இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Friday, September 23, 2022

கிறிஸ்துவுக்கு விருப்பமில்லாத செயல்களை நம்மைவிட்டு அகற்றுவோம்.

 ஆதவன் 🖋️ 609 ⛪ செப்டம்பர் 28,  2022 புதன்கிழமை

"பத்துநாள் சென்றபின்பு, ராஜபோஜனத்தைப் புசித்த எல்லா வாலிபரைப்பார்க்கிலும் அவர்கள் முகம் களையுள்ளதாயும், சரீரம் புஷ்டியுள்ளதாயும் காணப்பட்டது." ( தானியேல் 1 : 15 )

உலகத்தால் கறைபடாதபடித் தங்களைக் காத்துக்கொண்ட  தானியேல் மற்றும் அவரது நண்பர்களான சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைக்குறித்து சொல்லப்பட்ட வசனம்தான் இன்றைய தியானத்துக்குரியது. 

பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் எருசலேமைக் கைப்பற்றி அங்குள்ள மக்களைக் கைதியாக பாபிலோனுக்குக் கொண்டுசென்றான். அப்படிக் கொண்டுபோகப்பட்டவர்களுள்  தானியேலும் அவரது நண்பர்களும்  இருந்தனர். ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் கைதியாகக் கொண்டுபோகப்பட்ட மனிதர்களில் அழகும், கல்வியும், ஞானமும் உள்ளவர்களைத் தனது அரண்மனையில் பணியில் அமர்த்த விரும்பி, அத்தகைய வாலிபர்களைக் கண்டுபிடிக்க  தனது பிரதானிகளுக்குக் கட்டளைக் கொடுத்தான்.  அவர்கள் தானியேலையும் அவரது நண்பர்களான சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களயும் சிறந்தவர்களாக கண்டறிந்து அரசனின் முன்பாக நிறுத்தினர். 

"ராஜா, தான் உண்ணும் போஜனத்திலேயும் தான் குடிக்கும் திராட்சரசத்திலேயும் தினம் ஒரு பங்கை அவர்களுக்கு நியமித்து, அவர்களை மூன்றுவருஷம் வளர்க்கவும், அதின் முடிவிலே அவர்கள் ராஜாவுக்கு முன்பாக நிற்கும்படிசெய்யவும் கட்டளையிட்டான்." ( தானியேல் 1 : 5 ) ஆனால் தானியேலும் அவரது நண்பர்களும் ராஜ உணவினை தங்களைப் பராமரித்தவனிடம் , "எங்களுக்கு வெறும் பருப்பும் காய்கறிகளும் போதும்; ராஜ உணவு வேண்டாம் என்று மறுத்துவிட்டனர். 

பராமரிப்பாளன், "அப்படியல்ல, ராஜா உங்களைப் பார்க்கும்போது நீங்கள் மற்றவர்களைவிட முகம் வாடிப்போனவர்களாக கண்டால் எனக்குத்தான்  தண்டனைத்தருவான்" என்றான். அப்போது தானியேல், பத்துநாள் எங்களுக்கு நாங்கள் கேட்பதுபோல  வெறும் பருப்பும் காய்கறிகளும் தந்து எங்களைச் சோதித்துப் பாரும்." என்று கூற, அவன் சம்மதித்து அவர்கள் கேட்ட உணவைக்கொடுத்துவந்தான்.  "பத்துநாள் சென்றபின்பு, ராஜபோஜனத்தைப் புசித்த எல்லா வாலிபரைப்பார்க்கிலும் அவர்கள் முகம் களையுள்ளதாயும், சரீரம் புஷ்டியுள்ளதாயும் காணப்பட்டது." ( தானியேல் 1 : 15 )

அன்பானவர்களே, இன்று இதுபோல வாழவே நாம் அழைக்கப்படுகின்றோம். உலக ஆசை இச்சைகளை மறுத்து, கிறிஸ்துவுக்காக வாழும் வாழ்வையே தேவன் விரும்புகின்றார். இறைச்சி, திராட்சைரசம் என ராஜபோஜனத்தைப் புசித்த எல்லா வாலிபரைப்பார்க்கிலும் தானியேல் மற்றும் அவரின் நண்பர்களது முகம் களையுள்ளதாயும், சரீரம் புஷ்டியுள்ளதாயும் காணப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. இதுபோலவே ஆவிக்குரிய வாழ்க்கை வாழும் நமக்கு ஒருவேளை மற்றவர்களைப்போல சிறப்பான உலக செல்வங்கள் இல்லாமலிருக்கலாம். ஆனால்,  ராஜ உணவு உண்டவர்களைவிட  எக்காரணம்கொண்டும் நாம் தாழ்ந்துபோகமாட்டோம். 

தானியேலையும் அவரது நண்பர்களையும் சோதிக்க பத்துநாட்கள் குறிக்கப்பட்டதுபோல நமக்கும் தேவன் ஒரு குறிப்பிட்ட நாளை நியமித்திருப்பார். தேவன் குறித்த அந்த நாட்கள் நிறைவேறும்போது மற்றவர்களிலிருந்து நாம் வேறுபட்டு உயர்த்திருப்பதை இந்த உலகம் கண்டு அதிசயிக்கும்.  கிறிஸ்துவுக்கு விருப்பமில்லாத செயல்களை நம்மைவிட்டு அகற்றுவோம். கர்த்தர்தாமே நம்மை ஆசீர்வதிப்பார். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                                           தொடர்புக்கு- 96889 33712    

No comments: