கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்

 ஆதவன் 🖋️ 596 ⛪ செப்டம்பர் 15,  2022 வியாழக்கிழமை


"என் சிநேகத்துக்குப் பதிலாக என்னை விரோதிக்கிறார்கள், நானோ ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கிறேன்." (சங்கீதம் 109:4)

இன்றைய வசனம் நமக்கு எதிராகச்  செயல்படுபவர்களிடம் நாம் நடந்துகொள்ளவேண்டிய முறைமையைக் கூறுகின்றது. உலக மனிதர்கள் எதிராகச் செயல்படுபவர்களிடம் பழிக்குப் பழி வாங்கத் துடிக்கின்றார்கள். இன்றையப்  பத்திரிக்கைச் செய்திகளை நாம் படிக்கும்போது பல கொலைகள் வைராக்கியத்தினாலும் பழிக்குப்பழி வாங்கும் எண்ணத்தினாலும் தான் நடக்கின்றன என்பது புரியும். 

ஆனால் இங்குத் தாவீது, என்  சிநேகத்துக்குப்  பதிலாக என்னை விரோதிக்கிறார்கள் என்று கூறுகின்றார்.  ஆம், இப்படியும் சிலவேளைகளில் நமக்குச் சம்பவிக்கலாம். அதாவது நாம் நம்பி அன்புடன் பழகும் சிலர் நமக்கு விரோதமாக எழும்புவதுண்டு. இதனைத்தான் துரோகம் என்கின்றோம். இப்படிப்பட்டத் துரோகிகள் சிலரையும் நாம் வாழ்வில் சில வேளைகளில் நாம் சந்திக்கலாம். இயேசு கிறிஸ்துவைக் காட்டிக்கொடுத்த யூதாஸ் ஒரு துரோகி. இயேசு கிறிஸ்துவின் சிநேகத்துக்குப் பதிலாக அவன் அவரை விரோதித்தான். 

இப்படிப்பட்ட வேளைகளில் நாம் உலக மனிதர்களைப்போல செயல்படாமல் ஜெபிக்கவேண்டுமென்று வேதம் இங்கு அறிவுறுத்துகின்றது. தாவீது அதைத்தான் செய்கின்றார். "என் சிநேகத்துக்குப் பதிலாக என்னை விரோதிக்கிறார்கள், நானோ ஜெபம் பண்ணிக்கொண்டிருக்கிறேன்."  என்கின்றார். அப்போஸ்தலராகிய பவுல் அடிகளும், "நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்." ( பிலிப்பியர் 4 : 6 ) என்கின்றார். 

எதற்கும் கவலைப்படாமல் ஸ்தோத்திரத்தோடு எல்லாவற்றையும் தேவனுக்குத் தெரியப்படுத்தும்போது கர்த்தரே நமக்காக யுத்தம் செய்வார். நாம் நினைப்பதற்கு அப்பாற்பட்ட மரண அடி துரோகிகளுக்கு கிடைக்கும். அல்லது அவர்களை நமக்கு நண்பர்களாக மாற்றுவார். 

எனக்குத் தெரிந்த உண்மையுள்ள ஒரு பாஸ்டர் மிகவும் சிரமப்பட்டு ஒரு நான்கு சென்ட் நிலம் வாங்கியிருந்தார். அவருக்கு ஆண்  பிள்ளைகள் கிடையாது. அந்த ஊரிலிருந்த ஒரு ரௌடி அவரது அந்த நிலத்தை ஆக்கிரமித்து எல்லைக் கல்லை மாற்றி நாட்டி நிலத்தின் ஒருபகுதியை தனக்குரியதாக மாற்றிவிட்டான். அவனோடு சண்டைபோட பாஸ்டரால் முடியவில்லை. அன்று இரவு அவர், "ஆண்டவரே நீர் எனக்கு ஆண் பிள்ளையைத் தரவில்லை. எனது சிறிய வருமானத்தில் குருவி சேகரிப்பதுபோல பணம் சேர்த்து இந்த நிலத்தை வாங்கினேன். இன்று அதுவும் எனக்கு இல்லாமல் போய்விட்டதே. என்னால் அவனோடு சண்டைபோடவும் முடியாது. நீரே எனக்கு உதவும்" என்று  கண்ணீரோடு ஜெபித்தார். 

மறுநாள் காலை ஐந்து ஐந்தரை மணிக்கு அந்த ஊரிலிருந்து ஒருவர் பாஸ்டரிடம் வந்து, "ஐயா, உங்க நிலத்தை அபகரித்த அந்த ரௌடி இரவு ஹார்ட் அட்டாக் வந்து இறந்துவிட்டான்" என்றார். இந்தச் சம்பவத்தை என்னிடம் கூறிய அந்த பாஸ்டர் சொன்னார், "உண்மையில் நான் அவனுக்காக வருந்துகிறேன். அவன் சாகவேண்டுமென்று நான் எண்ணவில்லை; அப்படி ஜெபிக்கவும் இல்லை. அவனை நினைத்தால் மனதுக்கு சங்கடமாக இருக்கிறது. ஏன் ஆண்டவரே அவனுக்கு இப்படி ஒரு தண்டனையைக் கொடுத்தீர்? என்றுதான் நான் ஆண்டவரிடம் வருந்தி மன்றாடுகிறேன்" என்றார்.  ஆம், அன்பானவர்களே, எல்லாவற்றையும் ஜெப விண்ணப்பங்கள் மூலம் தேவனுக்குத் தெரியப்படுத்துவோம். அவரே எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்.

"கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள்." ( யாத்திராகமம் 14 : 14 )   

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                                           தொடர்புக்கு- 96889 33712         

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்