போதுதான் நாம் மேலான வெளிப்பாடுகளை பெற்று தேவனையும் அவரது அன்பினையும் ருசிக்கமுடியும். பரலோகம், நரகம் இவை நம்பமுடியாத கட்டுக்கதைகள் என்று கூறிக்கொண்டிருப்பவர்கள் இறுதியில் ஆபிரகாமிடம் கெஞ்சிய செல்வந்தனைப்போலவே இருப்பார்கள்.

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

No comments: