தேசம் கிறிஸ்துவின் மெய்யான ஒளியைப் பெற்றுக்கொள்ள ஜெபிப்போம்

 ஆதவன் 🖋️ 599 ⛪ செப்டம்பர் 18,  2022 ஞாயிற்றுக்கிழமை  

"தேசத்துக்குடிகளோடே கர்த்தருக்கு வழக்கு இருக்கிறது; அதேனென்றால் தேசத்திலே உண்மையும் இல்லை, இரக்கமும் இல்லை; தேவனைப்பற்றிய அறிவும் இல்லை. பொய்யாணையிட்டு, பொய்சொல்லி, கொலைசெய்து, திருடி, விபசாரம்பண்ணி, மிஞ்சி மிஞ்சிப்போகிறார்கள்; இரத்தப்பழிகளோடே இரத்தப்பழிகள் சேருகிறது." ( ஓசியா 4 : 1, 2 )

இன்றைய பத்திரிக்கைச் செய்திகளைப் படிக்கும்போது தேவனது இன்றைய தியானத்துக்குரிய இந்த வார்த்தைகள்தான் நினைவில் வருகின்றது. விபச்சாரம், வேசித்தனம் அதனை மறைக்கும் நோக்கத்தில் நடக்கும் கொலைகள், பொய், களவு என தேசம் தேவனது சாபத்தைப் பெறும் நிலையில்தான் இருக்கின்றது. தமிழகத்திலேயே இப்படி எனும்போது வட இந்தியா இன்னும் அதிகப் பாவ இருள் சூழ்ந்துள்ளதாக இருக்கின்றது.  குறிப்பாக வடஇந்தியாவில் விபச்சாரமும் போதைப் பழக்கமும் அதிக அளவில் உள்ளன.

ஆனால் இன்றைய ஆசீர்வாத பிரசங்கிகள் எதனைப்பற்றியும் கவலை கொள்ளாமல், தேச ஆசீர்வாத உபவாச ஜெபம் நடத்துகின்றார்கள். விபச்சாரமும் வேசித்தனமும் நிறைந்த நாட்டுக்கு எந்த உபவாச ஜெபமும் ஆசீர்வாதத்தைக் கொண்டுவராது. அப்படி ஒரு பாவ இருளான நாட்டினை தேவன் எப்படி ஆசீர்வதிக்க முடியும்?

மனம் திரும்புதலுக்கேற்ற செய்திகள் மக்களுக்குக் கொடுக்கப்பட வேண்டுமேயல்லாமல் ஆசீவாதச் செய்தியல்ல. ஒட்டுமொத்த தேசமும் விபச்சாரத்தில், போதை பழக்கத்திலும், லஞ்சம், ஊழல், பொய், களவு , கொலைவெறி என இருக்கும்போது ஆசீர்வாதச் செய்திகள் அர்த்தமில்லாதவையே. 

கர்த்தர் சொல்கிறார், "இதினிமித்தம் தேசம் புலம்பும்; அதில் குடியிருக்கிற அனைவரோடுங்கூட மிருகஜீவன்களும் ஆகாயத்துப் பறவைகளும் தொய்ந்துபோகும்; கடலின் மச்சங்களும் வாரிக்கொள்ளப்படும்." ( ஓசியா 4 : 3 ) ஆம், தேசம் மனம் திரும்பாதபட்சத்தில் இதுதான் நடக்கும். 

அன்பானவர்களே, இதனால்தான் நாம் அனைவருமே கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்க அழைக்கப்படுகின்றோம். தேசத்துக்காக ஜெபிக்க அழைக்கப்படுகின்றோம். தேச ஆசீர்வாதத்துக்கு அல்ல; தேசம்  பாவ இருளைவிட்டு கிறிஸ்துவின் மெய்யான ஒளியைப் பெற்றுக்கொள்ள ஜெபிக்க அழைக்கப்படுகின்றோம்.

தேசத்தின் இந்தப்பாவ இருள் அகல ஜெபிக்காமல் நமது சுய ஆசீர்வாதத்துக்காகவே ஜெபித்துக்  கொண்டிருந்தோமானால்  நம்மைவிட அறிவிலிகள் கிடையாது. ஆசீர்வாத ஜெபக் கூட்டங்கள் நடத்தி காணிக்கை வசூலித்து ஆலயங்கள் கட்டுவதும், மருத்துவமனை கட்டுவதும் தேவன் காட்டும் வழியல்ல.  இருளைவிட்டு மெய்யான வழியை மக்கள் கண்டறிந்து ஒளியினிடம் வரச் செய்வதே நமது இன்றைய முக்கிய கடமை.

அன்பானவர்களே, கிறிஸ்துவின் வருகைக்குமுன் நமது தேசம் இன்றைய அலங்கோல நிலையிலிருந்து விடுபடவேண்டும். ஆளுவோர்கள் அதற்கேற்ற விதமாக நாட்டின் சட்டங்களை செயல்படுத்தவும், சட்டத்தை நிறைவேற்றும் துறைகள் உண்மையாகவும் நேர்மையாகவும் செயல்படவும் நாம் ஜெபிக்கவேண்டியது அவசியம். 

ஆசீர்வாத உபதேச ஊழியர்களை ஒதுக்கி, மனம் திரும்புதலுக்கேற்ற செய்திகளையும் வழிகளையும் காண்பிக்கும் ஊழியர்களைப் பின்பற்றி மெய்யான மனம் திரும்பிய வாழ்வு வாழ நம்மை ஒப்புக்கொடுப்போம். 

பண ஆசீர்வாதங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து வாழ்வோமானால் நாம் அழிந்துபோவது நிச்சயம். "கர்த்தருடைய உக்கிரத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களைத் தப்புவிக்கமாட்டாது; அவருடைய எரிச்சலின் அக்கினியினால் தேசமெல்லாம் அழியும்; தேசத்தின் குடிகளையெல்லாம் சடிதியாய் நிர்மூலம்பண்ணுவார்." ( செப்பனியா 1 : 18 )

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                                           தொடர்புக்கு- 96889 33712    

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்